Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்?
Doctor Vikatan: மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களை பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி மருத்துவர்களும் டயட்டீஷியன்களும் அறிவுறுத்துவது ஏன், பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக உடல்எடை அதிகரிக்கும். அதே சமயம், அந்த நாள்களில் பெண்களுக்கு அதிக அளவு புரதச்சத்து தேவைப்படும். அதற்கு பொட்டுக்கடலை சிறந்த சாய்ஸ். எண்ணெய் இல்லாமல் வறுத்தது என்பதால் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. பொட்டுக்கடலை என்பது எளிதில் செரிமானமாகக்கூடிய ஓர் உணவு. காரணம், அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து.
மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் தினமும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சாப்பிடலாம். பொட்டுக்கடலையில் உள்ள புரதமானது, புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். மெனோபாஸுக்கு பிறகு புற்றுநோய் தாக்கும் ரிஸ்க் அதிகரிப்பதால், பெண்கள் இதைத் தவறாமல் பின்பற்றலாம். மெனோபாஸ் காலத்தில் பல பெண்களுக்கும் ப்ளீடிங் சற்று அதிகமிருக்கும். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள், பீரியட்ஸின்போது தினமும் காலையில் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால், ப்ளீடிங்கின் அளவு குறையும்.
100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் பொட்டுக்கடலையில் 21 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதற்கும் அதே அளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. வேர்க்கடலையில் இருப்பதைவிட பாதி அளவு கொழுப்புச்சத்துதான் பொட்டுக்கடலையில் இருக்கிறது. எனவே, ஒப்பீட்டளவில் ஆரோக்கியத்திலும் வேர்க்கடலையைவிட பொட்டுக்கடலை சிறந்தது.

வேர்க்கடலை சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுவலி வரலாம். பொட்டுக்கடலையில் அந்தப் பிரச்னையும் இல்லை. பருப்பு வைத்து சாம்பார் செய்யும்போது சிலருக்கு வாயுத் தொந்தரவு வரலாம். அவர்கள், பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையை மிக்சியில் பொடித்து சாம்பாருக்குப் பயன்படுத்தலாம்.
இதைச் செய்வதும் சுலபம், செரிமானத்துக்கும் நல்லது. மெனோபாஸ் காலத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைக்கச் சொல்வோம். இயல்பாகவே அந்த நாள்களில் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னை வரலாம். அதைத் தவிர்க்க, பொட்டுக்கடலை சட்னி, பொட்டுக்கடலை சாம்பார் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.