கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!
Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
ராகேஷும், அவரது மகனும் காலையில் தங்களது கடைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். நேற்று வழக்கம்போல் ராகேஷும், அவரது மகனும் கடைக்கு சென்றுவிட்ட நிலையில் மாலையில் ராகேஷ் தனது மனைவிக்கு போன் செய்தார்.
ஆனால் அவரது மனைவி போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராகேஷ் சீக்கிரமே வீட்டிற்கு புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு சென்றபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பிளம்பர் உதவியோடு கதவை திறந்து பார்த்தபோது உள்ளே ரேணு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொலையாளிகள் ரேணுவின் கை, கால்களை கட்டி, தலையில் பிரஷர் குக்கரால் அடித்து, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்திருந்தனர்.
கொலையாளிகள் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், 40 கிராம் தங்கத்தையும் திருடிச்சென்றனர். அதோடு கொலையாளிகள் கொலை செய்த பிறகு அங்கேயே குளித்துவிட்டு ரத்தக்கறை படிந்த உடைகளை அங்கேயே போட்டுவிட்டு வேறு ஆடையை அணிந்துகொண்டு தப்பிச்சென்றிருந்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அகர்வால் குடும்பத்தில் வீட்டு வேலை செய்த ஹர்ஷா மற்றும் பக்கத்து வீட்டில் வேலை செய்த ரோஷன் ஆகியோரைக் காணவில்லை.
அவர்கள் இரண்டு பேரும்தான் திட்டமிட்டு இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ரேணு அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். கொலை செய்து திருடிக்கொண்டு ரோஷன் வீட்டு உரிமையாளரின் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேரும் தப்பிச்சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு பேரும் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டுத் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அவர்களது சொந்த ஊர் ராஞ்சியாகும். எனவே அவர்களைத் தேடி தனிப்படை போலீஸார் ராஞ்சி விரைந்துள்ளனர்.
ஹர்ஷா கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் அகர்வால் வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதற்குள் 14வது மாடியில் வீட்டு வேலை செய்து வந்த நபருடன் தொடர்பை ஏற்படுத்தி இருவரும் கூட்டு சேர்ந்து கொலை செய்துவிட்டு திருடிச்சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.