தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
புது தில்லி: தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை காலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நஜாப்கரில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என நான்கு பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. துவாரகா, கான்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மழை காரணமாக நஜாப்கரில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழையைத் தொடர்ந்து நஜாப்கரில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் காலை 5 மணிக்கு வீடு இடிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். . அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.