சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!
புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவருடன் வசித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் பூனைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர். அதோடு தெரு பூனைகளையும் எடுத்து வந்து பராமரித்து வந்தனர். குறிப்பாக தெருக்களில் உடல் நலம் பாதிக்கப்படும் பூனைகளை வீட்டிற்கு எடுத்து வந்து சிகிச்சை கொடுத்து சரியானதும் மீண்டும் கொண்டு போய்விடுவது வழக்கம்.

ஆனால் அவர்களின் இச்செயலால் வீட்டில் பூனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாக அதிகரித்தது. வீடு முழுக்க பூனைகளாக இருந்தது. இதனால் பூனைகளின் கழிவால் வீடு முழுக்க மோசமான கெட்ட வாசனை இருந்தது. வீடும் அசுத்தமாக இருந்தது. எப்போதும் பூனைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விளையாடுவதும், சண்டையிடுவதுமாக இருந்தது. இதனால் பூனைகளின் சத்தம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூராக இருந்தது. அதோடு ரிங்கு வீட்டில் இருந்து வரும் கெட்ட வாசனை பக்கத்து வீட்டுக்காரர்களை வீட்டில் இருக்க விடாமல் செய்தது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து புனே மாநகராட்சியில் புகார் செய்தனர்.
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அவர்கள் வீட்டை திறந்தவுடன் வீடு முழுக்க பூனைகளாக இருந்தது. அதேசமயம் வீட்டிற்குள் நுழைய முடியாத அளவுக்கு பூனை கழிவுகளின் கெட்ட வாசனை இருந்தது. மொத்தம் 300 பூனைகள் உள்ளே இருந்த அனைத்து படுக்கை அறைகளிலும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தன. இது குறித்து வீட்டை சோதனை செய்த மாநகராட்சி அதிகாரி நிலேஷ் கூறுகையில், ''வீட்டு உரிமையாளர் தெருவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் பூனைகளை வீட்டிற்கு கொண்டு வந்து சில நாள்கள் வைத்திருந்து, உடல்நிலை சரியானதும் வெளியில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எனவே அசுத்தமான சூழ்நிலை, கெட்ட வாசனை போன்ற காரணங்களால் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாநகராட்சியில் புகார் செய்தனர். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டை சோதனை செய்தோம். வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் பூனைகளை இரண்டு நாள்களில் வெளியில் விட வேண்டும் என்று கூறி வீட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம். மாநகராட்சி நிர்வாகம் அந்த பூனைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும். வீட்டு உரிமையாளர் மீது இன்னும் போலீஸில் புகார் செய்யப்படவில்லை. மூத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து இது குறித்து முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக புனே விலங்குகள் நல ஆர்வலர்களும் பூனைகளை வந்து பார்வையிட்டனர். வீட்டில் எத்தனை பூனைகள் இருக்கிறது என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, அவர்களுக்கு எத்தனை பூனை இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை. பூனைகளுக்கு தடுப்பூசியோ அல்லது மருத்துவ வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.