Kumbh Mela: போனை ஆற்றில் முக்கிய மனைவி; வீடியோ காலில் புனித நீராடிய கணவர்; வைரலாகும் உபி பெண்!
உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்குப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். சில நேரங்களில் பெண்கள் அல்லது ஆண்கள் தங்களது கணவர் அல்லது மனைவியை விட்டுவிட்டு, தான் மட்டும் செல்வதுண்டு. அது போன்று ஷில்பா செளகான் என்ற பெண் தனது கணவர் இல்லாமல் உறவினர்களுடன் கும்பமேளாவிற்கு வந்திருந்தார்.
கும்பமேளாவில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஷில்பா புனித நீராடினார். அப்போது கணவர் அவருடன் இல்லாமல் இருந்தார். எனவே தான் புனித நீராடுவதைக் கணவர் பார்க்கவேண்டும் என்பதற்காகத் தனது மொபைல் போனில் கணவருக்கு வீடியோ கால் செய்தார். அவரது கணவர் படுக்கையில் படுத்தபடி மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
அந்நேரம் கணவரும் புனித நீராடவேண்டும் என்பதற்காக வீடியோ காலில் தெரிந்த கணவருக்காகத் தனது மொபைல் போனை கங்கை ஆற்றில் ஒரு முறை மூழ்கடித்து எடுத்தார். அவ்வாறு செய்ததை அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒருவர் போன் தவறி ஆற்றில் விழுந்திருந்தால் அப்பெண்ணின் கணவர் நேரடியாக முக்தி அடைந்திருப்பார் என்று குறிப்பிட்டார். மற்றொருவர் அப்பெண்ணிடம், 'உங்களது கணவரிடம் உடையை மாற்றச்சொல்லி முடியைக் காய வைக்கச் சொல்லுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும்' என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், 'ஆன்லைன் மூலம் புனித நீராடி, அவர் தனது பாவங்களைப் போக்கியுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராமும் உங்களால் புனித நீராடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஷில்பாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. தனது உறவுகளைக் கும்பமேளாவிற்கு அழைத்து வரமுடியாதவர்கள் அவர்களின் புகைப்படங்களைத் திரிவேணி சங்கமத்தில் மூழ்கடித்து எடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் தங்களுடன் வராத உறவினர்களின் பெயர்களைத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் போது உச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel