ரணில் விக்கிரமசிங்க: கைது செய்யப்பட்டாரா இலங்கை முன்னாள் அதிபர்... பின்னணி என்ன?
Pregnancy Robot: பெண்ணே வேண்டாம்; சீனாவின் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ரோபோட் - 2026-ல் வருகிறதா?
இன்னும் சில ஆண்டுகளில் கர்ப்பமாகக் கூடிய மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்த உள்ளது சீனா. உடலுறவு மூலம் அல்ல, குழந்தையை சுமக்கக்கூடிய செயற்கையான கருப்பையைக் கொண்டிருப்பதன் மூலம்.
சீனாவின் குவாங்சோ நகரில் உள்ள கைவா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்தான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தலைமை தாங்கும் டாக்டர் ஜாங் கிஃபெங், பெய்ஜிங் ரோபோட் மாநாட்டில், இதனை சாத்தியப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதாகக் கூறியுள்ளார்.
கருப்பையை ஒரு ரோபோவின் வயிற்றில் வைப்பது மட்டுமே பாக்கி என்றும் கூறியிருக்கிறார். இந்த தொழில்நுட்பத்தால் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது மாறும் என்கின்றனர்.
Pregnancy Robot எப்படி செயல்படும்?
ரோபோவின் வயிற்றுக்குள் வைக்கப்படவுள்ள இயந்திரம் முழுக்க முழுக்க உண்மையான கருப்பையை நகல் எடுத்து செயல்படுவதுபோல செயற்கையாக உருவாக்கப்படும்.
இதில் செயற்கை அம்னோடிக் திரவம் நிரப்பப்பட்டிருக்கும் மற்றும் ஒரு குழாய் தொப்புள் கொடியாகச் செயல்பட்டு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும்.
இதற்கு முன்னர் 2017ம் ஆண்டு, அமெரிக்க விஞ்ஞானிகள் குறை பிரசவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டிகளை இதேப்போல உயிரி-பைகள் என்ற அமைப்பை உருவாக்கி அதில் அதிக நாட்கள் உயிருடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது டாக்டர் ஜாங் கிஃபெங்கின் குழுவினர் கருவையே ரோபோவில் வைத்து வளர்க்க முயற்சிக்கின்றனர். 10 மாதங்களும் குழந்தையை ரோபோ சுமக்கும். வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வதை விட இந்தமுறையில் செலவு குறைவு என்கின்றனர். தற்போதைய தகவல்களின்படி, 1,00,000 யுவான் இந்தியா மதிப்பில், சுமார் 12 லட்சம் செலவாகலாம்!
இந்த கண்டுபிடிப்புக்கான தேவை என்ன?
சீனாவில் மனிதர்களிடையே கருவுறாமை அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டு சுமார் 12% தம்பதிகள் கருவுறாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 2018ல் இது 18% ஆக அதிகரித்துள்ளது.
பலருக்கும் செயற்கை கருவுறுதல், ஐ.வி.எஃப் முயற்சிகள் பலனளிக்காமல் போயிருக்கின்றன. இத்தகைய குடும்பங்களுக்கு பலனளிக்கலாம் என்பதனால் இந்த தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு உள்ளது. அதேபோல சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர்.
சிலர் எதிர்ப்பது ஏன்?
கருவை சுமக்க இயந்திரங்களை நாடுவது குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை பாதிக்கும் என்றும் சமூகம் பெற்றோரை பார்த்த விதத்தை மாற்றும் என்றும் கூறுகின்றனர்.
பெண்ணிய சிந்தனையாளர் ஆண்ட்ரியா டுவொர்கின் ஒருமுறை செயற்கை கருப்பைகள் "பெண்களின் முடிவை" குறிக்கும் என்று கூறியதைக் குறிப்பிடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் கைவா டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம், "பெற்றோராக யார் கருதப்படுகிறார்கள்? ரோபோவால் பிறந்த குழந்தைக்கு என்ன உரிமைகள் உள்ளன? கருமுட்டை யாரிடம் இருந்து பெறப்படும்? முட்டைகள், விந்து அல்லது கருப்பை இயந்திரங்களின் கறுப்புச் சந்தையை எவ்வாறு நிறுத்துவது?" போன்ற சட்டப்பூர்வ கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மனிதர்களின் சட்டங்களையும் இயற்கையின் விதிகளையும் மீறி வேகமாக வளருகிறது அறிவியல். இந்த தொழில்நுட்பம் குழந்தை பிறப்பை பண்டமாக்குவதாகவும், மனித பிணைப்பின் முக்கியத்துவத்தை மங்கச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது பரவலாக்கப்பட்டால் கர்ப்பம் என்பது இயற்கையான வாழ்வியல் நிகழ்வாக அல்லாமல் சமாளிக்க வேண்டிய நோயைப் போல பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர். மறுபுறம் 2026க்குள் முதல் குழந்தை ரோபோவிடமிருந்து பிறப்பதை காண ஆவலாக தயாராகி வருகிறது தொழில்நுட்ப உலகம்!