Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோறும் வாகனங்கள் சென்று வரும் நிலையில், அந்த பகுதியில் இருக்கும் சில முதிர்ந்த மரங்கள் வாகனங்கள் மீது பெயர்ந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை வாகன ஓட்டுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆபத்தான நிலையில் இருக்கும் அபாய மரங்களை வெட்டிக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் சோலூர் பேரூராட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. மணிக்கல் சாலையோரத்தில் உள்ள 40 ஆபத்து மரங்களை வெட்டிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட 40 மரங்களையும் தான்டி வருவாய் நிலம், முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என 250 மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தியிருக்கிறார்கள். இது குறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து 2 நபர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவான முக்கிய நபரை தேடி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள், " வருவாய்த்துறை நிலத்தில் இருந்த யூக்கலிப்டஸ் மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதை வருவாய்த்துறையினர் முறையாக கண்காணிக்கவில்லை. அந்த தைரியத்தில் வனத்துறை நிலத்தில் இருந்த மரங்களையும் வெட்டிக் கடத்தயிருக்கிறார்கள்.
சோலூர் பகுதியைச் சண்முகவேல், கோத்தகிரியைச் சேர்ந்த பிரவித்குமார் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்திருக்கிறோம்.

தலைமறைவான கோத்தகிரியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தேடி வருகிறோம். மரம் வெட்ட அனுமதி வழங்கியதோடு மட்டுமின்றி சட்டவிரோத மரக்கடத்தல் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்தால் மட்டுமே இதுபோன்ற மரக்கொள்ளைகளை தடுக்க முடியும்" என்றனர்.