அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?
Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக செய்திகளில் கேள்விப்படுகிறோம். குறைந்த ரத்த அழுத்தம் என்பது உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தான பிரச்னையா... எந்த அளவு வரை குறைந்தால் எச்சரிக்கையாக வேண்டும்... அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்... குறைந்த ரத்த அழுத்தம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

நடிகர் ராஜேஷின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும். யூகங்களின் அடிப்படையில் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
பொதுவாக, 90/60 mm Hg -க்கும் குறைவாக ரத்த அழுத்தம் இருந்தால் அது குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்று கருதப்படுகிறது. மருத்துவ மொழியில் இதை 'ஹைப்போடென்ஷன்' (Hypotension ) என்று குறிப்பிடுகிறோம்.
சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். 100/60, 110/60 என இருந்தாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில், அது பயப்பட வேண்டிய நிலையல்ல. ஆனால், 90/60 mm Hg-க்கும் குறைவாகப் போகும்போது அந்த நபருக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கப்படும்.
குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு மிக அதிகமாக இருப்பது அல்லது மிகக் குறைவாக இருப்பது, நெஞ்சுலி, குழப்பம், அதீத களைப்பு, இதயத்துடிப்பில் அடிக்கடி பிரச்னை (Arrhythmias) போன்றவை ஏற்படலாம்.
குறை ரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதயம் தொடர்பான பிரச்னைகளோ, கிட்னி பிரச்னைகளோட இருந்தால் குறை ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம்.

ரத்தச்சோகை எனப்படும் அனீமியா பாதிப்பிலும் இப்படி வரலாம். தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும் சாதாரண காரணத்தாலும் ஏற்படலாம்.
உடற்பயிற்சி செய்துவிட்டு நிறைய வியர்வை வெளியேறிய பிறகு தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறையலாம்.
நரம்பு மண்டலச் செயல்பாட்டில் ஏற்படுகிற பிரச்னை (Autonomic dysfunction) காரணமாகவும் சிலருக்கு ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையலாம்.
ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும் சில ரிசப்டார்ஸ் (Receptors) சரியாக வேலை செய்யாததாலும் ரத்த அழுத்தம் குறையலாம். ஏதேனும் பிரச்னைகளுக்காக எடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவாலும் குறையலாம். எனவே, பொதுவாக ஒரு நபர் லோ பிளட் பிரஷர் பிரச்னையோடு வந்தால், முதலில் அவர்களது பிபி அளவை சரிபார்ப்போம். அறிகுறிகளைக் கேட்போம். அவற்றை வைத்து ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ என தேவைப்படும் டெஸ்ட்டுகளை பரிந்துரைப்போம்.
ஹைப்போடென்ஷனில் 'ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன்' (Orthostatic hypotension) என்றொரு வகை இருக்கிறது. இதில் படுத்திருந்த நிலையில் இருந்து உட்காரும்போதும், உட்கார்ந்த நிலையில் இருந்து நிற்கும்போதும் ரத்த அழுத்தம் குறையும். பிபி அளவைக் குறிப்பிடும்போது மேலுள்ள எண்ணை சிஸ்டாலிக் பிளட் பிரஷர் (Systolic blood pressure) என்றும், கீழுள்ள எண்ணை டயஸ்டாலிக் பிளட் பிரஷர் (Diastolic blood pressure) என்றும் சொல்வோம்.
இதில் சிஸ்டாலிக் பிளட் பிரஷரானது 20 பாயின்ட்டுகளாகவும், கீழுள்ள டயஸ்டாலிக் பிளட் பிரஷரானது 10 பாயின்ட்டுகளாகவும் குறைந்திருந்தால், அதை ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்போடென்ஷன் என்று சொல்வோம்.
டீஹைட்ரேஷன், இதயநல பாதிப்பு, கர்ப்பம், மருந்துகளின் பின் விளைவு என பல காரணங்களால் வரும். சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இதையும் மருத்துவர்கள் செக் செய்வார்கள்.

பொதுவாக வயதானவர்களிடம் இந்தப் பிரச்னை வரும்போது சற்று எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இளவயதினரிடம், குறிப்பாக பெண்களில் சிலருக்கு லோ பிளட் பிரஷர் இருக்கலாம். அவர்கள் ஆக்டிவ்வாக இருக்கும்போது அது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
அவர்களும் பிபி அளவு 90/60 mm Hg -க்கும் குறைவாகப் போகும்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகள் இல்லாதவரை, இளவயதினருக்கு மருத்துவர்கள் எந்தச் சிகிச்சையையும் பரிந்துரைக்க மாட்டோம். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்துவோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.