Champions Trophy 2025: இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறும் - வதந்திகளு...
Rishabh Pant : `நம்மள காப்பாத்த நாமதான் சண்ட செய்யணும்!' - ஆஸி வீரர்களை மிரள வைத்த பண்ட்
'Stupid...Stupid...Stupid...' மெல்பர்ன் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் தாறுமாறாக ஷாட் ஆடி அவுட் ஆன போது வர்ணனையில் இருந்த கவாஸ்கர் இப்படித்தான் கடுகடுத்திருந்தார். இன்றைக்கு அதே ரிஷப் பண்ட் அதே 'Stupid' வகை ஆட்டத்தை ஆடியே ஆஸ்திரேலியாவை மிரள வைத்திருக்கிறார்.
4 ரன்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியபோது இந்திய பேட்டர்களிடம் ஒருவித துடிப்பு தெரிந்தது. கடந்த இன்னிங்ஸ்களைவிட அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது. அட்டாக்கிங்காக ஆடி வேக வேகமாக ரன்கள் அடிக்க முயன்றனர். ஆனால், அந்த அணுகுமுறை பலருக்கும் செட் ஆகவில்லை. ராகுல், ஜெய்ஸ்வால், கோலி என முக்கிய பேட்டர்கள் எல்லாம் அடுத்தடுத்து அவுட் ஆகி சென்றனர். ஆனால், இந்த அணுகுமுறையை பண்ட் அநாயசமாக கைகொண்டு ஆடினார். ஏனெனில், அவரின் இயல்பான ஆட்டமே அதுதான். மற்ற வீரர்களெல்லாம் சிரத்தை எடுத்து அதிரடியாக முயன்ற நிலையில், பண்ட் மட்டும் விலங்குகள் அறுபட்ட ஒருவித விடுதலை பெற்ற மனநிலையோடு ஆடத் தொடங்கினார்.
ஆஸ்திரேலியாவின் அபாயகரமான பௌலராக விளங்கும் போலண்ட்டை எதிர்த்து தனது இன்னிங்ஸின் முதல் பந்தை சந்திக்கிறார். எந்த பதற்றமும் இல்லாமல் அதை அப்படியே மடக்கி லாங் ஆனால் சிக்சராக்குகிறார். அப்போதே ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. பேட் கம்மின்ஸ் பீல்டர்களை அவுட் பீல்டில் பரப்பி நிற்க வைக்கிறார். ஆனால், பண்ட் ஓயவில்லை. அறிமுக வீரரான வெப்ஸ்டரின் ஓவரை குறிவைத்து அடித்து வெளுக்கிறார். அணியில் இருப்பதிலேயே அனுபவ வீரரான ஸ்டார்க்கையும் விட்டு வைக்கவில்லை. அவரின் பந்திலும் ஸ்கொயரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.
பும்ராவின் பந்துவீச்சுக்குப் பிறகு நடப்புத் தொடரில் இந்திய ரசிகர்களை உற்சாகமடைய வைத்த பெர்பார்மென்ஸ் பண்ட்டினுடையதுதான். 33 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 184. சில சமயங்களில் பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 220 க்கும் மேல் எல்லாம் இருந்தது.
'மற்ற வீரர்கள் 50 அல்லது அதற்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த பிட்ச்சில் பண்ட் 184 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கும் இன்னிங்ஸ் அசாத்தியமானது. முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய பௌலர்களை மிரள வைத்துவிட்டார்.பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். அவரின் பேட்டிங்கை பார்ப்பது எப்போதுமே அலாதியான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும்.' என சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருக்கிறார்.
ரசிகர்களும் ரிஷப் பண்ட்டை கொண்டாடி வருகின்றனர். பண்ட்டின் இன்னிங்ஸை பார்க்கையில் ஒரு டெஸ்ட் போட்டியை இப்படி அணுகலாமா எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆனாலும் அவர் ஆஸ்திரேலிய பௌலிங் யூனிட்டை நிலைகுலைய வைத்திருக்கிறார். இதை இந்தத் தொடரில் பெரும்பாலான இந்திய பேட்டர்கள் செய்யவில்லை. பெரும்பாலும் அடிவாங்கும் இடத்தில்தான் இருந்திருக்கின்றனர். அதனால்தான் ரிஷப் பண்ட் அடித்த இந்த அடி இலக்கணங்களை மீறி கொண்டாடப்படுகிறது. பண்ட்டின் அதிரடியால் இந்திய அணி இப்போது 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. சிட்னியில் கடந்த 24 வருடங்களில் ஒரே ஒரு முறைதான் 200+ டார்கெட் சேஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஆக, இந்திய அணி 200-250 ரன்கள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.