Travel Contest: 'இந்திய வரலாற்றின் கருவறை' - காந்தி விட்டுச்சென்ற சபர்மதி ஆசிரமம் எப்படி இருக்கிறது?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
“உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டார்
உயிர்கள் உன்னை வணங்கும்”
“ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்,
அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்,
இதை எல்லாவற்றையும் அறிந்த
மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்”
என்ற கண்ணதாசனின் வரிகள் நாம் எல்லோருக்கும் பொருத்தமான ஒன்றாகும்.
ஆம், பொதுவாக நம்மைச் சுற்றி நடக்கும் பெரும்பாலான விஷயங்கள் குறித்து நாம் எப்போதும் சிந்திப்பதே இல்லை.
அப்படி ஒரு சில விஷயங்களை நான் சிறுவயது முதலே பார்த்து வந்தாலும் அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்னவென்பதை நான் தெரிந்து கொள்ள, எனது தாத்தா திரு.ஞானசம்பந்தனுடன் ஒரு நீண்ட நேரம் உரையாடினேன்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் நாம் தினமும் பயன்படுத்தும் பணம் பற்றியது.
“தாத்தா, நான் நினைவு தெரிந்து நாள் முதலே நாம் எல்லோரும் உபயோகிக்கும் பணத்தில் நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் முகத்தை மட்டும்தான் பார்த்து வருகிறோம்.
எண்ணற்ற தேசத்தலைவர்கள் நம் நாட்டிலிருந்தாலும் ஏன் மகாத்மா காந்தியின் முகம் மட்டும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளது?" என்று தாத்தாவிடம் கேட்டேன்.
சுதந்திரத்திற்கு முன்பாக ரூபாய் நோட்டில் என்ன என்ன சின்னங்கள் இருந்தது என்பதைப் பற்றியான வரலாற்றை எடுத்துரைத்தார்.
பிறகு, “ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவப்படம் வரையப்பட்டது அல்ல” என்று தாத்தா கூறியது மிகவும் எனக்குப் புதிதாகத் தோன்றியது.
ஆம் தோழர்களே, ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியின் புகைப்படம் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைசிராய் இல்லத்தில் எடுக்கப்பட்ட அசல் படத்திலிருந்து வெட்டப்பட்டதாகும்.
மகாத்மா காந்தியின் புகைப்படம் மட்டுமின்றி வேறு சில தலைவர்களின் படங்களையும் வைக்க நாடு முழுவதும் சில குரல்கள் எழுந்தன.
மகாத்மா காந்தியை விட வேறு எந்த ஆளுமையும் நாட்டின் நெறிமுறைகளைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது” என்று முடிவெடுத்தார்கள்.

ஆங்கிலேயரின் அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவித்து இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பெரும் பங்கு வகித்தவர் மகாத்மா என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
குழந்தைகள் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் அப்படியே ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். எனது வாழ்விலும் அப்படி ஒன்று நடந்தது.
எனது பள்ளிப் பருவத்திலிருந்தே எனது தாத்தா எப்போதுமே ஏதாவது ஒன்றை எழுதி, அதைப் பாட்டின் மூலமாக ஒரு பொது அறிவை எனக்கு விளக்கிக் கொண்டே இருப்பார்.
ஒரு நாள், நமது இந்தியச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், அவர்கள் வாழ்வியலைப் பற்றியும் பாடினார். மகாத்மா காந்தியைப் பற்றியும். நான் அவரிடம் இருந்தே நிறையத் தெரிந்து கொண்டேன்.
உண்மையிலேயே மகாத்மா காந்தி பிறந்த இடத்தை நேரில் பார்க்க வேண்டும் என்றெல்லாம் என் வாழ்நாளில் நான் ஒரு நாளும் நினைத்ததே இல்லை.
அதையும் மீறி இந்த இயற்கை எனக்கு எப்போதுமே சில புதையல்களை அள்ளிக் கொடுக்கிறது. எனது வாழ்வு மற்றவர்களை விட முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

“தனக்கொரு கொள்கை, அதற்கொரு தலைவன், தனக்கொரு பாதை, அதற்கொரு பயணம்” என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப இந்த இயற்கை விட்ட வழியிலே எப்போதும் பயணிப்பவள் நான்.
திடீரென்று பயணப்பட்ட ஒரு இடம்தான் குஜராத் மாநிலம். ஆம், குஜராத்தின் சாலை ஓரத்தில் உச்சி வெயிலில் நடந்து கொண்டிருந்தேன்.
என்னை மிகவும் பாதித்த ஒரு மாநிலம் குஜராத். சென்னையிலிருந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இறங்கிய உடனே வெளியே வந்து, நான் பார்த்தது சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவச்சிலை மட்டுமே. ஆனால், நான் மகாத்மா காந்தியை எதிர்பார்த்தேன்.
அந்த மாநிலத்தில் காந்தியை முன்னிலைப்படுத்துவது இரண்டாவதாகத்தான் இருந்தது. எங்குத் திரும்பினாலும் நிலை வேறு மாதிரி இருந்தது.
அது எனக்கு மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. பிறகு, சேறும் சகதியும் நிறைந்த கரடுமுரடான பாதைகளில் திக்கித்திணறி, சாலையில் சென்றேன். வழிநெடுகத் தென்பட்ட வீடுகள் மோசமான வறுமையைப் பகிரங்கப்படுத்தின.
சின்ன சின்ன வீடுகள், மரப் பலகைகளையும் மூங்கில் பிளாச்சுகளையும் வைத்துக் கட்டப்பட்ட கடைகள், பிள்ளைகள், பெரியோர் என இரு தரப்பினரின் வெற்று உடம்புகளும் ஏழ்மையை வெளிக்காட்டி நின்றன.

ஒப்பனையற்ற முகம், வாஞ்சையான பார்வை, இடையிடையே அவர்களுடைய நினைவு பரபரவென்று எங்கோ செல்வதையும் சடாரென்று மோதி பழைய இடம் நோக்கித் திரும்புவதையும் அவர்களுடைய பார்வைகளின் போக்கினோடே என்னால் யூகிக்க முடிந்தது.
ஆங்கிலத்தில் உரையாடுகையில் நிதானமாக யோசித்து யோசித்துப் பேசுபவராகவும் தெரிந்தார்கள்.
சிரிக்கும்போது சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். இக்கட்டான விஷயங்களைப் பேசுகையில், மெளனத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.
மூழ்கடிக்க முயலும் விரக்தி ஏமாற்றம், வலி, எதிர்காலம் குறித்த குழப்பம், நிச்சயமின்மை, இவை யாவற்றின் மத்தியிலிருந்தும் விதியின் கைப்பற்றி நம்பிக்கையை நோக்கிப் பிய்த்துக் கொண்டு பாய்பவர்போல இருந்தார்கள்.
அவர்களிடம் நிறைய அறியாமை வெளிப்பட்டது. அதுவே அவர்களிடம் அறத்தைத் தாங்கி நிற்கும் அடி வேராகவும் தோன்றியது.
பிறகு, சாலையில் நடந்தபடியே சென்று கொண்டிருந்தேன். ஒரு அழகிய மாலைப் பொழுதில் சபர்மதி சென்றேன்.
எனது பயணத்தின்போது நான் மிகவும் மெய்சிலிர்த்த இடம் சபர்மதி. எப்போதும் போல அது நான் பார்த்த இடமல்ல. ஒரு வரலாற்றுச் சின்னமும் அல்ல.
ஒரு வரலாற்றை உருவாக்கிய ஒரு பிதா உருவாகிய கருவறை. அதைத் தரிசித்த அனுபவத்தைப் பகிர்கிறேன்.

அந்த பெயர் ஒரு அமைதியான நதி, அவரைப் பின்பற்றுவோருக்கு. அவரது பெயர் ஒரு காட்டாற்று வெள்ளம் அவருடைய எதிரிகளுக்கு.
அங்கே இருப்பவர்கள் யாருமே நுழையாத ஒரு அறையின் உள்ளே என்னை அழைத்துச் சென்றார்கள்.
பொதுவாக அந்த அறைக்குள் பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று கூறினர். அந்த அறைக்குள் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதன் அருகில் சென்று பார்க்க மட்டுமல்லாமல், என்னைத் தொடவும் அனுமதித்தார்கள். நான் தொட்டது ஒரு உயிரற்ற பொருட்களை அல்ல, ஒரு தேசத்தின் ஆன்மா பயன்படுத்திய வரலாற்றின் சின்னங்கள்.
சபர்மதி ஆசிரமம் அகமதாபாத் நகரின் நகர மண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்திருந்தார்.
இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களின் சாட்சியாகத் திகழ்கிறது சபர்மதி ஆசிரமம்.

இந்த ஆசிரமம் நாட்டின் சுதந்திர இயக்கத்தின் மையங்களில் ஒன்றாக இருந்ததால், இந்திய அரசாங்கம் அதைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவித்தது.
1930 ஆம் ஆண்டு நடந்த தண்டி யாத்திரை உட்பட அவரது பல செயல்பாடுகளுக்கு இது அடித்தளமாகச் செயல்பட்டது.
தற்போது, ஆசிரம வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது, அங்குக் காந்திஜியின் பல கடிதங்கள் மற்றும் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன்.
மேலும் பல நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன. இது காந்தி ஆசிரமம், ஹரிஜன் ஆசிரமம், சத்தியாகிரக ஆசிரமம் போன்ற பிற பெயர்களாலும் அறியப்பட்டது.
விவசாயம், உடல் உழைப்பு மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதற்காக வளாகத்திற்குள் ஒரு பள்ளியையும் தொடங்கினார் என்கின்ற வரலாற்றை அங்கே என்னால் பார்க்க முடிந்தது.
இன்னும் சொல்லப் போனால், ஆங்கிலேயர்கள் விதித்த உப்புச் சட்டத்தைக் காக்க 1930-ல் அவரும் அவருடைய தோழர்கள் 78 பேரும் தண்டி யாத்திரையைத் தொடங்கினார்கள்.
ஒரு பெரிய ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் ஆசிரமத்தைக் கைப்பற்றியது.

1933 ஆம் ஆண்டில், அவர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக ஆசிரமத்தைக் கலைத்தார். மேலும், இந்தியா சுதந்திரம் அடையும் வரை அதற்குத் திரும்பப் போவதில்லை என்றும் சபதம் செய்தார்.
1947-ல் நாடு சுதந்திரம் அடைந்தாலும், காந்திஜி 6 மாதங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டதால் ஆசிரமத்திற்குத் திரும்பவே முடியவில்லை.
காந்திஜியின் படைப்புகள் மற்றும் நினைவைப் பாதுகாக்க ஆசிரம வளாகத்திற்குள் காந்தி ஸ்மரக் சங்க்ரஹாலயா என்ற அருங்காட்சியகம் கட்டப்பட்டது.
இது தவிர, நிறுவனங்கள், கட்டமைப்புகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை மற்றும் ஆசிரமம் காந்திய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளையும் நடத்துகிறது.
காந்தியின் வாழ்க்கை மற்றும் இந்தியச் சுதந்திரப் போராட்டம் தொடர்பான சந்தர்ப்பங்களில் இங்குச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என அங்கே இருப்பவர் ஒருவர் சொன்னார்.
அகமதாபாத்தில் பார்க்க வேண்டிய முக்கிய வரலாற்று இடங்களில் ஒன்றாகவும் சபர்மதி விளங்குகிறது. இந்த அருங்காட்சியகம் பிரபல இந்தியக் கட்டிடக் கலைஞரான சார்லஸ் மார்க் கொரியாவால் வடிவமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேருவால் 1963 இல் திறக்கப்பட்டது.
இது 1915 முதல் 1930 வரை காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சுமார் 50 கையால் வரையப்பட்ட பேனல்களைக் கொண்டுள்ளது.

மை லைஃப் இஸ் மை மெசேஜ் கேலரியைப் பார்த்தேன். இது காந்திஜியின் வாழ்க்கையை விவரிக்கும் 250க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் காட்டியது எனக்கு.
அவர் போர்பந்தரில் பிறந்தார். இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் அவர் செலவழித்த காலம், சுதந்திர இயக்கம் மற்றும் அவரது சோகமான படுகொலை வரை. பிறகு, அங்கே ஓவியக் காட்சியகம் பார்த்தேன்.
இதில் 8 வாழ்க்கை அளவிலான உருவப்படங்கள் இருந்தது. ஒவ்வொன்றும் காந்திஜி அணிவகுப்பு, தியானம், துணி நூற்பு போன்ற பல்வேறு செயல்களைச் செய்வதைச் சித்தரிக்கும் வகையாகக் காணப்பட்டன.
பிறகு, அங்கேயிருக்கும் நூலகம் மற்றும் காப்பகங்களுக்குச் சென்றேன். இந்தப் பிரிவுகளில் 34,111 கடிதங்கள், 1,371 கையெழுத்துப் பிரதிகள், ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 210 படங்கள், 612 ஆடியோ கேசட்டுகள், 106 வீடியோ கேசட்டுகள், 50, 000 புத்தகங்கள், 6,000 தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நெகட்டிவ் புகைப்படங்கள் உட்படக் கணிசமானவைக் கண்காட்சிக்காக இருந்தன.
காந்திஜியின் மருமகனும், உண்மையான சீடருமான மகன்லால் காந்தி வாழ்ந்த குடிசையைப் பார்த்தேன். அவர் 1928 இல் இறக்கும் வரை ஆசிரமத்தின் மேலாளராகவும் பணியாற்றினார்.
1917 முதல் 1930 வரை காந்திஜியும் கஸ்தூர்பா காந்தியும் வாழ்ந்த வீடு ஹிருதய் குஞ்ச்.
இந்த வீட்டில் 6 அறைகள் மற்றும் எழுதும் மேசைகள் மற்றும் நூற்பு சக்கரங்கள் போன்ற அவரது உடைமைகள் இருந்தன.
ஆச்சார்யா வினோபா பாவே 1918 மற்றும் 1921 வரை தங்கியிருந்த வினோபா - மிரா குதிர் என்ற குடிசை.
பின்னர், காந்திஜியின் மிகவும் குறிப்பிடத்தக்கச் சீடர்களில் ஒருவரான மீராபெனின் இல்லமாக இது இருந்தது.

நந்தினி, ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், ரெஜினால்ட் ரெனால்ட்ஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்தபோது தங்கியிருந்த பழைய விருந்தினர் மாளிகைக்கும் சென்றேன்.
1918 ஆம் ஆண்டு அகமதாபாத் மில் வேலைநிறுத்தத்தின் போது நிறுவப்பட்ட உத்யோக் மந்திர், 'காதி மூலம் சுயராஜ்ஜியம்' என்ற செய்தியைப் பரப்புவதில் இது பெரும் பங்கு வகித்தது.
மேலும் காந்திஜியும் இந்தக் கட்டிடத்தின் சிறிய அறை ஒன்றில் சிறிது காலம் வாழ்ந்தார்.
சோம்நாத் சத்ராலயா, சுமார் 100 அறைகள் கொண்ட பெரிய கட்டிடம். அந்தக் காலத்தில், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும், ஆசிரமப் பள்ளி மாணவர்களும் தங்கியிருந்த சமுதாயக் குடியிருப்பு இது.
உபாசனாமந்திர் அல்லது பிரார்த்தனாபூமி, தினமும் காலையிலும் மாலையிலும் கூட்டத்தொழுகை நடத்தப்படும் ஒரு திறந்த பிரார்த்தனைப் பகுதி. காந்தியடிகள் பகவத் கீதையில் சொற்பொழிவு செய்த தலம் இதுவாகும் .
பழங்கால துறவி தாதிச்சி வாழ்ந்த இடத்தில் ஆசிரமம் கட்டப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அசுரர்களைத் தோற்கடிக்கத் தேவர்கள் தனது எலும்புகளைப் பயன்படுத்தி 'வஜ்ரா' ஆயுதத்தை உருவாக்குவதற்காக அவர் தனது உயிரைத் தியாகம் செய்ததாக நம்பப்படுகிறது.
நான் பார்த்த அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியக் காட்சியகத்தில் கடலை ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காந்தியின் தனித்துவமான உருவப்படம் பார்த்தேன்.

நான் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றவுடன் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட சகாப்தத்திற்கு என்னை எப்போதும் போல அழைத்துச் சென்றது.
அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தேன். மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்டேன்.
நான் உணர்ந்த வரையில் சபர்மதி ஆசிரமம் காந்தி விட்டுச் சென்ற பாரம்பர்யத்துடன் எனக்கு ஒலித்தது.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.