2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?
Maaya: நடாலின் பட்டறையில் பயிற்சி; சானியா மிர்சா இன்ஸ்பிரேஷன் - டென்னிஸில் மிரட்டும் கோவை வீராங்கனை
டென்னிஸ் உலகின் புதிய புயலாக கவனம் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த 15 வயதான மாயா ராஜேஷ்வரன். ஐந்தே ஐந்து தொழில்முறை தொடரில்தான் ஆடியிருக்கிறார். அதற்குள் பெரும் வெளிச்சத்தை தன் மீதாகத் திருப்பியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/wpl7rupx/IMG_20250208_WA00031.jpg)
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாயா 2009 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது 8 வயதிலேயே ரேக்கட்டை கையில் எடுத்துவிட்டார். முறையான பயிற்சி மூலம் சிறு வயதிலேயே வேகமாக முன்னேற ஆரம்பித்தார். சானியா மிர்சாதான் மாயாவின் இன்ஸ்பிரேஷன். அவரை மாதிரியே சாதிக்கவேண்டும். கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என்பதுதான் மாயாவின் எண்ணம். தொழில் முறையாக டென்னிஸ் ஆட ஆரம்பித்த தொடக்கத்திலேயே அதற்கான அறிகுறியைக் காட்டத் தொடங்கிவிட்டார் மாயா.
கடந்த மாதம் ITF J300 என்ற ஒரு தொடர் நடந்திருந்தது. அந்தத் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு ஏக்தரினா என்கிற வீராங்கனையை வீழ்த்தி சாம்பியனாகியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த செட்டில் முதல் செட்டை மாயா இழந்திருப்பார். அப்படியிருந்தும் போராடி மீண்டு வந்து கம்பேக் கொடுத்து அடுத்த இரண்டு செட்களையும் வென்றிருந்தார்.
13 வயதிலேயே புனேவில் நடந்த ஒரு சிங்கிள்ஸ் தொடரையும் மாயா வென்றிருந்தார். இப்போது மும்பை ஓபன் WTA 125 என்ற தொடரிலும் மாயா கலக்கி வருகிறார்.
தன்னைவிட பெரிய வீராங்கனைகளையும் தரவரிசையில் முன்னால் உள்ள வீராங்கனைகளையும் வீழ்த்தி அசத்தி வருகிறார். இத்தாலியைச் சேர்ந்த நிக்கோல் என்கிற வீராங்கனையை 6-3, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார். அதேமாதிரி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிக்கா என்கிற வீராங்கனையை 7-6(9), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றிகள் மூலம் அரையிறுதியையும் எட்டிவிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/4u6yqxgd/IMG-20250108-WA0015.jpg)
டென்னிஸ் ஜாம்பவனான ரபேல் நடாலின் அகாடெமியில் ஒரு வாரம் பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கிறார் மாயா. அவரின் திறமையைப் பார்த்து அடுத்த ஓராண்டுக்கு அங்கேயே பயிற்சி செய்ய ஆபர் கொடுத்திருக்கிறார்கள். அதனால் மாயா விரைவிலேயே ஸ்பெயினும் செல்லவிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/udf656am/IMG-20250208-WA00041.jpg)
டென்னிஸ் உலகில் ஒரு கோவை பெண்ணின் கொடி உயர பறக்கத் தொடங்கியிருக்கிறது.