அதிர்ஷ்ட பலன்களை அள்ளித்தரும் புதாதித்ய யோகம் - மே 14 வரை 12 ராசிகளுக்கும் என்ன ...
Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்துவர் விளக்கம்!
சமீபத்தில் நடந்த உலக நீரிழிவு மாநாட்டில் டைப் 5 நீரிழிவு கண்டறியப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளானது. இந்த நோய் முதன்முதலில் 1960-களில் காணப்பட்டது. இது J-வகை நீரிழிவு நோய் என்று குறிப்பிடப்பட்டது.
இது 1985-ல் உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்டு பின் 1998-ல் உடலியல் சான்றுகள் இல்லாததால் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில், இது டைப் 1 மற்றும் டைப் 2-ன் தவறாக கண்டறியப்பட்ட நிலை என்று நிபுணர்கள் நம்பினர். தற்போதைய ஆராய்ச்சி, டைப் 5 நீரிழிவு நோய் வேறுபட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
’உலகளவில் சுமார் 25 முதல் 30 மில்லியன் மக்கள் டைப் 5 நீரிழிவு நோயாளிகளாக இருக்கலாம்’ என்கிறார்கள் உலக அளவில் நீரிழிவுக்கான சிறப்பு மருத்துவர்கள் சிலர்.

டைப் 5 நீரிழிவு நோய் குறித்து விளக்குகிறார், சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ. ஃபரூக் அப்துல்லா.
டைப் 1 என்பது இன்சுலின் உற்பத்தி ஆகாத நிலை. இன்சுலினை உற்பத்தி செய்வது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள். ஏதாவது ஒரு கிருமித்தொற்று ஏற்படும்போது அதற்கு எதிராக நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி வேலை செய்து கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்துவிடும்.
அதனால், இன்சுலின் சுரப்பே இல்லாமல் போய்விடும். இதுதான் டைப் 1 நீரிழிவு நோய். இந்த டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் ஊசி கண்டிப்பாகப் போட்டுதான் ஆகவேண்டும். இதன் இன்னொரு பெயர் இன்சுலினை சார்ந்திருக்கும் நீரிழிவு நோய் (insulin dependent diabetes).

டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கு வரும். இவை இன்சுலின் எதிர்ப்பு வகை ஆகும். அதாவது இங்கு இன்சுலின் சுரப்பு இருக்கும். ஆனால், இன்சுலின் உற்பத்தி சரியாக நடக்காது. அதனால், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருக்கும்.
டைப் 3 நீரிழிவு நோயானது ஏதாவது ஒரு மரபணுவில் இருக்கும் மாற்றத்தினாலோ, கணைய அலர்ஜி போன்ற பிரச்னைகளாலோ ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு வருவது டைப் 4 நீரிழிவு நோய்.
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் சரியாக கிடைக்காமல் வளரும்போது, டைப் 5 நீரிழிவு நோய் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
டைப் 5 நீரிழிவு நோய் உள்ளவர்கள், உடல் எடை குறைவாகவும் மத்திய வயதினராகவும் தொப்பை இல்லாமல் ஒல்லியாக இருக்கும்போதிலும் இவர்களுக்கு இந்த நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. தொடர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால், கணையத்தின் உற்பத்தி சரியாக இல்லாததாலும் அதனால் இன்சுலின் உற்பத்தி சரியாக இல்லாமல் போகிறது.
டைப் 1 போலவே இதுவும் இன்சுலின் குறைபாடு நோய்தான். ஆனால், டைப் 1-ஐ ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகத்தான் வருகிறது என்று சொல்ல முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் வரும். ஆனால், டைப் 5 ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கே வருகிறது. மாவுச்சத்தைக்குறைத்து, புரதம் உள்ளிட்ட மற்ற சத்துக்களை அதிகப்படுத்தினால், வராமல் தடுக்கலாம்.
டைப் 5 நீரிழிவு நோயானது வளரும் நாடுகளிலேயே இருந்ததால், மேற்கத்திய நாடுகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 1985-ல் இதைக் கண்டறிந்தபோதும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஒரு நீரிழிவு நோய் வருகிறது என்பதற்குச் சரியான சான்றுகள் இல்லாததால், உலக சுகாதார நிறுவனம் 1998-ல் அதை புறந்தள்ளி விட்டது. பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இதை இப்போது கண்டறிந்துள்ளனர்.
சிறுநீரகப் பிரச்னைகள், கண் பிரச்னைகள், இதய ரத்தநாள அடைப்பு போன்ற நீரிழிவு நோயால் வரும் அனைத்தும் இதிலும் வரும்.

மாவுச்சத்து உள்ள பொருட்களைக் குறைத்துக்கொள்ளுதல், இன்சுலின் மற்றும் மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் சரி செய்யலாம்’’ என்று அ. ஃப்ரூக் அப்துல்லா கூறுகிறார்.