மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்
Sitanshu Kotak: இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர்? - யார் இந்த சிதான்ஷு கோடக்
இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 0-3 தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணி இப்படி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணிக்கு பிரத்யேகமாக பேட்டிங் பயிற்சியாளர் என்று யாரும் இல்லை.
கம்பீருக்கு உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரயான் டென் டோசேட் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கல் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
யார் இந்த சிதான்ஷு கோடக்?
சிதான்ஷு கோடக் சவுராஷ்டிராவைச் சேர்ந்தவர். 1992 முதல் 2012 வரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 130 முதல் தர போட்டிகளில் விளையாடி 15 சதங்கள் மற்றும் 55 அரை சதங்கள் உட்பட 8,061 ரன்களைக் குவித்திருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 89 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 26 அரை சதங்களுடன் 42.23 சராசரியில் 3,083 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட் 9 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் எடுத்திருக்கிறார்.
முதல்தர கிரிக்கெட்டில் 70 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கோடக் ஒரு சிறந்த பந்துவீச்சாளராகவும் செயல்பட்டிருக்கிறார். 2013ஆம் ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், அதன்பின் தொடரந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்த இவர் அதில் பல்வேறு பொறுப்புகளையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகி, தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போது, இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை சிதான்ஷு கோடக் பெற்றார். மேலும் 2020-ல் சவுராஷ்டிரா அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஐபிஎல் (2017) இல் குஜராத் அணிக்கு உதவி பயிற்சியாளராக பணியாற்றினார் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் கேப்டன்சியின் கீழ் 2023 அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் T20 அணிக்கு பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.