`Sugar-Free', `No Added Sugar' -இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறுவதற்கான முதல் அடி சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதுதான். அதிகப்படியாக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துவதுடன், நாளடைவில் நீரிழிவு நோய் மற்றும் பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும். அடிப்படை உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பலகாரங்கள், குளிர்பானங்களையும் குறைக்க வேண்டும்.
சர்க்கரை குறைவான, இரத்தத்தில் உடனடியாக கலக்காத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சவாலான காரியமாக தோன்றினாலும், அதற்கு பழக்கப்படுத்திக்கொள்வது எளிதுதான்.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பே நாம் உட்கொள்ளும் உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். இதில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நபர்களுக்கு கூட சரியான உணவை தேர்ந்தெடுப்பதில் எப்போதும் குழப்பம் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குழப்பம் Sugar Free மற்றும் no added sugar எனக் குறிப்பிட்டிருக்கும் பொருள்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான்.
பலரும் இந்த இரண்டுமே சர்க்கரை இல்லாததை குறிப்பதுதான் என நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை என்ன?
Sugar Free
ஹாவர்ட் ஹெல்த் பப்ளீஷிங் (Harvard Health Publishing) கூறுவதன்படி, சுகர் ஃப்ரீ பொருள்களில் ஒருமுறை உட்கொள்வதில் (One Serving) 0.5 கிராம் அளவு சர்க்கரை இருக்கும்.
இந்த பொருள்களில் சர்க்கரை சேர்க்கப்படாவிட்டாலும் ஆஸ்பர்டேம் (Aspartame), ஸ்டெவியா (Stevia) போன்ற செயற்கை இனிப்புகள் இருக்கும். இதனால் நம்மால் இனிப்பு சுவையை உணர முடியும் ஆனால் கலோரிகள் அதிகரிக்காது.
சில சுகர் ஃப்ரீ பொருள்களில் இயற்கையான சர்க்கரை இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் கலோரிகள் இருக்கும்.
No Added Sugar
தேசிய சுகாதார நிறுவனம் கூறிவதன்படி, நோ ஆடட் சுகர் (No Added Sugar) என குறிப்பிட்டுள்ள உணவுப்பொருள்கள் தயாரிப்பின் போதும், பக்குவப்படுத்துதலின் போதும் சர்க்கரை சேர்க்கப்படாது. செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படாது. ஆனால் மூலப்பொருளில் உள்ள சர்க்கரை அப்படியே இருக்கும்.
உதாரணமாக Kellogg’s Muesli No added sugar என்ற உணவை எடுத்துக்கொண்டால், அதிலிருக்கும் ஓட்ஸ் மற்றும் இதர பொருள்களின் இனிப்பு சுவை அப்படியே இருக்கும். ஆனால் செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்காது.
எது ஆரோக்கியமானது?
Sugar Free அல்லது No Added Sugar இரண்டையுமே நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சுகர் ஃப்ரீயை தொடக்கத்தில் கொஞ்ச நாள்களுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதாவது நம் இனிப்பு உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் வரை செயற்கையான இனிப்புகளை நாடியிருக்கலாம். ஏனெனில் ஆய்வுகள், நீண்ட கால நோக்கில் செயற்கை இனிப்பான்களையும் கட்டுப்ப்படுத்தி `நோ ஆடட் சுகர்' பொருள்களைப் பயன்படுத்துவதே சிறந்த தேர்வாக முன்வைக்கின்றன.
சர்க்கரையை கட்டுப்படுத்த சந்தையில் பல பொருள்கள் வந்துவிட்டதாலே நாம் சர்க்கரையைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. குறைந்த அளவில் நாம் தினமும் சர்க்கரை எடுத்துக்கொள்வதால் எந்த பிரச்னையும் வராது. ஆனால் சர்க்கரையின் அளவு குறித்தும் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!