PBKS vs KKR: வாய்ப்பளித்த DRS; வாரிச்சுருட்டிய சஹல்; 33 ரன்களில் ஆட்டம் மாறிய கதை
ஐபிஎல் வரலாற்றிலேயே சாதனை ஆட்டமாக பஞ்சாப் vs கொல்கத்தா ஆட்டம் அமைந்திருக்குகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். பஞ்சாப்பில் ஸ்டாய்னிஸ், யஷ் தாகூரை கழற்றிவிடப்பட்டு ஜோஷ் இங்கிலிஷ், சேவியர் பார்லெட் ஆகியோர் பிளெயிங் லெவனில் இடம்பிடித்தனர். கொல்கத்தா அணியில் ஒரேயொரு மாற்றமாக மொயின் அலிக்குப் பதில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா உள்ளே வந்தார்.

இந்த சீசனில் வெற்றிகரமான ஓப்பனிங் கூட்டணியில் ஒன்றான ப்ரியன்ஸ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் காம்போ பஞ்சாப்புக்கு ஓப்பனிக் இறங்கியது. இந்த ஜோடி, முதல் 3 ஓவரில் விக்கெட் எதுவும் விடாமல் பவுண்டரியும், சிக்ஸருமாக 33 ரன்கள் அடித்ததும், இன்றைக்கு 200+ மேட்ச்சாக வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை உடைக்கும் வகையில் 4-வது ஓவரில் பிரின்ஸ் ஆர்யாவையும், கேப்டன் ஸ்ரேயாஸையும் பெவிலியனுக்கு அனுப்பினார் ஹர்ஷித் ராணா.

இந்த இடத்தில் சரிந்த பஞ்சாப்பை யாருமே மீட்கவில்லை. இந்த மொமென்ட்டை சரியாகப் பயன்படுத்தியா கேப்டன் ரஹானே, வருண் சக்கரவர்த்தியிடம் பந்தைக் கொடுக்க, அதற்கு கைமேல் பலனாக 5-வது ஓவரில் ஜோஷ் இங்கிலிஷின் விக்கெட்டும் விழுந்தது. அதையடுத்து, ஹர்ஷித் ராணா வீசிய 6-வது ஓவரில் பேக் டு பேக் சிக் அடித்து நிலைமையை சரிசெய்ய முயன்ற பிரப்சிம்ரன் அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். பவர்பிளேலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களில் தடுமாறியது.
இரண்டு ஓவர்களாக விக்கெட் விடாமல் தப்பித்துக் கொண்டிருந்த பஞ்சாப்புக்கு, 9-வது ஓவரில் நேஹல் வதேராவை விக்கெட் எடுத்தார் நோர்க்கியா. அடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல்லை வருண் சக்ரவர்த்தி விக்கெட் எடுக்க, அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலும் கடைசி பந்திலும் விக்கெட் எடுத்து அசத்தினார் சுனில் நரைன். 11 ஓவர்களில் 86 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப்.

அதன்பிறகு, 4 ஓவர்களாக பஞ்சாப்பின் கடைசி நம்பிக்கையாக ஆடிக்கொண்டிருந்த ஷஷாங் சிங், வைபவ் அரோரா வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டாக, அடுத்த இரண்டாவது பந்திலேயே பார்லெட் ரன் அவுட் ஆனதும் 111 ரன்களோடு பஞ்சாப்பின் பேட்டிங் முடிவுக்கு வந்தது. கொல்கத்தாவில், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.
111 ரன்கள்தான் அடித்திருக்கிறோம், இனி இழப்பதற்கு எதுவுமில்லை, முடிந்தால் ஜெயிக்கட்டும் என ஒரு முடிவோடுதான் ஸ்ரேயாஸ் அண்ட் கோ ஃபீல்டிங் இறங்கியது. அதற்கேற்றாற்போலவே, முதல் ஓவரிலேயே சுனில் நரைனின் விக்கெட்டை மார்கோ யான்சென் எடுக்க, அடுத்த ஓவரிலேயே டி காக்கின் விக்கெட்டை பார்லெட் தூக்கினார்.

2 ஓவரிலேயே 12 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து பஞ்சாப் நல்ல மொமன்ட்டம் கிரியேட் செய்தது. ஆனால், அடுத்து கைகோர்த்த கேப்டன் ரஹானேவும், இம்பேக்ட் பிளேயர் அங்க்ரிஷ் ரகுவன்ஷியும் பார்ட்னர்ஷிப் போட்டு 50 ரன்களைக் கடந்தனர். 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அவ்வளவுதான் மேட்ச் நமக்குதான் என கொல்கத்தா ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
அந்த நேரத்தில்தான், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அனுபவம் வாய்ந்த சஹலிடம் பந்தை அல்ல மேட்ச்சையே ஒப்படைத்தார் ஸ்ரேயாஸ். 8-வது ஓவரில் எல்.பி.டபிள்யு முறையில் ரஹானே அவுட். ரிவ்யூ கேட்டிருந்தால் நிச்சயம் ரஹானேவின் விக்கெட் போயிருக்காது. ஆனால், ரஹானே ரிவ்யூ கேட்காமல் போக, அந்த மொமென்ட்டை பஞ்சாப் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

ரஹானே அவுட்டாகும்போது, கொல்கத்தா 62 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 12 ஓவர்களில் 50 எடுத்தால் வெற்றி. வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஸல், ரமன்தீப் சிங் என பிராபர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருந்தனர். ஆனாலும், பஞ்சாப் அந்த அதிசயத்தை நிகழ்த்தியது. 9-வது ஓவரை மேக்ஸ்வெல்லிடம் கொடுத்து பிரஷர் ஏத்திய ஸ்ரேயாஸ், 10-வது ஓவரை மீண்டும் சஹலிடம் கொடுத்தார். வீசப்பட்ட முதல் பந்திலேயே ரகுவன்ஷி காலி. அடுத்த ஐந்து பந்துகளும் டாட்.

கொல்கத்தா பதட்டப்படுவதைப் பார்த்த ஸ்ரேயாஸ், மீண்டும் மேக்ஸ்வெல்லிடம் பந்தைக் கொடுக்க, பேட்டிங்கில்தான் ரன் அடிக்கவில்லை, ஓவரையாவது நன்றாக வீசுவோம் என, வெங்கடேஷ் ஐயரை எல்.பி.டபிள்யு முறையில் விக்கெட் எடுத்தார். 12-வது ஓவரில் சஹல் பந்தை எதிர்கொள்ளவே திணறிய ரிங்கு சிங் தேவையில்லாமல் இறங்கி ஆட முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்த பந்தியிலேயே ரமன்தீப் சிங்கும் மோசமான ஷாட் ஆடி அவுட்டானார்.
ரஹானேவின் விக்கெட்டுக்குப் பிறகு வெறும் 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கொல்கத்தா. முழுக்க பதட்டமும், மோசமான ஷாட்டும்தான் கொல்கத்தாவின் இந்த நிலைக்கு காரணம். 12 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவிந்திருந்தது கொல்கத்தா. 8 ஓவர்களில் 35 அடித்தால் கொல்கத்தா வெற்றி. பேட்ஸ்மேன் என்று சொல்ல ரஸல் மட்டும்தான் களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பந்துவீச வந்த யான்சென், 8-வது விக்கெட்டாக ஹர்ஷித் ராணாவையும் தூக்கினார். சஹலுக்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. எதிர்பார்த்தது போல 14-வது ஓவரை அவரிடமே ஒப்படைத்தார் ஸ்ரேயாஸ். முதல் பந்திலேயே இன்சைட் எட்ஜில் போல்டாவதிலிருந்து தப்பித்த ரஸல், அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என ரன்னை கிடுகிடுவென 95-ஆக உயர்த்தினார்.

அடுத்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், முதல் 5 பந்துகளில் வைபவ் அரோராவை நிற்க வைத்து டாட் ஆக்கி கடைசி பந்தில் அவரையும் விக்கெட் எடுத்தார். 9 விக்கெட்டுகள் காலி. ஒரேயொரு விக்கெட்தான் மிச்சம். ஸ்ட்ரைக்கில் ரஸல் நிற்க 16-வது ஓவரின் முதல் பந்தையே யார்க்கர் வீசி அவரை க்ளீன் போல்டாக்கினார் யான்சென். 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றி. சாத்தியமில்லாத வெற்றியை சாதித்துக் காட்டினார்கள் பஞ்சாப் பவுலர்கள். நான்கு ஓவர்கள் வீசி வெறும் 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.