கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அ...
Jagdeep Dhankhar ராஜினாமா: `நீதிபதிக்கு எதிரான மனு; 1 டு 4.30 மணிக்குள் ஏதோ.!’ - அப்செட் மத்தியஅரசு?
துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் திடீரென தனது பதவிக்காலம் முடியும் முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
ஏன் திடீரென பதவி விலகுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன. இதனிடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று விவாதம் இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.
ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது?
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''நேற்று முன் தினம் பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்.

மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, ஜெ.பி. நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை. அதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், நேற்று பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார்.
நேற்று முன் தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. அதனால் தான் துணை ஜனாதிபதி ராஜினாமா செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் என நீதிபதி விவகாரம் ஒன்று சொல்லப்படுகிறது.
ராஜ்யசபா வில் எதிர்க்கட்சிகள், `லஞ்சம் வாங்கி பிடிபட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்கவேண்டும்' என்று கோரி அவைத் தலைவர் தன்கரிடம் மனு கொடுத்திருந்தன.
அந்த மனுவை நிராகரிக்காமல் அதனை தன்கர் ஏற்றுக்கொண்டார். அதோடு அம்மனு மீது தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவை செயலாளரிடம் தன்கர் கேட்டுக்கொண்டார். இது அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள் சிலர்.
`நீதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொண்டிருப்பதால் அரசே நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதை ஒப்புக்கொண்டதாக அமைந்துவிடும்' என்று அரசு கருதியதாக தெரிகிறது.
இது தொடர்பாக தன்கரிடம் அரசு உயர் அதிகாரிகள் அல்லது மேலிட தலைவர்கள் போன் மூலம் பேசியதாகவும் துணை ஜனாதிபதியும் தனது பங்கிற்கு காட்டமாக பதிலளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று தன்கர் தெரிவித்துள்ளார். இந்த வாதம் மத்திய அரசை கடுமையாக அப்செட்டாக்கி உள்ளதாம். மேற்கொண்டு தன்கரை பதவியில் வைத்திருக்கவேண்டாம் என்று கருதி மத்திய அரசே தன்கருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தீர்மானித்ததாக தெரிகிறது.
இதனை தெரிந்து கொண்டு தானே பதவியில் இருந்து விலகிவிடுவது நல்லது என்று கருதி நேற்று இரவு 9.25 மணிக்கு எக்ஸ் தள பக்கத்தில் தனது ராஜினாமா முடிவை தன்கர் அறிவித்துள்ளார்.

தனது உடல்நலத்தை காரணம் காட்டி பதவி விலகுவதாக தன்கர் தெரிவித்துள்ளார். அவையில் அமைச்சர் ஒருவர் பேசும்போது, அவைத்தலைவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுவும் தன்கர் ராஜினாமா செய்வதற்கு முக்கிய ஒரு கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், ''ராஜினாமாவுக்கான காரணம் துணை ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திற்கு மட்டுமே தெரியும். இதைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் அரசாங்கத்தைப் பொறுத்தது" என்று தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. எதையும் வெளிப்படையாக பேசும் தன்கர் தனது வாயாலேயே தனது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.