HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்.சி.எல்!
நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக கருதப்படும் ஹெச்.சி.எல் நிறுவனத்தை தமிழகத்தை சேர்ந்த சிவ்நாடார் தொடங்கி நடத்தி நடத்தி வருகிறார். அவர் தனது நிறுவனத்தை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக அளவில் விரிவுபடுத்தியுள்ளார். அதோடு கல்வி நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தியாவில் அதிக அளவில் நன்கொடை வழங்கும் தொழிலதிபராக விளங்கும் சிவ்நாடார் தனது கம்பெனியின் பொறுப்புகளை கடந்த 2020-ம் ஆண்டே தனது மகளிடம் ஒப்படைத்துவிட்டார்.
2020-ம் ஆண்டே சிவ்நாடார் தனது மகள் ரோஷினி நாடாரை ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். இதன் மூலம் நாட்டின் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெயர் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுக்கு கிடைத்தது. 2021ம் ஆண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்தும் சிவ்நாடார் விலகினார்.

அப்பதவியில் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டார். தற்போது தனது கம்பெனியை முழுமையாக தனது மகளிடம் ஒப்படைக்கும் விதமாக ஹெச்.சி.எல் நிறுவனத்தில் தனக்கு இருந்த 47 சதவீத பங்குகளை தனது மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவிற்கு சிவ்நாடார் தானமாக எழுதிக்கொடுத்துவிட்டார்.
முன்னதாக ஹெச்.சி.எல். நிறுவனத்தில் சிவ்நாடாருக்கு 51 சதவீத பங்குகள் இருந்தது. இது தவிர வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் தனக்கு இருந்த 44.17 சதவீத பங்குகளையும் தனது மகள் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட்டார்.12 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று கருதி சொத்துக்களை சிவ்நாடார் தனது மகள் பெயருக்கு மாற்றி இருப்பதாக கருதப்படுகிறது.
தற்போது பங்குகள் மாற்றப்பட்டு இருப்பதன் மூலம் ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் ரோஷினியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. தற்போது ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரோஷினி நாடார், கம்பெனியின் சி.எஸ்.ஆர் போர்டு கமிட்டி தலைவராகவும், சிவ்நாடார் பவுண்டேசன் அறங்காவலராகவும் இருக்கிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play