அதானிக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனு: மும்பை உயா்நீ...
Mumbai: ``மத கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு..'' - போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த 23 வயது இளைஞர் அதே வயதுடைய மாற்றுமத பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் 2019-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக படித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது உறவுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மும்பையில் வசிக்கும் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனு நீதிபதிகள் ரேவதி மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது குடும்பத்திடமிருந்து அச்சுறுத்தல் விலகும் வரை தாங்கள் தங்கிக்கொள்ள பாதுகாப்பான ஒரு இடம் தேவை என்றும் கேட்டு இருந்தனர். அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் மிஹிர் மற்றும் லாரா ஆகியோர், தம்பதி இருவரும் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக கடந்த 14ம் தேதியே மனு கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்கு அவர்கள் இருக்கும் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு கொடுப்பது குறித்து உடனே முடிவு எடுக்கவேண்டும் என்றும், தம்பதிகள் பாதுகாப்பாக தங்குவதற்கு போலீஸார் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்றும், அதில் அவர்கள் தங்கி இருக்கும்வரை போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஷிண்டே கூறுகையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அடுத்த விசாரணை வரை போலீஸார் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மாநில அரசு மத கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு பாதுகாப்பான இல்லம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தது. அந்த உத்தரவு வந்த பிறகு முதல் முறையாக இத்தம்பதிக்கு போலீஸார் பாதுகாப்பான இல்லம் கொடுக்கின்றனர். மத கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் உறவினர்கள் மற்றும் மதவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். எனவே அதனை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.