Suriya: 'நண்பன்', 'முகமூடி', 'சென்னையில் ஒரு மழைக்காலம்' - சூர்யா தவறவிட்ட திரைப்படங்களின் லிஸ்ட்!
சூர்யாவின் 50-வது பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'கருப்பு' திரைப்படத்தின் டீசரும் இன்று வெளியாகியிருந்தது. சரவணனாக அந்த டீசரில் அதகளப்படுத்தியிருந்தார் சூர்யா.

அத்தோடு சஞ்சய் ராமசாமியின் ரெஃபரென்ஸ், அதிரடி சண்டைக் காட்சிகள் என இந்தப் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு அடிப்பொலி ட்ரீட் கொடுத்திருக்கிறார் சூர்யா. 'கருப்பு' படத்தைத் தொடர்ந்து 'சூர்யா 46' படக்குழுவும் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லி அவரின் தோற்றத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
விபத்தாகத்தான் நடிகர் சூர்யாவின் சினிமா பயணம் தொடங்கியது. அது குறித்து நடிகர் சிவக்குமாரே விரிவாக 'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்திருந்தார்.
இயக்குநர் வசந்த் கண்ணில் ஒரு நாள் எதேச்சையாகத் தோன்றியிருக்கிறார் சூர்யா. அவரை 'நேருக்கு நேர்' படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டு நடிகர் சிவக்குமாரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அப்போதே சூர்யாவுக்கு சினிமா மீது துளியும் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறது. பிறகு சூர்யாவைச் சமாதானம் செய்து லுக் டெஸ்ட் செய்து அவரை நடிக்க வைத்தார். அப்படித்தான் சினிமாவுக்கு வந்தார் சூர்யா.
பெரிதளவில் நாட்டமில்லாமல் சினிமாவிற்குள் வந்தாலும் ஒவ்வொரு படிப்பினைகளில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
உச்ச நடிகர்கள் பலரும் தங்களுடைய கரியரில் சில படங்களை தவிர்க்க முடியாத சில காரணங்களால் தவறவிட நேரிடும். அப்படி நடிகர் சூர்யா தன்னுடைய கரியரில் தவறவிட்ட , அவர் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா...
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்குநராக அறிமுகமான 'இயற்கை' திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு சூர்யாவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
ஆனால், அப்போது 'உன்னை நினைத்து', 'மௌனம் பேசியதே' போன்ற காதல் கதைகளில் தொடர்ந்து வந்ததால் 'இயற்கை' படத்திற்கு சூர்யா ஓகே டிக் அடிக்கவில்லை.

பிறகு, படத்தில் ஷ்யாம் கதாநாயகனாக நடித்தார். அதுபோல, 'சண்டகோழி' படத்தின் கதையை சூர்யாவுக்கு வந்திருக்கிறது.
முதலில் 'சண்டகோழி' படத்தின் கதையை விஜய்க்குத்தான் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. விஜய் அப்படத்திற்கு ஓகே சொல்லாத காரணத்தால் இரண்டாவது சாய்ஸாக சூர்யாவுக்கு அப்படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
அதுவும் சரியாக அமையாததால் விஷாலை கதாநாயகனாக லிங்குசாமி அறிமுகப்படுத்தினார்.
சூர்யா - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'காக்க காக்க' படத்திற்குப் பிறகு அதே கூட்டணி 'சென்னையில் ஒரு மழைக்காலம்' என மற்றுமொரு படத்திற்கு இணைந்தது.
சூர்யா, அசின், டேனியல் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக ஸ்டில்ஸும் வெளியாகின. ஆனால், இத்திரைப்படம் பிறகு கைவிடப்பட்டது.
மீண்டும் இதே கூட்டணி இணைந்து 'வாரணம் ஆயிரம்' என்ற ஹிட் திரைப்படத்தைக் கொடுத்தார்கள்.

'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திற்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி 'துருவ நட்சத்திரம்' படத்தில் அமையவிருந்தது. சில காரணங்களால் பிறகு விக்ரம் நடிப்பில் இப்படம் தயாரானது.
இத்திரைப்படத்தின் ரிலீஸுக்கும் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இயக்குநர் கௌதம் மேனனும் கூடிய விரைவில் திரைப்படம் வெளியாகிவிடும் என உறுதியளித்திருக்கிறார்.
டோலிவுட்டின் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமௌலி. இவருடைய இயக்கத்திலும் சூர்யா ஒரு படத்தில் நடிக்க வேண்டியதாம்.
அந்த வாய்ப்பு அப்போது நடக்காமல் தவறிவிட்டது என 'கங்குவா' படத்தின் ப்ரோமோஷன் வேளையில் சூர்யா தெரிவித்திருந்தார்.
'3 இடியட்ஸ்' படத்தின் கதையை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தபோது இயக்குநர் ஷங்கருக்கு ஹீரோவாக விஜய்யை நடிக்க வைக்கத்தான் முடிவு செய்திருக்கிறார்.

ஆனால், அந்த வாய்ப்பு முதலில் விஜய்யிடமிருந்து நழுவும் தருணம் வரைச் சென்றதாம். அவருக்குப் பிறகு படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்கெல்லாம் பிறகு, விஜய்யே மீண்டும் இத்திரைப்படத்திற்குள் வந்திருக்கிறார். இந்தத் தகவலை சமீபத்தில் நடிகர் ஜீவா பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
'சிங்கம் 3' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹரியுடன் சூர்யா 6-வது முறையாக இணையவிருந்தார். படத்திற்கு 'அருவா' எனப் பெயரிட்டு அறிவிப்பையும் அப்போது வெளியிட்டிருந்தார்.
கொரோனா ஊரடங்கு பிறப்பித்தவுடன் அத்திரைப்படம் அடுத்தக் கட்டங்களுக்கு நகராமல் கைவிடப்பட்டது.

'ரத்த சரித்திரம்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம் கோபால் வர்மா தயாரிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சூர்யா 'பிசினஸ்மேன்' படத்தில் நடிக்கவிருந்தார்.
இத்திரைப்படத்தின் கதையும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு கதாநாயகனைக் கோரியதால் படத்திற்குள் சூர்யாவைக் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். பிறகு, மகேஷ் பாபு அப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் சூர்யாதான் முதலில் 'முகமூடி' திரைப்படத்தில் நடிக்க வேண்டியதாம். பிறகுதான் அப்படம் ஜீவாவின் வசம் சென்றதாம்.
இந்தத் தகவலை தயாரிப்பாளர் தனஞ்செயனே பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படத்தில் முதலில் சூர்யாதான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது.

சூர்யாவைக் கதாநாயகனாக வைத்து முதல் கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார்கள்.
அதன் பிறகு, சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அருண் விஜய் நடிப்பில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சூர்யா வந்து படக்குழுவை வாழ்த்துச் சென்றிருந்தார்.