பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
Joe Root: சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பது சாத்தியமா? எண்களை வைத்து ஓர் அலசல்!
டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் ஜோ ரூட். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அட்டகாசமாக ஆடி சாதனைகள் மேல் சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார் ரூட். இந்த தசாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தானா, அவர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணம் என்ன, பல்வேறு சாதனைகள் படைக்கும் அவரால் சச்சினின் சாதனையை முறியடித்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற முடியுமா என அனைத்தையும் அலசுவோம்.
மான்செஸ்டரில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் விளாசினார் ஜோ ரூட். ஓப்பனர்கள் இருவரும் மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்த பின்னர் களமிறங்கிய அவர், இங்கிலாந்தைத் தொடர்ந்து நல்ல நிலையில் வைத்திருந்தார். போப், ஸ்டோக்ஸ் இருவருடனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், தன்னுடைய 38வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். போக அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட் மூவரையும் ஒரே இன்னிங்ஸில் முந்தி இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். பல்வேறு சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் ஜோ ரூட், கடந்த சில ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத உச்சம் தொட்டிருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 21 டெஸ்ட் சதங்கள் விளாசியிருக்கிறார் ஜோ ரூட். பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, கரீபிய தீவுகள் எனக் கால்பட்ட இடங்களிலெல்லாம் கொடி நாட்டியிருக்கிறார். அவருடைய கரியர் சராசரியை எடுத்துப்பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் 45 என்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மட்டும் 35 என்ற சராசரிதான் வைத்திருக்கிறார். மற்றபடி ஒவ்வொரு ஆடுகளங்களிலுமே நன்றாகவே ஆடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு வழக்கமாகச் சவால் கொடுக்கும் ஆசிய ஆடுகளங்களிலும் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார். பல போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவும், தோல்வியைத் தவிர்க்கவும் மிக முக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தின் சிறந்த வீரரா?
ரூட் போல் ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு விதமான ஆடுகளங்களிலும் பங்களித்திருக்கும் வீரர்கள் வெகுசிலரே. மிகப் பெரிய வீரர்கள் பலரும் ஏதோவொரு பலவீனத்தால் தடுமாறியிருக்கிறார்கள், ஃபார்ம் இழந்திருக்கிறார்கள். ஆனால், ரூட் அப்படியொரு கட்டத்தை அடையவில்லை. தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அணியின் நலனுக்காகப் பல தருணங்களில் வேறு பொசிஷன்களிலும் அவர் விளையாடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அது அவரது செயல்பாட்டைப் பாதிக்கவில்லை. நம்பர் 3 பொசிஷனில் ஆடிய போட்டிகளிலும் கூட 42 என்ற சராசரி வைத்திருக்கிறார்.
பாஸ்பால் அணுகுமுறையில் இங்கிலாந்து அணி ஆடினாலும், வேரூன்றி நிற்கும் இவரது ஆட்டம்தான் அவர்களுக்கு அந்த சுதந்திரத்தைக் கொடுக்கிறது. பெரும் சரிவு ஏற்படாமல் ரூட் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையே அனைவரும் அதிரடி ஆட்டம் ஆட உந்துதலாக இருக்கிறது. அதேசமயம் இவரது வழக்கமான ஆட்டம் சில சமயங்களில் அணியின் மொமன்ட்டமை பாதித்துவிடும் என்ற வாதமும் எழுந்தது. ஆனால், அது நடக்காத வகையில் இவரும்கூட அந்த அணுகுமுறைக்கு ஏற்ப தன் ஆட்டத்தை மாற்றினார். இவரது ரிவர்ஸ் ஸ்கூப்கள் டெஸ்ட் அரங்கின் ஐகானிக் ஷாட்களுள் ஒன்றாக இன்று மாறியிருக்கின்றன. வெளிநாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்வதுபோல், அணிக்குள் இருக்கும் சூழ்நிலைக்கும் தன்னை சிறப்பாக செட் செய்துகொண்டார் ரூட்.
அவரது இந்த மகத்தான தன்மையால்தான் இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த டெஸ்ட் வீரரில் ஒருவராகவும் உருவெடுத்திருக்கிறார். சொல்லப்போனால், தற்போதைய சூழ்நிலையில் இவர்தான் மிகச் சிறந்த டெஸ்ட் வீரர் என்றுகூடச் சொல்லலாம்.
ஃபேப் 4 வீரர்களில் இப்போது ஜோ ரூட் அளவுக்கு மகத்தான ஃபார்மில் இருப்பவர் யாரும் இல்லை. அவர்களுள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர் யாரென்று சிந்தித்தால் அங்கு ரூட்டுக்கும் ஸ்மித்துக்கும் இடையில்தான் போட்டி நிலவும். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டருக்கான விவாதத்தில் நிச்சயம் இல்லை. வில்லியம்சனின் ஒட்டுமொத்த எண்கள் சிறப்பாக இருந்தாலும், அவரது சிறப்பான செயல்பாடுகள் பெரும்பாலும் சொந்த மண்ணில் வந்தவையே! இங்கிலாந்தில் அவரது டெஸ்ட் சராசரி 30. இந்தியாவில் 33. தென்னாப்பிரிக்காவில் 21. இலங்கையில் 30. அதனால் அவரை நிச்சயம் ஸ்மித் மற்றும் ரூட் இருவருக்கு இணையாக வைக்க முடியாது.
மறுபக்கம் ஸ்மித் அனைத்து இடங்களிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தியிருக்கிறார். நிச்சயம் இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர். ஆனால், கடந்த 3 வருடங்களில் அவருடைய ஃபார்மும் கூட சிறு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அவரது சராசரி முறையே 42 & 35. ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் ரூட் தன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். 2021 முதல் அவரது சராசரி 56!
இவர் எழுச்சி பெற்றிருக்கும் காலகட்டமே இவரைப் பெருமளவு மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பல முன்னணி வீரர்களுக்கு லாக்டௌன் காலகட்டம் வேகத்தடையாக அமைந்தது. ஆனால், அப்போதுதான் ரூட் ஹைவேயில் பயணிக்கத் தொடங்கினார்.
சொல்லப்போனால் லாக்டௌனுக்கு முன்பு வரை ஃபேப் 4 விவாதங்களில் அதிகம் பேசப்படாத வீரர் என்றால் அது ஜோ ரூட்தான். மற்ற மூவரும்போல் அவர் 3 ஃபார்மட்களிலும் கலக்கவில்லை, பெரும் தொடர்களில் அணியை வழிநடத்தவில்லை என்பதால் அந்த நால்வரில் அவர் மீதுதான் குறைந்த வெளிச்சம் இருந்தது. ஒரு 4-5 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தால்... பலரும் அந்த நான்காவது இடத்துக்கு பாபர் ஆசமைத்தான் முன்மொழிந்திருப்பார்கள். ஏனெனில், லாக்டௌனுக்கு முந்தைய அந்த காலகட்டம் ரூட்டுக்கு அவ்வளவு சிறப்பாகச் செல்லவில்லை.
என்னதான் உலகத்தர வீரராக, இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவராகக் கருதப்பட்டிருந்தாலும் இங்கிலாந்து நிர்வாகம் சில அதிரடியான முடிவுகளை எடுத்தது. முழுக்க முழுக்க அதிரடியான அணுகுமுறையைக் கையில் எடுத்த அந்த அணி, ரூட்டை டி20 ஃபார்மட்டில் இருந்து ஓரங்கட்டியது. ஒருநாள் ஃபார்மட்டிலும் அவரது இருப்பு, ஃபார்ம் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஏன், ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட அவர் ஏலம் போகவில்லை. வெள்ளைப் பந்தில் அவருடைய திறன் பற்றிய கிரிக்கெட் உலகின் பார்வை பாதாளத்தில்தான் இருந்தது. ஆக, அவர் தன் உலகத்தர பேட்டிங்கைக் காட்ட, தன் தாகத்தைத் தனித்துக்கொள்ள மீதமிருந்தது டெஸ்ட் ஃபார்மட் மட்டுமே. சிகரத்தை அடைய அந்த சிவப்புப் பந்து மட்டுமே வழி எனும்போது, அவரது 100 சதவிகிதமும் இந்த ஃபார்முட்டுக்கே கொடுக்கப்படுகிறது எனும்போது விளைவு இப்படித்தானே இருக்கும். சாதனைகள் மேல் சாதனைகள் முறியடிக்கப்படும்தானே!

சச்சினின் சாதனையை முறியடிக்க முடியுமா?
டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ரன்ஸ்கோரராக ரூட் உருவெடுத்திருக்கும் நிலையில், அவரால் சச்சினை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதைப் பலரும் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் சச்சின் 15,921 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரை எட்டிப் பிடிக்க ரூட்டுக்கு இன்னும் 2512 ரன்கள் தேவைப்படுகின்றன. இது ரூட்டால் சாத்தியமா என்று எண்கள் வைத்து அலசுவோம்.
ரூட்டுக்குத் தற்போது வயது 34. இங்கிலாந்துக்காக அவர் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளே இப்போது அதிகம் ஆடப்படுவதில்லை. லீக் போட்டிகளிலும் அவர் அதிகமாகப் பங்கேற்பதில்லை. தி 100, SA20 போன்ற வெகுசில தொடர்களில் மட்டுமே ஆடுகிறார். அதனால் அவரால் நிச்சயம் 4 ஆண்டுகள் வரை ஃபிட்டாக டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும். ஆள் மிகவும் ஆஜானுபாக இல்லாவிட்டாலும் மிகவும் ஃபிட்டான ஒரு வீரர். இதுவரை அவர் பெரிதாகக் காயமடைந்ததில்லை. அவர் அறிமுகம் ஆனபிறகு இங்கிலாந்து அணி 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறது. அதில் 157 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார் ரூட். அவரது முதல் ஆண்டு ஒரு போட்டியில் வெளியே அமரவைக்கப்பட்டார். இதுதான் அவரது ஃபிட்னஸ் லெவல்!
தற்போது 50 என்ற சராசரியில் ஆடிக்கொண்டிருக்கும் ரூட், இதற்குமேல் 40 என்ற சராசரியில் ஆடினாலும் கூட, அந்த 2512 ரன்கள் அடிக்க 63 இன்னிங்ஸ்கள் தேவைப்படும். சராசரியாக 40 போட்டிகள். 4 ஆண்டுகளில் இங்கிலாந்தால் அத்தனை டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியுமா? நிச்சயம் முடியும்.
மற்ற அணிகளைவிட இங்கிலாந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மட்டும் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் ரூட். ஜிம்பாப்வே உடனான இன்னொரு டெஸ்ட் வேறு! இந்த 2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 21 போட்டிகள் ஆடப்போகிறது இங்கிலாந்து. அடுத்த சைக்கிளிலும் அதேபோல் குறைந்தபட்சம் 20 போட்டிகளிலாவது இங்கிலாந்து ஆடும். ஆக, ரூட் இன்னும் 4 ஆண்டுகள் ஆடும்பட்சத்தில் நிச்சயம் அவரால் 40 போட்டிகள் ஆடமுடியும்.
ஆனால், இங்கு இருக்கும் பெரும் கேள்வியே வயது ஆக ஆக, அவரால் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான். ஸ்மித்தின் எண்கள் கடந்த 2 ஆண்டுகளாகக் குறைந்திருப்பதற்கு வயதாவதும் காரணமாக இருக்கலாம். கோலியின் விஷயத்திலும் அதைப் பார்த்திருக்கிறோம். 35 என்பது அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்குமே பெரிய சவாலாக இருக்கும். ரூட் அதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். சொற்பமான வீரர்களே அந்தக் கடினமான காலகட்டத்திற்குப் பிறகும் தங்கள் சிறப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் போல்! 35 வயதைக் கடந்த பிறகும் 3 ஆண்டுகள் மிகச் சிறப்பாக விளையாடினார் சச்சின். 35 வயதில் அவரது சராசரி 47, 36 வயதில் 84, 37 வயதில் 78! சச்சினைப் போலவே இந்த சவாலான காலகட்டத்திலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஜோ ரூட்டால் நிச்சயம் சச்சினின் ரன் சாதனையை முறியடிக்க முடியும்.
இந்தத் தொடரில் ஜோ ரூட் படைத்திருக்கும் டெஸ்ட் சாதனைகள்
* இரண்டாவது அதிகபட்ச ரன்கள் - 13,409
* இரண்டாவது அதிகபட்ச 50+ ஸ்கோர்கள் - 104 (38 சதங்கள், 66 அரைசதங்கள்)
* இரண்டாவது அதிகபட்ச அரைசதங்கள் - 66
* அதிக கேட்ச்கள் - 211