Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார் பெரியசாமி
`அமரன்' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அதுமட்டுமின்றி, `அமரன்' திரைப்படத்திற்குப் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
தற்போது இத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மணி ரத்னத்தை சந்தித்து அவர் குறித்தான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார். தனது பதிவில், `` அமரன் திரைப்படத்தின் 100-வது நாளை நோக்கி....சினிமா குறித்து கனவு காண்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான் மணி சார். நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த முதல் நபர் நீங்கள்தான்.
அந்தப் புகைப்படத்தை 2005-ல் எடுத்திருந்தேன். அந்தப் புகைப்படத்தை நான் தொலைத்துவிட்டேன். உங்களுடன் இந்த இரண்டு புகைப்படங்களை எடுப்பதற்கு தைரியத்தை வரவழைக்க இரண்டு தசாப்தங்கள் & இரண்டு திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன. உங்களின் திரைப்பட போஸ்டர்களை பார்த்து வியந்து நின்றவன் இன்று உங்கள் அருகில் நிற்கிறேன். அதுவும் பேச்சற்று நிற்கிறேன். அமரன் திரைப்படம் குறித்து பாராட்டியதற்கு நன்றி சார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.