உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையொட்டி, குழந்தை கடத்தலைத் தடுப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என, சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கிற கஸ்தூரிபா பெண்கள் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மீனா மற்றும் சென்னை வடபழனியில் 30 வருடங்களாக தனியார் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் ஜெயராணி ஆகிய இருவரிடம் கேட்டோம்.

குழந்தை கடத்தல் நடக்காம தடுக்கிறதுக்கு, அம்மாவோட கையிலேயும் பிறந்த குழந்தையோட கையிலேயும் ரேடியோ ஃப்ரீக்வன்சி டேக் கட்டி விடுவோம். குழந்தையை யாராவது வெளியே தூக்கிட்டுப்போனா, அந்த டேக்ல இருக்கிற ரேடியோ ஃப்ரீக்வன்சி செயல்பட ஆரம்பிச்சிடும். அதுல இருந்து ஒருவிதமான சத்தம் வர ஆரம்பிக்கும். எல்லா சிகிச்சைகளும் முடிஞ்ச பிறகுதான், இந்த டேகை எடுத்துட்டு வெளியே அனுப்புவோம். இவை தவிர, சிசிடிவி கண்காணிப்பும் உண்டு.
The National Accreditation Board for Hospitals & Healthcare Providers (NABH) படி, குழந்தைகள் மருத்துவமனை வளாகத்துல இருந்து காணாம போயிட்டாங்கன்னு, குழந்தையோட அம்மாவோ அல்லது சொந்தக்காரங்களோ எங்ககிட்ட புகார் சொன்னவுடனே Code Pink-ஐ ஆக்டிவேட் பண்ணிடுவோம். Code Pink-னா ஹாஸ்பிடல்ல இருந்து ஒரு குழந்தை காணாம போச்சுன்னு அர்த்தம். புகார் வந்தவுடனே, மொத்த ஹாஸ்பிடலுக்கும் தகவல் போய் சேர்ந்துடும். உடனே எல்லா கதவுகளையும் மூடிடுவாங்க. குழந்தையை கடத்தினவங்க ஹாஸ்பிடலைவிட்டு வெளியே போகலைன்னா மாட்டிப்பாங்க.

தவிர, சிசிடிவி மூலமா குழந்தையை யார், எந்த வழியா கடத்திட்டுப் போனாங்க அப்படிங்கிறதையும் கண்டுபிடிச்சிடுவோம். ஹாஸ்பிடல் வாசல்ல காவல்துறையினர் இருப்பாங்க. அவங்ககிட்ட உடனே தகவல் சொல்லிட்டா, அவங்க குழந்தைகளை கண்டுபிடிச்சிடுவாங்க. இந்த செயல்பாடுகளை எல்லா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலேயும் அவ்வப்போது ஒரு பயிற்சியாவே ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கிறவங்களுக்கு சொல்லித் தர்றோம்.
குழந்தை கடத்தலைத் தடுக்க இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், குழந்தையோட அம்மாவும், அட்டெண்டரும் தூங்கிட்டு இருக்கிறப்போ குழந்தை கடத்தல் நடக்கலாம். அப்படித் தூக்கிட்டுப்போறவங்க, ஹாஸ்பிடல் நடைமுறைகள் தெரிஞ்சவங்களா இருந்தா குழந்தை கையில இருக்கிற டேகை கட் பண்ணிட்டு தூக்கிட்டுப் போயிடலாம். சில நேரங்கள்ல, அம்மாவும், அட்டெண்டரும் தூங்கிப்போயிட்டதால குழந்தை காணாம போன தகவலே எங்களுக்கு தாமதமா தான் தெரிய வரும். Code Pink எச்சரிக்கை கொடுத்து, எல்லா கேட்டையும் மூடுறதுக்குள்ள குழந்தையை வெளியே தூக்கிட்டுப் போயிருப்பாங்க. மருத்துவமனையோட வொர்க்கிங் சிஸ்டம் தெரிஞ்சவங்களோ அல்லது இந்த சிஸ்டம் தெரிஞ்சவங்களோட உதவியோடதான் குழந்தை கடத்தலை செய்ய முடியும். இப்படி செய்யுறவங்களை கையும் களவுமா கண்டுபிடிச்சா கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.''

பிறந்த குழந்தைகள் கடத்தப்படுறதுக்கு ரெண்டு இடங்கள்ல வாய்ப்பிருக்கு. ஒண்ணு, பிறந்த குழந்தைகளுக்கான எமர்ஜென்சி கேர் யூனிட்ல இருக்கிறப்போ நடக்கலாம். எல்லா குழந்தைகளையுமே இங்கே 12 மணி நேரம் வைச்சு, அப்நார்மலா ஏதாவது இருக்கான்னு பரிசோதனை பண்ணிட்டுதான் தருவோம். அதனாலதான், இந்த இடத்துல எந்நேரமும் நர்ஸ் இருப்பாங்க. தவிர, அங்க குழந்தையோட அம்மாவைத்தவிர வேற யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
ஒரு குழந்தை பிறந்தவுடனே, குழந்தையோட கையிலேயும் அதன் அம்மாவோட கையிலேயும் ஒரு டேக் (Tag) கட்டுவோம். ரெண்டும் ஒரே நம்பரோட இருக்கும். இந்த டேக் இருந்தா தான் குழந்தைகளுக்கான எமர்ஜென்சி கேர் யூனிட் உள்ள அம்மாவையே அனுமதிப்போம். அம்மாவையும் குழந்தையையும் பார்த்துக்கிற அட்டெண்டரை கூட இங்க அனுமதிக்க மாட்டோம்.

ஒருவேளை அம்மாவால ஐ.சி.யூ.வுக்கு வர முடியலைன்னா, நர்ஸ் தான் குழந்தையை தூக்கிப்போட்டு அதோட அம்மாகிட்ட கொடுப்பாங்க. ஹாஸ்பிடல்ல வேலைபார்க்கிற ஆயாம்மா கிட்டகூட குழந்தைகளை கொடுக்க மாட்டோம். ஏன்னா, அவங்களுக்கு டேக் (Tag) மாதிரியான விஷயங்களை செக் பண்ணத் தெரியாதுங்கிறதால, அவங்களை குழந்தைகளுக்கான எமர்ஜென்சி கேர் யூனிட் உள்ள அனுமதிக்கவும் மாட்டோம்.
தவிர, நர்ஸ்களுக்கு குழந்தைகள் கடத்தலை தடுக்க, எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணும்னு அடிக்கடி பயிற்சியும் கொடுத்துட்டு வர்றோம்.
அம்மாகிட்ட குழந்தை இருக்கிறப்போ, பெரும்பாலும் பிரச்னை வராது. ஏன்னா, அட்டெண்டர் கூடவே இருப்பாங்க. அம்மா தூங்கிட்டாலும் அட்டெண்டரை மீறி பிறந்த குழந்தையை தூக்கிட்டுப் போறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அட்டெண்டரும் தூங்குறப்போ, குழந்தை கடத்தல் நடக்கலாம். இதுதான் குழந்தைகள் கடத்தப்படுறதுக்கு வசதியான ரெண்டாவது இடம். அதனால, பேஷண்ட்ஸை நைட்ல கதவை லாக் பண்ணிக்க சொல்வோம்.
விசிட்டர்ஸை ரொம்ப லிமிட்டா தான் அனுமதிப்போம். அப்படி வர்றவங்களும் ரிசப்ஷன்ல இருக்கிற ரிஜிஸ்டர்ல அவங்களைப்பத்தின தகவல்களை எழுதணும். வார்டு உள்ளே போறதுக்கு விசிட்டர் பாஸ் கொடுப்போம். அது இருந்தா தான், அங்க அவங்களை அனுமதிப்பாங்க. இதனால, வெளியாட்கள் யாரும் எங்க ஹாஸ்பிடல் உள்ளே வரமுடியாது.
ராத்திரியில ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை செக்யூரிட்டி ரவுண்ட்ஸ் வருவாங்க. அப்புறம், ஹாஸ்பிடலோட எல்லா வாசல்களிலேயும் சிசிடிவி வெச்சிருக்கோம். தவிர, ஒவ்வொரு வராண்டாவோட மூலைகளையும், ஒவ்வொரு அறையோட வாசலையும் கண்காணிக்கிற மாதிரி சிசிடிவி வெச்சிருக்கோம்.

ஹாஸ்பிடலுக்கு வர்ற விசிட்டர்ஸ் யாரையும் பார்க்காம சும்மா நோட்டம் விட்டுட்டு இருந்தாங்கன்னா, கூப்பிட்டு விசாரிப்போம். பேஷண்ட் பத்தி யாராவது விசாரிச்சாலும் அவங்களைப்பத்தின தகவல்களை கேட்டுட்டு தான் உள்ளே அனுப்புவோம். இதனால, சிலர் எங்க மேல கோவம்கூட படுவாங்க. காரணம் சொன்னா புரிஞ்சிப்பாங்க.''
குழந்தைகள் கடத்தலைத் தடுக்க நாமும் கவனமாக இருப்போம்.