மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
Sexual Wellness: `கற்பனையிலும் இதை செய்யாதீர்கள்' -எச்சரிக்கும் மருத்துவர் | காமத்துக்கு மரியாதை-236
காற்றின் மொழி படத்தில், ஆர்.ஜே-வாக வேலைபார்க்கும் ஜோதிகாவிடம் 'பெண்களோட மார்பை பார்க்கிறேன்' என்று வருத்தப்படுவார் ஓர் ஆண். அதாவது, சம்பந்தப்பட்டப் பெண்களுக்கு உடலளவில் எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார். ஆனால், 'தான் நாகரீகமற்ற ஒரு செயலை செய்கிறோம்' என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.
இதைவிட பதற்றம் தருகிற நாகரீகமற்ற இன்னொரு விஷயம், வயது, உறவுமுறை, மரியாதைக்குரியவர்கள் என்கிற எந்தக் கட்டுப்பாடும் அற்று, தன் கண்களுக்குப் பிடித்த பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவது அல்லது வைத்துக்கொள்வதைபோல கற்பனை செய்து பார்ப்பது. இதுபற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ்.

''தனக்கு அறிமுகமான பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதைப்போல கற்பனை செய்கிற பிரச்னை, ஆண்கள் மத்தியில் எல்லா காலங்களிலும் இருக்கிறது. முன்பெல்லாம் தங்களுக்குப் பிடித்த நடிகைகளை, மாடல்களை இப்படி மனதுக்குள் கற்பனை செய்துகொள்வார்கள். ஆனால், அது ஆண்கள் வட்டத்தைத்தாண்டி பெரும்பாலும் வெளியே தெரியாது. 'தெரியுமா, இவன் அந்த நடிகையோட பயங்கரமான ஃபேன்' என்று ஒருவருக்கொருவர் கேலி செய்துகொள்வதோடு அது நின்றுவிடும். அதனால், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தருகிற அளவுக்கு, அந்த அத்துமீறலான கற்பனைகள் பிரச்னை ஏற்படுத்தியதில்லை.
ஆனால், சமீபகாலமாக இந்தப் பிரச்னையுடன் இருக்கிற ஆண்களை அதிகம் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை இப்போது போர்ன் வீடியோஸ் உள்ளங்கையிலேயே கிடைத்துவிட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 'என் தோழியை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், காதல் அளவுக்கு யோசித்ததில்லை. அவளுடன் உறவு வைத்துக்கொள்வதைபோல மனதுக்குள் பலமுறை நினைத்துப்பார்த்துவிட்டேன். அவளை நேரில் பார்க்கும்போதெல்லாம் எனக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கிறது டாக்டர்' என்றார் இளைஞர் ஒருவர்.

ஒருதலையாக காதலிக்கிற பெண்ணை, நண்பனின் மனைவியை அல்லது காதலியை, உடன் பணிபுரிகிற பெண்ணை என்று இந்த நாகரீகமற்ற கற்பனை இன்னும் நீண்டது. அந்த இளைஞரிடம், 'அந்தக் கற்பனையை இன்று முதல் செய்யாதீர்கள். என்னை நம்பி என்னுடன் நட்பாக இருக்கும் பெண்ணின் மரியாதையை கற்பனையிலும் கெடுக்க மாட்டேன்' என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நேரில் பார்க்கையில் இப்படிப்பட்ட கற்பனைகள் வருகின்றன என்றால், தோழியுடன் போனில் மட்டும் நட்பை தொடருங்கள்' என்றேன்.
இன்னோர் இளைஞர், 'என்னுடைய சகோதரி உறவில் இருக்கிற பெண்ணுடன் அடிக்கடி கற்பனையில் தவறாக நடந்துகொள்கிறேன் டாக்டர். எனக்கே அது தவறு என தெரிகிறது. என்றாலும், அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை நேரில் பார்க்கும்போதெல்லாம் கூச்சமாக இருக்கிறது. இந்த கற்பனையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அழுதார்.
நான் மேலே குறிப்பிட்ட ஆணுடைய பிரச்னையும் இவருடையதும் வேறு வேறு. சகோதரி முறை பெண்ணுடன் கற்பனையில் உறவு வைத்துக்கொள்வதை மருத்துவர்கள் (இன்செஸ்ட் incest) என்போம். இன்செஸ்ட் என்றால், சமூக கட்டமைப்பின்படி உறவு வைத்துக்கொள்ளக்கூடாத உறவுகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதுபோல கற்பனை செய்வது அல்லது செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவது.

அரிதிலும் அரிதாக, 'கோயிலில் சாமி கும்பிடும்போது செக்ஸ் உணர்வு வருகிறது. அம்மாவைப் பார்க்கையில் எனக்கு அந்த உணர்வு வருகிறது' என்று கதறி அழுகிற ஆண்களையும் சந்தித்திருக்கிறேன். இதுவும் இன்செஸ்ட் தான்.
உலக அளவில் பாலியல் மருத்துவர்கள், இந்த எண்ணங்கள் வருவது வரைக்கும் தவறில்லை. ஆனால், இந்த விருப்பத்தை செயல்படுத்த முயற்சி செய்தால், அது சட்டப்படி தவறு என்று அறிவுறுத்துவோம். கூடவே, அந்தக் கற்பனையை மறுபடியும் செய்யாமல் இருப்பதுதான் உங்கள் குற்றவுணர்விலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி என்று எடுத்து சொல்வதுடன், அவர்களுக்குத் தேவையான கவுன்சலிங்கும் கொடுத்து அனுப்புவேன். உங்களுடன் உறவில் இல்லாத பெண்களின் மரியாதையை கற்பனையிலும் கெடுக்காதீர்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.