கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின...
Sangeetha: `25 வருட இடைவெளிக்குப் பிறகு' - கம்பேக் கொடுக்கும் `பூவே உனக்காக' சங்கீதா
25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் நடிகை சங்கீதா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வந்த நேரத்திலேயே `பூவே உனக்காக' சங்கீதா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். `பூவே உனக்காக' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சரவணனை இவர் திருமணம் செய்துகொண்டார்.

ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சிம்புவைக் கதாநாயகனாக வைத்து `சிலம்பாட்டம்' படத்தையும் இயக்கி இயக்குநராகவும் களமிறங்கினார் சரவணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் நடித்திருந்த திரைப்படத்தின் மூலம் நடிப்புக்குக் கம்பேக் கொடுத்தார் சங்கீதா.
அதன் பிறகு மீண்டும் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு 2023-ம் ஆண்டு வெளியான `சாவெர் (Chaveer)' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சில மலையாளப் படங்களிலும் நடித்தார் சங்கீதா. தமிழில் எப்போது கம்பேக் கொடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு `நல்லக் கதை அமைஞ்சா நிச்சயமா தமிழிலும் கம்பேக் கொடுப்பேன்." என முன்பு பேட்டியிலும் கூறியிருந்தார். தற்போது 25 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் சங்கீதா.

பரத் நடிப்பில் கடந்த 2018 ஆண்டு `காளிதாஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார் நடிகை சங்கீதா. இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கிறார் சங்கீதா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கும் இப்படத்தில் பவானி ஸ்ரீ, அபர்னதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.