Ooty: தேயிலைத் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெண் சிறுத்தை; நீலகிரியில் தொடரும் சோகம்!
சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது மேலும் ஒரு பெண் சிறுத்தை குட்டி ஒன்று மர்மமான முறையில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள ராக்வுட் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடைப்பதாக கூடலூர் வனக்கோட்ட வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது.
நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், சிறுத்தையின் இறப்பை உறுதி செய்துள்ளனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை குழுவினர், சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொண்டுள்ளனர்.
உடல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இதே தேயிலைத் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
இறந்தது சுமார் ஒரு வயதான பெண் சிறுத்தை என்றும், உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சமடைந்து வரும் நிலையில், தனியார் தேயிலைத் தோட்டங்களில் மர்மமான முறையில் சிறுத்தைகள் தொடர்ந்து இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.