ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்; 10 இடங்கள் முன்னேறிய தீப்தி சர்மா!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா பேட்டிங் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி, 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதையடுத்து, பேட்டிங் தரவரிசையில் தீப்தி சர்மா முன்னேற்றம் கண்டுள்ளார்.
Power-packed performances push England and India stars up the ICC Women's ODI Player Rankings
— ICC (@ICC) July 22, 2025
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய தீப்தி சர்மா, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 30 ரன்கள் எடுத்தார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 28 ரன்கள் மற்றும் 42 ரன்கள் முறையே எடுத்த ஸ்மிருதி மந்தனா, 727 ரேட்டிங் புள்ளிகளுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 5 இடங்கள் சறுக்கி 21-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் 17 ரன்கள் மற்றும் 7 ரன்கள் முறையே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை!