முத்தரப்பு தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!
முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.
தென்னாப்பிரிக்கா - 134/8
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரீஸா ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜியார் லிண்டே 23 ரன்களும், வாண்டர் துசென் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி, ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வில்லியம் ஓ’ரூர்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
டிம் செய்ஃபெர்ட் அரைசதம்; நியூசிலாந்து வெற்றி
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் செய்ஃபெர்ட் 48 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேரில் மிட்செல் 20 ரன்களும், டெவான் கான்வே 19 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் செனுரான் முத்துசாமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டைல் சிம்லேன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய டிம் செய்ஃபெர்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: 4-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார்: ஷுப்மன் கில்