SIR எதிர்ப்பு: ராகுல் காந்தியின் முயற்சி To INDIA கூட்டணியின் திட்டங்கள் வரை! - என்ன நடக்கிறது?
இன்னும் சில மாதங்களில் பீகார், அதன் பின்னர் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையம் 'வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)' மேற்கொண்டு வருகிறது. தற்போது பீகாரில் தொடங்கிய இந்தத் திருத்தம் இந்தியளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரில் மட்டும் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் இந்த திருத்தத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
ராகுல் காந்தியின் முயற்சி:
பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் பெயரே வாக்காளர் பட்டியலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக எழுந்தக் குற்றச்சாட்டு, அரசியல் அரங்கிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை தகர்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இதற்கிடையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 'இந்தியா கூட்டணி'யை மீண்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முயன்று வருகிறார்.
அதன் ஒருபகுதியாக வரும் வியாழக் கிழமை (7-ம் தேதி) ராகுல் காந்தியின் இல்லத்தில் 'இந்தியா கூட்டணி'யின் தலைவர்கள் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்:
இந்த சந்திப்பின் போது பீகாரில் செயல்படுத்தப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், துணைக் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. BRS, YSRCP, BJD, AAP போன்ற சில கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
அதனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் இருக்காது என கூட்டணிக் கட்சிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மம்தா உறுதி:
பீகாருக்குப் பிறகு வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்து மேற்கு வங்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கடந்த ஆண்டு இந்தியா கூட்டணியிலிருந்து விலகியிருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பேரணி:
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை (8-ம் தேதி) வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற விவாதம்:
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ’பிரையன் தன் எக்ஸ் பக்கத்தில், ``SIR (மௌனமான கண்ணுக்குத் தெரியாத மோசடி) வாக்குத் திருட்டு தொடர்பாக இரு அவைகளிலும் எளிதாக விவாதிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் பா.ஜ.க பயந்து நடுங்குகிறது. ஆகஸ்ட் 4 திங்கள் முதல், நடுங்கும் மோடி கூட்டணிக்கு அதை எவ்வாறு விவாதிக்க முடியும் என்பதைக் கற்பிக்க, நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளில் இலவச பயிற்சிகளை வழங்குவோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று அரசின் சபை மேலாளர்கள் பலமுறை கூறியிருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அவையில் விவாதிக்க முடியாது என்ற முன்னாள் மக்களவை சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் முடிவை பா.ஜ.க மேற்கோள் காட்டுகிறது.
மேலும், " நாடாளுமன்ற விதிகளின்படி தேர்தல் ஆணையம் தொடர்பான விவாதத்தை அனுமதிக்க முடியுமா என்பதை தலைமை அதிகாரிகள் (நாடாளுமன்றத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள்) முடிவு செய்ய வேண்டும்" என நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.