நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
Kumbh Mela: அதிகாலையில் மரண ஓலம்; பலி 30 ஆக அதிகரிப்பு... கும்பமேளா கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் நேற்று மிகவும் முக்கியமான நாள் ஆகும். மெளனி அமாவாசையான நேற்று மட்டும் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று ஏற்கெனவே எதிர்பார்த்த உத்தரபிரதேச அரசு அதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. எங்கும் தடுப்புகளை அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தியிருந்தது.
நேற்று அதிகாலையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதுதான் மிகவும் நல்லது என்பதால் அதிகாலை நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக சங்கமம் பகுதியில் கூடியிருந்தனர். அவர்கள் புனித நீராடுவதற்கு இடம் பிடிக்கும் ஆர்வத்தில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே ஓட முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடியவர்கள் அருகில் உள்ள மைதானத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறிச்செல்ல ஆரம்பித்தனர். இதில் பலர் நசுங்கி உயிரிழக்க நேரிட்டது. அதிகமானோர் அதிகாலையில் எழுந்து புனித நீராடவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் பலர் அப்படியே இடிபாடுகளில் சிக்கி இறந்து போனார்கள். இதனால் கும்பமேளா நடைபெறும் இடத்தில் அதிகாலை 2 மணிக்கு எங்கும் மரண ஓலமாக இருந்தது. ஆரம்பத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரத்தை உத்தரபிரதேச போலீஸார் தெரிவிக்காமல் இருந்தனர். அதே சமயம், இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து இருந்தார்.
கூட்ட நெரிசல் குறித்து டிஜிபி வைபவ் கிருஷ்ணா கூறுகையில்,''திரிவேணி சங்கமம் பகுதி உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை பக்தர்கள் உடைத்துவிட்டனர். இதனால் புனித நீராடுவதற்காக பிரம்ம முகூர்த்தத்தை எதிர்பார்த்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறிச்சென்றனர்''என்றார். இடிபாடுகளில் சிக்கி 30 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர். 60 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ''கும்பமேளாவில் அதிகப்படியான கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் 8 முதல் 10 கோடி பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மக்கள் வதந்தியை நம்பவேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்கப்படும். அதோடு சம்பவம் குறித்து 3 பேர் கொண்ட கமிட்டி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும். சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளப்படும். பக்தர்கள் திரிவேணி சங்கமத்திற்கு வராமல் கங்கையில் புனித நீராடி செல்லவேண்டும்''என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரம் புனித நீராடல் நிறுத்தப்பட்டது.
பின்னர் புனித நீராடுவது தொடங்கியது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26-ம் தேதி வரை நடைபெறும். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் கும்பமேளா நடைபெறும் இடத்தில் அதிகப்படியான கூட்டம் இருந்ததால் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்றார். ஆனால் அவர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். ஏற்கெனவே சுவாச கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த சிவராஜ் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்களை அல்லது தங்களுடன் வந்தவர்களை பிரிந்து அவர்களை தேடிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை 2 மணிக்கு எங்கும் மரண ஓலமாகவும், பக்தர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், புனித நீராடவும் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் போலீஸார் திணறினர். அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.