சதமடித்தவருக்கு அறிவுரை ஏன்? கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆவேசம்!
Mufasa - The Lion King: அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர்... குரல் கொடுத்தவர்கள் கூறுவதென்ன?
2019-ம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில், கதாநாயகனான முஃபாசாவுக்கு அர்ஜுன் தாஸும், டாகா கதாப்பாத்திரத்துக்கு அசோக் செல்வனும் குரல் கொடுத்திருக்கிறார்கள். தி லயன் கிங் படத்தைப் போலவே, பும்பா, டிமோனுக்கு நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி குரல் கொடுத்திருக்கின்றனர். ரஃபிகி கதாபாத்திரத்துக்கு நடிகர் VTV கணேஷும், கிரோஸுக்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்திருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் இந்தப் படம் வெளிவரவிருக்கும் நிலையில், குரல் கொடுத்த நடிகர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நடிகர் நாசர், ``நான் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். நடிகர் சிவாஜி, அமிதாப் பச்சன் போன்றோரின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் நடிகர் சிவாஜியின் குரல்தான் என் ஆதர்சம். நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், உங்களுக்குள் எப்போதும் ஒரு குழந்தை இருக்கும். எனவே, இது குழந்தைகளுக்கான திரைப்படம் மட்டுமல்ல, பெரியவர்களுக்கானதும் கூட. இதுபோல திரையில் அழகாகக் காட்டப்படத் தகுதியான பழங்கால புனைவுகள், வரலாற்றுக் கதைகள் நம்மிடமும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
நடிகர் சிங்கம்புலி, ``தி லயன் கிங்’ படத்திற்கு குரல் கொடுக்கும் வாய்ப்பை விலைமதிப்பற்ற பரிசாகவே கருதுகிறேன். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது. டிமோ கேரக்டருக்கு குரல் கொடுத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி" என்றார்.
நடிகர் அர்ஜுன் தாஸ், ``இந்தப் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உணர்ச்சிகள் அதிகம். அதனால், மற்ற படங்களுக்கு டப்பிங் பேசுவதைப் போலல்லாமல், குரல் நடிப்பில் தீவிரமாக முயற்சி செய்தேன்.
இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நானும் முஃபாஸாவின் தீவிர ரசிகன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதால், நானும் கதைக்குள் இருக்கிறேன் என்றே உணர்கிறேன்" எனச் சிரித்துக்கொண்டே பேசினார்.
நடிகர் அசோக் செல்வன், ``முதன்முறையாக ஒரு விலங்கு கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறேன். இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி." என்றார்.