சைபர் கிரைமில் ரூ.2 கோடி பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர்; கோவா, காஷ்மீரில் காதலியுடன் உல்லாச பயணம்..
நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டி அடிக்கடி பணத்தை பறித்து வருகின்றனர்.
இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் இக்குற்றங்களில் துப்பு துலங்க தனி சைபர் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. டெல்லி சைபர் பிரிவு போலீஸில் அன்குர் மாலிக் என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அவர் திடீரென ஒரு வாரம் மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றார். அதன் பிறகு அவர் பணிக்கு வரவில்லை. அவருடன் பணியாற்றிய மற்றொரு பெண் சப் இன்ஸ்பெக்டர் நேஹா புனியாவும் பணிக்கு வரவில்லை. இதையடுத்து போலீஸார் இருவர் குறித்து விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் குற்றவாளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம்..
அன்குர் மாலிக் சைபர் வழக்குகளை விசாரித்தபோது இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளார். அப்பணத்தில் இரண்டு கோடியை சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்தது.
சைபர் குற்றவாளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு யாரும் உரிமை கோரி வரப்போவதில்லை என்பதை தெரிந்து கொண்டு அப்பணத்தை அபகரிக்க அன்குர் திட்டமிட்டார்.
இதற்காக அன்குர் முதல் கட்டமாக தனது நண்பர்கள் மூலம் பணத்தை பறிகொடுத்தவர்கள் என்று கூறி மனு கொடுக்க செய்தார். அம்மனுக்களை காரணம் காட்டி அன்குர் மாலிக் கோர்ட் மூலம் பணத்தை அவர்களிடம் கொடுக்க அனுமதி வாங்கினார்.
அனுமதி கிடைத்தவுடன் ரூ.2 கோடியை எடுத்துக்கொண்டு தனது காதலி நேஹாவுடன் தலைமறைவாகிவிட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் அவர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் இரண்டு பேரும் இந்தூரில் இருப்பது தெரிய வந்தது.
உடனே போலீஸார் விரைந்து சென்று அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு தங்கம், ரூ.11 லட்சம் பணம், 10 மொபைல் போன்கள், சிம்கார்டுகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்தை தொடர்ந்து கையில் வைத்திருக்க முடியாது என்று கருதி தங்கமாக வாங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்தபோது இரண்டு பேரும் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு மத்திய பிரதேச மலைப்பிரதேசத்தில் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டு இருந்தனர் என்று தெரிய வந்தது.
பணத்துடன் வந்த உடன் இரண்டு பேரும் முதல் கட்டமாக கோவா, குலுமனாலி, காஷ்மீர் சென்று விடுமுறையை கழித்துள்ளனர். அதன் பிறகு மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளனர். மோசடி செய்த பணத்தை அன்குர் தனது நண்பர்கள் மொகமத், மோனு, சதீப் ஆகியோர் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்திருந்தார்.
அவர்கள் மூன்று பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
வேலியை பயிரை மேய்ந்த கதையாக சைபர் பிரிவு சப் இன்ஸ்பெக்டரே குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை அபகரித்துள்ளது கொடுமையானது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பயிற்சியில் தொடங்கிய நட்பு
அன்குர் மாலிக்கிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவரது மனைவி உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்தார். இதேபோன்று நேஹாவிற்கும் திருமணமாகிவிட்டது. அவரது கணவர் டெல்லி ரோஹினியில் வசித்து வந்தார்.
2021-ம் ஆண்டு இரண்டு பேரும் போலீஸ் பயிற்சியின் போது சந்தித்து அறிமுகமாகிக்கொண்டனர். அந்த நட்பு அவர்களுக்குள் தொடர்ந்தது. இதுவே நாளடைவில் காதலாக மாறியது. அதை தொடர்ந்து பணத்தை அபகரித்துக்கொண்டு தனியாக புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.