Indian Team: 'கடைசி வாய்ப்பில் கோலி; ஓய்வு அறிவிப்பை நோக்கி ரோஹித் சர்மா!' இருவரின் எதிர்காலம் என்ன?
பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 3-1 என தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் சோபிக்கவே இல்லை. தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததே விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். இருவரின் தலைக்கு மேலும் இப்போது கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இருவரை நோக்கியுமே எப்போது ஓய்வு பெறுவீர்கள் எனும் கேள்வி வலுவாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருவரின் எதிர்காலம்தான் என்ன?
பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது கேப்டன் ரோஹித் சர்மாதான். அவரே அவரை அணியிலிருந்து விலக்கிக் கொள்ளும் அளவுக்கு விமர்சனங்களால் துளைத்தெடுக்கப்பட்டார். ஒரு கேப்டனாக பேட்டராக என இரண்டு விதத்திலுமே சொதப்பினார். பேட்டிங்கில் தொடர்ச்சியாக மோசமான ஷாட்களை ஆடி சொற்ப ரன்களில் அவுட் ஆனார். முதல் போட்டியில் ஆடாமல் இரண்டாம் போட்டியில் அவர் அணிக்குள் வரும்போது மிடில் ஆர்டரில்தான் இறங்கினார். ஆனால், மிடில் ஆர்டர் செட் ஆகவில்லையென்றவுடன் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால், ராகுல் கூட்டணியை உடைத்து ரோஹித் மீண்டும் ஓப்பனிங் இறங்கினார். அப்போதும் பலனில்லை. வழக்கம்போல, தவறான ஷாட்களை ரொம்பவே சொதப்பினார். அதனால்தான் சிட்னி டெஸ்ட்டில் அவரே முன்வந்து பென்ச்சில் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இதை பெருந்தன்மை என கருதுவதை விட, ரோஹித் அப்படியொரு முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று கூட சொல்லலாம்.
அவுட் ஆப் பார்மில் இருக்கிறோம் என தெரிந்து வம்படியாக சிட்னியில் ரோஹித் இறங்கி அணி தோல்வியை சந்தித்திருந்தால் அவர் மீதான விமர்சனங்கள் உச்சத்தை எட்டியிருக்கும். அதைத் தவிர்க்கும் வகையிலும் கூட ரோஹித் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும். 'நான் ஓய்வுபெறுவதைப் பற்றி யோசிக்கவில்லை. இந்தப் போட்டியிலிருந்து விலகியிருக்கிறேன், அவ்வளவுதான்.' என ரோஹித் பேட்டி கொடுத்திருக்கிறார். 'அடுத்த 5-6 மாதங்களில் என்ன வேண்டும் நடக்கலாம்.' என கம்பீரும் பொடி வைத்து பேசியிருக்கிறார். எது எப்படி இருந்தாலும் ரோஹித்தின் ஓய்வு பற்றிய பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டது என்பதும் அதற்கான காலம் வந்துவிட்டது என்பதும்தான் உண்மை.
பிசிசிஐயே ரோஹித் சர்மாவிடம் அவரின் ஓய்வைப் பற்றி பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய அணி தகுதிபெறாத நிலையில், இந்தியாவின் அடுத்த டெஸ்ட் போட்டி ஜூனில் இங்கிலாந்து எதிராகத்தான். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கே 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடவிருக்கிறது. அது அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான தொடக்கமாகவும் இருக்கும். ஒருவேளை ரோஹித் அப்போதும் ஆடினால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் அவரை அணியில் வைத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அதற்கு அவருடைய பார்மும் வயதும் ஒத்துவர வேண்டும் என்பதுதான் பிரச்சனை. இப்போதே ரெட் பால் கிரிக்கெட்டில் அவருடைய ஆவரேஜ் மட்டமாகத்தான் இருக்கிறது. அதனால் ஜூனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் ரோஹித் இல்லாமல் களமிறங்கவே பிசிசிஐ விரும்பும். இந்த முடிவை கூடிய விரைவில் பிசிசிஐ ரோஹித்திடமும் சொல்லக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சொல்லப்படும்பட்சத்தில் ரோஹித்தே முன் வந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பார். பிசிசிஐ கொஞ்சம் பொறுமை காத்தால் ரோஹித்துக்கு சாம்பியன்ஸ் டிராபி மூலம் இன்னொரு வாய்ப்பும் கிடைக்கும். பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியை கேப்டனாக ரோஹித் வென்று கொடுக்கும்பட்சத்தில் அணிக்குள் அவரின் கை நிச்சயமாக ஓங்கும்.
பிசிசிஐயும் ரோஹித் விஷயத்தில் கொஞ்சம் நிதானமாகும். ரோஹித்தும் சாம்பியன்ஸ் டிராபி உட்பட அடுத்து வரும் ஐ.பி.எல் உட்பட அத்தனை போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தன்னுடைய பார்மை நிரூபிக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் மட்டுமே ரோஹித்துக்கு ரெட் பால் கிரிக்கெட்டில் இன்னொரு வாய்ப்பை வழங்குவதைப் பற்றி பிசிசிஐ யோசிக்கும்.
ரோஹித்தின் நிலையிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட நிலையில் கோலி இருக்கிறார். கோலியும் ரோஹித்தும் கிட்டத்தட்ட ஒத்த வயதுடையவர்கள்தான் எனினும் கோலி இன்னும் பிட்னஸை கடுமையாக மெயிண்டெயின் செய்து வருகிறார். இன்னும் உடல்ரீதியாக திடகாத்திரமாக இருக்கிறார். 2027 உலகக்கோப்பை வரைக்கும் கோலியால் ஆட முடியும் என்பதே அனைவரின் கணிப்பாகவும் இருக்கிறது. ஆனால், இதெல்லாம் அவரின் இப்போதைய சரிவிலிருந்து அவர் மீண்டு வந்தால் மட்டுமே நடக்கும். ஜூனில் இங்கிலாந்தில் வைத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி கட்டாயம் களமிறக்கப்படுவார். எனில், அந்தத் தொடர் அவருக்கு இமாலயச் சவாலாகவே இருக்கும். அதில் அவர் வென்று காட்ட வேண்டும்.
தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்ல வேண்டும். அப்படியில்லாமல், இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடியதைப் போலவே மந்தமாக ஆடினால் கோலியின் ரெட் பால் கிரிக்கெட் கரியர் நிச்சயமாக கேள்விக்குள்ளாக்கப்படும். அதேநேரத்தில் ஒருவேளை ரோஹித் ஓய்வுபெறும்பட்சத்தில் கோலியை மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் ஆக்கலாம் எனும் முடிவில் பிசிசிஐ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை மற்றும் சாத்தியம் என தெரியவில்லை. ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கும் கோலி கேப்டன்சி அழுத்தத்தால் இன்னும் கூடுதல் சுமையை சுமக்க நேரிடும். நீண்ட கால அடிப்படையில் அது சரியான முடிவாகவும் இருக்காது. ஒருவேளை பிசிசிஐ அதிரடியாக அப்படியொரு முடிவை எடுத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கோலியின் ரெட் பால் கிரிக்கெட்டுக்கு எந்த பங்கமும் வராது.
ரோஹித், கோலி இருவருமே அணியின் சூப்பர் சீனியர்கள். அணிக்காக பல தாக்கமிக்க இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது இருவருமே தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக ஆட வேண்டியிருக்கிறது. சவாலான கட்டம்தான். இந்த கட்டத்தை இருவரும் எப்படி தாண்டினாலும் அது பின் வரும் சந்ததியினருக்கான பாடம்தான்.