Agra: ரூ.50,000 சன்மானம், டிரோன், 3 மாத தேடல்... தொலைந்த நாயைக் கண்டுபிடித்த தம்பதி; என்ன நடந்தது?
டெல்லி அருகில் உள்ள குருகிராமில் வசிப்பவர் தீபயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்கள் ஆசையாக இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தனர். எங்குச் சென்றாலும் வளர்ப்பு நாயையும் கூடவே அழைத்துச் செல்வர். தீபயன் டாடா நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் தங்களது வளர்ப்பு நாய்களுடன் ஆக்ராவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர்.

அவர்கள் தங்களது நாயை ஹோட்டல் ஊழியர்கள் பராமரிப்பில் விட்டுவிட்டுச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். அவர்கள் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஹோட்டல் ஊழியர்கள் போன் செய்து, நாய் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியில் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டனர். ஹோட்டல் கேட் திறந்திருந்ததால் நாய் எளிதில் வெளியில் சென்றுவிட்டது. உடனே கணவன், மனைவி இருவரும் ஓடிவந்து ஹோட்டல் இருக்கும் பகுதியில் தங்களது நாயைத் தேடினர்.
ஆனால் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு வாரம் தங்கி இருந்து ஒவ்வொரு வீடாகச் சென்று தேடிப்பார்த்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஹோட்டல் நிர்வாகம் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி, போலீஸிலும் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸாரும் சேர்ந்து காணாமல் போன நாயைத் தேடினர்.
போலீஸாரின் மோப்ப நாயும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதோடு காணாமல் போன நாய் குறித்து தகவல் கொடுத்தால் 30 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்தனர். அதனைப் பின்னர் 50 ஆயிரமாக அதிகரித்தனர். அதோடு ஆக்ரா முழுக்க ஒவ்வொரு தெரு மற்றும் முக்கியமான இடங்களில் தங்களது மொபைல் போன் நம்பருடன் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
சோசியல் மீடியாவிலும் காணாமல் போன நாய் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். 100 கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கணவன், மனைவி இருவரும் பல மணி நேரம் ஆய்வு செய்தனர். நாயைக் கண்டுபிடிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலம் ஆக்ரா முழுக்க காணாமல் போன நாயைத் தேடினர். இரண்டு மாத தேடுதலுக்குப் பிறகு இருவரும் குருகிராம் சென்றனர். அங்குச் சென்ற பிறகும் அவர்கள் அமைதியாக இருக்கவில்லை. அடிக்கடி குருகிராமில் இருந்து ஆக்ராவிற்கு வந்து நாயைத் தேடிக்கொண்டே இருந்தனர். அவர்களது கார் அவர்களின் இரண்டாவது வீடாக மாறியது. மூன்று மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நாயை மட்டுமே தேடுவதில் குறியாக இருந்தனர்.

இறுதியில் சுற்றுலா வழிகாட்டி பிரசாந்த் ஜெயின் என்பவர் ஆக்ராவின் மெஹ்தாப் பாக் என்ற இடத்தில் நீங்கள் தேடும் நாயைத்தான் பார்ப்பதாகத் தெரிவித்தார். உடனே கணவன், மனைவி இருவரும் குருகிராமில் இருந்து ஆக்ராவிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுற்றுலா வழிகாட்டி சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்களின் வளர்ப்பு நாய் அங்கு இருந்தது. அந்த நாயைப் பார்த்ததும் அதனை இருவரும் அப்படியே தூக்கி அணைத்துக்கொண்டனர். நாயைக் கண்டுபிடிக்க கணவன் மனைவி இருவரும் லட்சக்கணக்கில் செலவு செய்தனர். அவர்கள் செய்த செலவு வீண் போகவில்லை. அவர்களின் செல்லப்பிராணி அவர்களுக்கு மீண்டும் கிடைத்துவிட்டது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play