Hindenburg: 'ஆம்புலன்ஸ் டிரைவர் முதல் ஹிண்டன்பர்க் சாம்ராஜ்யம் வரை...' - யார் இந்த நேட் ஆண்டர்சன்?!
நேட் ஆண்டர்சன் - பல பெரும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு கிலியாக இருந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பின்னால் இருந்த ஒற்றை ஆள்.
ஈரோஸ், நிக்கோலா, அதானி...என மோசடி செய்யும் நிறுவனங்களின் முகத்திரையை கிழித்த, கிழிக்கும் ஹிண்டன்பர்க்கின் அறிக்கை பட்டியல் நீண்டுகொண்டிருக்க, திடீரென்று அத்தனைக்கும் எண்ட் கார்டு போட்டிருக்கிறார் ஆண்டர்சன்.
இந்தத் திடீர் முற்றுக்கு, 'மிரட்டல், உடல்நலக் கோளாறு, தனிப்பட்ட பிரச்னை என எதுவும் காரணமில்லை' என்று மறுத்திருக்கிறார் ஹிண்டன்பர்க் நிறுவனர்.
சரி...இதெல்லாம் தான் இல்லை...'ஒருவேளை நஷ்டமோ?' என்று கேட்டாலும் 'இல்லவே இல்லை'. ஹிண்டன்பர்க் நிறுவனம் கலைக்கப்படுவதாக கூறப்பட்ட நேற்று வரை ஹிண்டன்பர்க் நிறுவனம் எந்தவொரு நிதி நெருக்கடியையும் சந்திக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றன.
ஹிண்டன்பர்க் என்னும் பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய ஆண்டர்சன் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். அவரது பிறந்த தேதி தெரியவில்லை.
குடும்ப பின்புலம், நிதி பின்னணி எதுவும் இல்லாத ஆண்டர்சன், அரசு பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை படித்தார். ஆண்டர்சனின் தந்தை பல்கலைக்கழக பேராசிரியர். அவரது தாய் செவிலியர்.
இவர் தனது கல்லூரி படிப்பை சர்வதேச பிசினஸ் பாடப்பிரிவில் முடித்துள்ளார். பாடப்பிரிவிற்கு ஏற்ப, கல்லூரி காலத்தில், 'பிசினஸ் எப்படி செயல்படுகிறது...அதற்கேற்ப சந்தை எப்படி மாறுகிறது' என்று தெரிந்து, புரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால், கல்லூரி படிப்பிற்கு பின், நிதி மற்றும் நிதி ஆய்வு சம்பந்தமான சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கல்லூரி படிப்பிற்கு பிறகு, அவர் ஏற்ற முதல் நிதி சம்பந்தமான வேலை 'ஒரு நிதி தரவு நிறுவனத்தில் ஃபேக்ட் செக்கர்' வேலையாகும். அதன் பிறகு, அவர் நிதி, தரவுகள் ஆய்வு என பல துறைகளில் வேலை பார்த்தாலும், எதுவும் அவருக்கு திருப்தியை தரவில்லை. இதற்கு, அவர் 'சுவாரஸ்யமான மற்றும் சவாலான வேலையை' தேடியது முக்கிய காரணம் ஆகும்.
அமெரிக்க நிறுவனத்தில் மட்டுமல்ல...ஆண்டர்சன் இஸ்ரேலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றியுள்ளார். இந்த வேலை, 'அவருக்கு உலக அளவில் சந்தைகள் எப்படி செயல்படுகிறது' என்பதை கற்றுக்கொள்வதற்கு உதவி இருந்திருக்கிறது.
நிதி நிறுவனம்...தொழில்நுட்ப நிறுவனம் என்றதும், அவர் அந்த நிறுவனங்களில் மட்டும் நிதி ஆய்வாளர், ஃபேக்ட் செக்கர் போன்ற வேலைகளை பார்த்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தை எளிதாக தொடங்கிவிட்டார் என்று நினைக்க வேண்டாம்.
எந்த பின்னணியும் இல்லாத ஆண்டர்சன் தட்டுத்தடுமாறி தான் முன்னேறி உள்ளார். இதற்கு 2004 - 2005 காலகட்டங்களில் இஸ்ரேலில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைப் பார்த்ததே இதற்கு சாட்சி.
ஹிண்டன்பர்க் நிறுவனம் அவரது முதல் நிறுவனம் அல்ல. இதற்கு முன்பு, அவர் 2015-ம் ஆண்டு, 'கிளாரிட்டி ஸ்பிரிங்' என்னும் நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். இது ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனம் ஆகும்.
வருமானம் போதாமை உள்ளிட்ட சில பிரச்னைகளால், 2017-ம் ஆண்டு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது, ஆண்டர்சன் கையில் இருந்த தொகை 'ஜீரோ'. ஆம்...ஜீரோவில் இருந்து ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது பயணத்தைத் தொடங்கியது.
1937-ம் ஆண்டு, ஹிண்டன்பர்க் என்னும் விமானம் விபத்து நடந்ததன் நினைவாக, ஆண்டர்சன் தான் தொடங்கிய நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என்று பெயரிட்டார். சரிவை சந்திக்கப்போகும் அல்லது சரிவடைய உள்ள நிறுவனங்களை கண்டுபிடிக்கும் நிறுவனம் என்னும் சூட்சமம் இந்த நிறுவனத்தில் பெயருக்கு பின்னால் ஒளிந்திருந்தது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் அடிப்படையில் ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனம் ஆகும். இதன் மூலம், ஹிண்டன்பர்க் நிறுவனம் இதுவரை பல மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது.
இத்துடன், பெரிய நிறுவனங்கள் செய்யும் குளறுபடிகள், மோசடிகளை அம்பலப்படுத்தும் வேலையை சிறப்பாக செய்தது ஹிண்டன்பர்க் நிறுவனம்.
நிதி ஆய்வாளராக இருந்த ஆண்டர்சன், 'எப்படி மோசடி நிறுவனங்களின் விசாரணையில் இறங்கினார்?' என்பதற்கு பின்னால், ஹாரி மார்க்கோபோலோ என்பவர் இருக்கிறார். இவர் ஒரு ஆய்வாளார் ஆவார். இவர் வெளிக்கொண்டு வந்த பெர்னி மேட்ஆஃப் நிறுவனத்தின் மோசடி ஆண்டர்சனுக்கு ரோல் மாடல்.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கு சிறந்த உதாரணம், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அது வெளியிட்ட அதானி நிறுவனத்தின் மோசடி ஆய்வறிக்கை. இது அதானியின் சாம்ராஜ்யத்தையே அசைத்து பார்த்தது. அந்த ஆய்வறிக்கை வந்த உடன், அதானி குழுமத்தின் பங்குகள் சீட்டுக்கட்டைப் போல் சரிந்தது. இப்போது அது மீண்டு இருந்தாலும்...ஹிண்டன்பர்க் நிறுவனம் அதன் மீது சாட்டிய குற்றச்சாட்டை மறுத்தாலும், இன்னமும் அந்தக் குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் மீதிருந்து நீங்கவில்லை.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு அதானி குழுமம் ஒரு பதம் என்றால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஷார்ட் செல்லிங் திறமைக்கு எலான் மஸ்க் சூப்பர் டூப்பர் எடுத்துக்காட்டு.
2022-ம் ஆண்டு, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்ததையடுத்து, அவர் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை குறைக்கலாம் அல்லது ஒப்பந்தத்தையே வேண்டாம் என்று கைவிடலாம் என்று கணித்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்திடம் இருந்த ட்விட்டர் பங்குகளை விற்பதாக அறிவித்தது அந்த நிறுவனம். இதனையடுத்து, இந்தப் பங்குகள் அமோகமாக விற்று தீர்ந்தன.
இந்த அறிவிப்பு வெளியான நான்கு நாட்களிலேயே, மஸ்க் தான் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக அறிவித்தார். இதனால், ட்விட்டரின் பங்குகள் தாறுமாறாக குறைந்தது.
சட்டப்படி, மஸ்க் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடியாது என்பதை கணித்து, ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் அப்போது குறைந்திருந்த விலைக்கு, அவர்கள் முன்பு விற்றிருந்த பங்குகளை வாங்கியது. ஆக, விற்றது, வாங்கியது என இரண்டிலும் சிறப்பான லாபத்தை ஈட்டியது ஹிண்டன்பர்க் நிறுவனம்.
இந்த இரண்டு சம்பவங்களுமே, 'ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்' ரகம் ஆகும். இப்படி ஹிண்டன்பர்க் நிறுவனம் செய்யும் அனைத்து சிறப்பான செயல்களுக்கு பின்னால் இருந்த மாஸ்டர் மைண்ட் 'ஆண்டர்சன்'.
ஹிண்டன்பர்க் நிறுவனம் என்னதான் வெற்றிநடை போட்டாலும், அது ஆரம்பத்தில் நடந்தது என்னவோ முள்பாதையில். முன்னர் கூறியிருப்பதுப்போல, ஹிண்டன்பர்க் நிறுவனம் தொடங்கியபோது ஆண்டர்சன் கையில் காசு எதுவும் இல்லை. ஆனால், வழக்குகள் மட்டும் வந்து சேர்ந்தன.
இவர் நிறுவனத்தை தொடங்கிய ஆரம்பத்திலேயே மூன்று வழக்குகள் இவர் மீது பாய்ந்திருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில், அவருக்கு குழந்தை பிறந்திருந்தது.
காசு எதுவும் இல்லாத ஆண்டர்சனிடன் எதிர்பார்க்காமல் அவர் மீதிருந்த வழக்குகளில் வாதாடி, அவரை வழக்குகளில் இருந்து விடுவித்திருக்கிறார் பிரபல வழக்கறிஞர் பிரயன் வுட்.
ஆரம்பத்தில் மட்டும் தான், ஹிண்டன்பர்க் நிறுவனம் வழக்குகளை சந்தித்ததா என்றால் 'இல்லவே இல்லை'. அது வழி நெடுகிலும் வழக்குகளை சந்தித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு வழக்கில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கின்றனர் ஆண்டர்சனும், அவரது ஹிண்டன்பர்க்கும். இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மெல்ல மெல்ல ஹிண்டன்பர்க் நிறுவனம் வளர, வளர அதன் பணியாட்களும் வளர்ந்துள்ளனர். இவர்கள் அத்தனை பேரின் கூட்டு முயற்சிகள் பலனே 'ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஒவ்வொரு ஆய்வறிக்கையும்'. இந்த ஆய்வறிக்கைகளால் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களின் குற்றங்கள் வெளிவந்திருக்கின்றன...சட்டங்களும் அவர்கள் மீது பாய்ந்திருக்கின்றன.
இனி அடுத்து 'ஹிண்டன்பர்க் நிறுவனம் எப்படி செயல்பட்டது; ஒவ்வொரு ஆய்வுகளை எப்படி செய்தது; அறிக்கைகளை எப்படி தயாரித்தது?' போன்றவற்றை தொகுத்து பாடங்களாகவும், வீடியோக்களாகவும் தொகுக்க உள்ளார் ஆண்டர்சன்.
கூடுதலாக, அவருடன் ஹிண்டன்பர்க் நிறுவனத்தில் பணிப்புரிந்த அனைவரும், நல்ல இடத்தை...நிலையை அடைகிறார்களா; அவர்களுக்கு எதாவது உதவி தேவை என்பதை பார்த்து, உதவி செய்வது தனது இன்னொரு பணி என்று தனது ஃபேர்வெல் நோட்டில் குறிப்பிட்டிருக்கிறார் ஆண்டர்சன்.