`Donke Route' என்றால் என்ன? - சட்டவிரோத குடியேற்றமும் ஆபத்தான பயணமும்! | Explained
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், 'அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தப்படுவார்கள்' என அறிவித்தார். அதன் அடிப்படையில், சி17 என்ற அமெரிக்காவின் போர் விமானத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த 33 பேர், குஜராத்தைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாபைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர், சண்டிகரைச் சேர்ந்த 2 பேர் என 104 பேர் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கினர். இவர்களில் 19 பெண்கள், 13 சிறுவர்கள் இருந்தனர்.
![டொனால்டு ட்ரம்ப்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-02/2xbi9uyt/vnuqvdkdonald-trump625x30030January25.jpg)
இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், `ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகள் இப்படித்தான் இந்தியாவுக்கு அனுப்பபடுகிறார்கள்' எனப் புள்ளிவிவரத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்தியாவிலிருந்து விமானத்தில் அமெரிக்கா செல்வதற்கு 22 மணி நேரம் முதல் 38 மணி நேரம் வரை ஆகும் என்ற சூழலில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா சென்றது ஏன் என்றக் கேள்வி எழுகிறது.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தப் பிறகு, நாட்டின் வளர்ச்சியில் ஆளும் அரசுகள் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன. அதே நேரம், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் வளர்ந்த உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி தொடர்ந்து டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதை பார்த்திருப்போம். அதனால், வளர்ந்த வல்லரசு நாடுகளின் மீதான மோகம், தொழில்நுட்ப வளர்ச்சித் தொடங்கி, பொருளாதார முன்னேற்றம், சுதந்திரம் போன்ற காரணங்களால், வளர்ந்த நாடுகள் என நம்பப்படும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் புலம்பெயர்பவர்கள் அதிகம் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கிறது. A Pew Research Center 2022-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ``அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களில் முதல் இடத்தில் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவும், இரண்டாம் இடத்தில் மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் இருக்கிறது.
அமெரிக்காவில் சட்டவிரோத இந்தியர்களின் எண்ணிக்கை 7,25,000." எனக் குறிப்பிடுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இத்தனை லட்சம் மக்கள், சுமார் 13,000 கிலோமீட்டர் தூரத்தை சட்டவிரோதமாக எப்படி கடந்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போதே பிரம்மிப்பாக இருக்கிறது.
இந்த பிரம்மிப்பை இட்டு நிரப்பும் இடத்தில் வந்து நிற்கிறது `Donke Route'.
'டங்கி' என்ற சொல், 'ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லுதல்' எனப் பொருள்படும் பஞ்சாபி மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாகக் குடியேறுவதைக் குறிக்க 'donkey flights' என்ற வார்த்தைகள் பஞ்சாப் உள்ளிட்டப் வட இந்தியப் பகுதிகளில் வழக்கத்தில் இருக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காச் செல்ல வேண்டும் என விரும்பும் நடுத்தரக் குடும்பத்தினர், முறைப்படி விசா பெறமுடியாமலோ, அல்லது விசா பெற்றதாக ஏமாற்றப்பட்டோ சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல தயாராகிறார்கள்.
2000-ம் ஆண்டு பார்த்திபன், முரளி நடிப்பில் வெளியான 'வெற்றிக் கொடுக்கட்டு' படத்தில் துபாய் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறும் ஏஜெண்ட் போல, இதற்கும் ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, கப்பல் சரக்குப் பெட்டிகள், வாகனங்களில் மறைக்கப்பட்ட பெட்டிகள் மூலம் தனிநபர்களைக் நாடுவிட்டு நாடு அழைத்துச் செல்கிறார்கள். ஷெங்கான் சுற்றுலா விசா மூலம், ஐரோப்பிய ஒன்றியம் (தற்பொழுது 27 உறுப்பு நாடுகள்) செல்வதற்கான அனுமதிப் பெற்று, அந்த நாடுகளுக்குச் சென்றபிறகு போலி ஆவணங்கள் மூலம், வாகனங்களில் மறைத்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய உதவுகிறார்கள்.
அமெரிக்கா எனும் வசீகரக் கனவில் சிக்குபவர்களுக்கு புகலிடமாக இருப்பது டெல்லி என்கிறது ஆய்வறிக்கை. பஞ்சாபிலிருந்து குஜராத் வரையிலும், மேற்கு வங்காளத்திலிருந்து மகாராஷ்டிரா வரையிலும் உள்ள குடும்ப பாரத்தைத் தாங்கவேண்டிய ஆன்மாக்கள், என்ன விலை கொடுத்தேனும் பணம் கொழிக்கும் நாடாக கருதும் அமெரிக்காவில் நுழைந்துவிட வேண்டுமென டெல்லியில் கூடுகிறார்கள். இவர்களுக்கு டெல்லி ஒரு முக்கிய மையமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு, (2024) சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்ளை காவல்துறை தேடித் தேடி கைது செய்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-02/3555347c-52ae-4a8f-94b1-90664e402c7e/delhi.jpg)
பஞ்சாபில் 70 ஏஜெண்ட்கள், ஹரியானாவில் 32 ஏஜெண்ட்கள், டெல்லி 25, உத்தரபிரதேசம் 25, மேற்கு வங்கம் 17, மகாராஷ்டிரா 8, குஜராத் 7, ராஜஸ்தான் 4 எனக் கைது செய்யப்பட்ட ஏஜெண்ட்களின் பட்டியல் நீ...ள்கிறது. சட்டவிரோத குடியேற்றத்திற்கான முக்கிய போக்குவரத்து மையமாக டெல்லி உருவெடுத்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முதன்மையான காரணம் அதிக எண்ணிக்கையில் சர்வதேச விமானங்களுக்கான ஒருங்கிணைப்பு புள்ளியாக செயல்படும் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். இது நேரடியாகவோ அல்லது இணைப்பு விமானங்கள் மூலமாகவோ ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு எளிதாக பயணிக்க உதவுகிறது.
அதேபோல தலைநகரில் ஏராளமான ஏஜெண்ட்கள் வலம் வருகின்றனர். குடியேற்ற ஆலோசகர்கள், விசா ஏற்பாட்டாளர்கள் இருப்பது மற்றொரு காரணமாக இருக்கலாம். தனிநபர்களுக்கு உதவ தேவையான போலி விசாக்கள், போலி குடியேற்ற முத்திரைகள், பிற போலி ஆவணங்களை பெருமளவில் தயாரித்த 'விசா ஆய்வகங்களை டெல்லி, குஜராத்தில் காவல்துறை கண்டுபிடித்திருப்பது இந்த மோசடிகள் டெல்லியில் அதிகம் என்பதற்கு ஒருச் சான்று. டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் ஒரு பெரிய வலையமைப்பை காவல்துறை கண்டுபிடித்து அதை முறியடித்திருக்கிறது. இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவர்கள் அதிகம் இருப்பதாகவும், எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் டெல்லி, உத்தரப்பிரதேசக் காவல்துறை எச்சரித்திருக்கிறது.
ஷெங்கன் சுற்றுலா விசாவைப் பெற்றால் 26 நாடுகளுக்கு சுதந்திரமாக செல்ல முடியும். அதனால், பெரும்பாலும் டெல்லி, மும்பையிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுற்றுலா விசா மூலம், அமெரிக்காவில் நுழைய விரும்பும் சட்டவிரோத குடியேறிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு சோதனைச் சாவடிகளைக் கடந்து அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்த எல்லையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருக் கதைகளும், பின்னணியும் முகவர்களால் உருவாக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து செல்பவர்கள் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செல்வதைப் போல, மற்ற நாடுகளிலிருந்து மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள், LGBTQ+ சமூகத்தினருக்கான அங்கிகாரம் உள்ளிட்டக் காரணங்களுக்காக அமெரிக்காவுக்குப் புலம்பெயர்பவர்களும் இருப்பார்கள்.
அவர்கள் எல்லோரும் 'Donke Route' வழியாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். Donke Route என்பதே, ஈக்வடார், பொலிவியா அல்லது கயானா போன்ற லத்தீன் அமெரிக்க நாட்டை அடைந்ததிலிருந்துதான் தொடங்குகிறது. அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவுக்குள் நேரடியாக விமானம் மூலம் நுழைவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகள் புலம்பெயர்ந்தோரை உரிய ஆவணங்களை சோதித்தவுடன், அவர்கள் மீது சந்தேகம் இருந்தால் உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிடுகின்றனர். அதனால் லத்தீன் அமெரிக்காவிலிருந்து, பெரும்பாலான முகவர்கள், சட்டவிரோத குடியேறிகளை கொலம்பியாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
கொலம்பியாவிலிருந்து, கொலம்பியாவையும் பனாமாவையும் பிரிக்கும் டேரியன் கேப் எனப்படும் ஆபத்தான காடு வழியாக பனாமாவிற்குள் நுழைகிறார்கள். மத்திய அமெரிக்காவை வாழ்விடமாகக் கொண்ட சிறுத்தை இனம் ஜாகுவார், அனகொண்டா பாம்புகள் போன்ற பெரும் ஆபத்துகள் நிறைந்த இந்தக் காட்டில், சாலைகளோ, பாலங்களோ இல்லை. இதுமட்டுமில்லாமல், இந்தப் பாதை வழியாக கடந்து செல்லும்போது, வழிப்பறிக் கொள்ளை, ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றவியல் சம்பவங்களையும் சட்டவிரோதக் குடியேறிகள் எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் உறுப்புகளுக்கான மனிதக் கடத்தலும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இத்தனை ஆபத்துகளையும் கடந்து மெக்சிகோவின் தெற்கு எல்லையான குவாத்தமாலாவை அடைய, காடுகள், மலைகள் வழியாக எட்டு முதல் பத்து நாட்கள் ஆகும். சில நேரங்களில் வானிலை, அரசியல் சூழ்நிலைகள், மனித கடத்தல் கொடூரங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் முழு பயணமும் முடிவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலும்கூட ஆகலாம் என்கின்றனர். இந்தப் பயணத்தின்போது, பசி, தாகம், கடும் குளிர், விபத்துகள், மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பது போன்ற சூழல்களால் மரணங்கள் கூட ஏற்படும். அப்படி மரணிப்பவர்களை காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிவிட்டு செல்லும் வழக்கமும் இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/ec844758-ec21-49e1-90d1-74d6f9d7985c/143198_thumb.jpg)
2023-ம் ஆண்டு Donke Route பயணத்தின் போது அமெரிக்க எல்லையில் காவல்துறையிடம் சிக்கி இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஹரியானா மாநிலத்தின் ஜிதேந்திரா, தனியார் செய்தியாளரிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில், ``Donke Route பயணம் தனித்தனியாகவெல்லாம் நடக்காது. 8 முதல் 12 பேர் சேரும் வரை காத்திருப்புப் பட்டியலில்தான் ஏஜெண்ட்கள் நம்மை வைத்திருப்பார்கள். அப்போது நாங்கள் சென்ற குழுவில் ஹரியானா, நேபாளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அமெரிக்கா செல்ல 45 லட்சம், ஜெர்மனிக்குச் செல்ல 25 லட்சம், போர்ச்சுக்கல் செல்ல 15 லட்சம் என வசூலித்தார்கள். பயணம் தொடங்குவதற்கு முன்பே உடற்பயிற்சி தொடங்கி ஆங்கிலத்தின் சில முக்கிய வார்த்தைகள் கற்றுக்கொடுப்பது வரை சில பயிற்சிகள் வழங்கப்படும்.
பேருந்து, கார், படகு, காட்டுப் பாதை, ஆறு, மலை எனப் பல்வேறு வகையில் பயணம் நடக்கும். வழிப்பறிக் கொள்ளையர்கள் எங்கள் செருப்பு முதல் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றார்கள். உண்ண வைத்திருந்த உணவுக்கூட கொள்ளையடிக்கப்பட்டது. பல நாள்கள் பசியோடு அமெரிக்கா நோக்கி பயணித்தோம். சில நேரங்களில் இரவில் கடலில் சிறிய படகில் பயணிக்க வேண்டிய சூழல்கள் கூட ஏற்பட்டது. எல்லா ஆபத்துகளைவிட உடன் இருப்பவர்களின் ஆபத்துதான் எப்போதும் அச்சத்தை அதிகரிக்கும். கூட்டமாகச் சென்றால், காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது எனக் கருதும் சிலர், தூங்கும்போது விஷப் பூச்சிகளைக் கடிக்க வைத்துக் கொலை செய்தும் விடுவார்கள். அதனால் நம்மால் நிம்மதியாக தூங்கக் கூட முடியாது" என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/51h4y8dr/Gi4ar2oW4AAN1zX.jpg)
பல்வேறு ஆபத்துகளைக் கடந்து ஒருவழியாக கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவை கடந்து மெக்சிகோவின் தெற்கு எல்லையான குவாத்தமாலாவை அடைந்தற்குப் பின்னர், அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் இருக்கும் சுரங்கப்பாதைகள் வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ வேண்டும். இந்த சுரங்கப்பாதை மெக்சிகோவில் உள்ள சியுடாட் ஜுவாரெஸ் பகுதியை டெக்சாஸில் உள்ள எல் பாசோவுடன் இணைக்கிறது. உள்ளூர் அதிகாரிகளின் ஆதரவுடனும், மெக்சிகோவில் செயல்படும் சட்டவிரோதக் கும்பல்களின் ஆதரவுடனும் சட்டவிரோத குடியேறிகள் அந்த சுரங்கத்தை பயன்படுத்த முடியும். 'யுஎஸ்ஏ டுடே' அறிக்கையின்படி, அத்தகைய சுரங்கப்பாதை 'விஐபி' சுரங்கப்பாதை எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சுரங்கப்பாதைகள் இருண்டதாகவும், குறுகலாகவும் இருக்கும். இந்த சுரங்கப்பாதையில், Rattle snake எனப்படும் விஷப்பாம்புகள், விஷப் பூச்சிகள், எலிகள், வெப்பம் போன்ற ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்த சுரங்கப்பாதை வழியாக அமெரிக்காவிற்குள் செல்வதற்கு, அங்கிருக்கும் வணிகக் குழுவுக்கு (Cartel) 6,000 டாலர் (சுமார் 5.25 லட்சம்) வரை கொடுக்க வேண்டும். அந்தப் பணம் செலுத்தியவுடன், அமெரிக்காவுக்குள் நுழையவிருக்கும் அந்த புலம்பெயர்வோருக்கு, ஒரு குறியீடு வழங்கப்படுகிறது. அந்தக் குறியீடு மூலம், மெக்சிகோவில் உள்ள பிற வணிகக் குழு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் அவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும், அவர்கள் எளிதாக அமெரிக்காவிற்குள் ஊடுருவ வழிவகை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-10-23/rxtqixt5/flight2.jpg)
பல மாதங்களாக விமானங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள், நீண்ட காடுகள், மலைகள் வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் ஒருவர் பெரும் பொருளாதாரத்தை இழக்க நேரிடுகிறது. குஜராத் காவல்துறையின் கூற்றுப்படி, தென் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை அடைய ஒருவருக்கு தலா ரூ.40 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை ஏஜெண்ட்களுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஏஜெண்ட்கள் இணைந்து இந்த வலையமைப்பில் மிகச் சாதுரியமாக இயங்கிவருகின்றனர். சிறு கிராமங்களில் தொடங்கி, சர்வதேச அளவில் பணிபுரியும் ஒரு ஒருங்கிணைந்த குழு இதற்குப் பின்னணியில் உஷாராக செயல்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர், ``அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைவிப்பதாக உறுதியளித்து ஒரு பயண முகவரால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். என்னை அமெரிக்கா அழைத்துச் செல்ல ரூ.30 லட்சம் கொடுத்திருக்கிறேன். என் பயணம் பிரேசிலில் தொடங்கியது. அங்கு ஆறு மாதங்கள் சிக்கித் தவித்தேன். அதன்பிறகுதான் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனவரி 24 அன்று அமெரிக்க எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, 11 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறேன். எங்களோடு அமெரிக்காவுக்குள் நுழைய வந்த குஜராத்தைச் சேர்ந்த மூன்றுபேர், அமெரிக்க-கனடா எல்லையில் உறைந்து இறந்தனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பெரும் ஆபத்துகளைக் கடந்து, பெரும் பொருள் செலவில் அமெரிக்காவுக்குள் செல்லும் சட்டவிரோத குடியேறிகளில் பெரும்பாலானவர்கள், கட்டிடத் தொழிலுக்கும், விவசாயக் கூலிகளாகவும், உற்பத்தித் தொழிகளிலும், சுரங்கத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிலர் கிடைக்கும் பணிகளை செய்து கொண்டு வொர்க் பெர்மிட் பெற்று பின்னர் படிப்புக்கு ஏற்ற பணிகள் செய்க்கிறார்கள். அவர்களுக்கான மருத்துவ உதவி, உரிய ஊதியம் போன்ற எந்த உத்தரவாதமும் தெளிவாக இல்லை. சட்டவிரோத குடியேறிகள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைப் போன்ற குற்றங்களில் ஈடுபட்டாலோ, அல்லது ஈடுபட்டதாக சந்தேகத்துக்குட்பட்டாலோ அவர்களுக்கு கடுமையான சிறைதண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியிருப்பவர்களை நாடுகடத்திக்கொண்டிருக்கிறார்.
தற்போது நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவர் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (36). இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ``கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் வீட்டிலிருந்து புறப்பட்டு ஜனவரி மாதம்தான் அமெரிக்காவை அடைந்தேன். ஜனவரி 24 அன்று அமெரிக்க எல்லையைத் தாண்டியபோது அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டேன். 11 நாட்கள் அங்கேயே சிறைவைக்கப்பட்டேன். பிறகுதான் எங்களைப் புறப்படக் கூறினார்கள். ஆரம்பத்தில், எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதே எங்களுக்கு தெரியாது. விமானத்தில் எங்கள் கைகள் விலங்கிடப்பட்டு, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டது. அமிர்தசரஸ் விமான நிலையத்தை அடைந்தப்பிறகே எங்கள் விலங்குகள் அகற்றப்பட்டன." என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-03/0kn0yssi/india-pakistan-border650x40071516535478.webp)
மற்றொருவரின் தந்தை, ``என் மகன் இங்குதான் (இந்தியாவில்) இருந்தான். அவன் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. விவசாயத்துக்கும் உரிய மதிப்பு இல்லை. அதனால், எங்கள் மகனாவது வாழ்வில் நிம்மதியாக இருக்க வேண்டுமென எங்களிடம் இருந்த 4 ஏக்கர் நிலத்தில், பாதியை விற்று, 40 லட்சம் கொடுத்து அவனை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்றோம். ஆனால், அந்த முகவர் சட்டப்படி விசா இருக்கிறது எனக் கூறிதான் அழைத்துச் சென்றார். ஆனால், அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். இப்போது வாழ்வதற்குக் கூட சரியான வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிவிட்டோம்" எனப் புலம்புகிறார்.
ரஷ்யா - உக்ரைன் போரின்போது கூட ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய ஏஜெண்ட்களின் பேச்சைக் கேட்டு ரஷ்ய ராணுவத்தில் அமர்த்தப்பட்ட இந்தியர்களின் சோக கதை வெளியானதை கூட நாம் மறந்திருக்கமாட்டோம்.
இத்தனையையும் தெரிந்தபின்பும் `இத்தனைக் கொடுமைகளைக் கடந்து அமெரிக்க போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?' என்றக் கேள்வி என்னை போல உங்களுக்கும் எழுந்திருக்கலாம். அதற்கான பதிலை இது வரை ஆட்சி செய்தவர்களும், ஆளும் அரசுதான் கூறமுடியும் என்பதில் மட்டும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play