சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவான தேனிலவுப் பயணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
“தேனிலவு” - நண்பர்களுடனோ, உறவுகளுடனோ பலமுறை பயணித்திருந்தாலும் நம் மனதில் என்றும் நீங்காமிடம் பெற்று மகிழ்ச்சியை அள்ளித்தரும் பயணம்.
அவ்வகையில், என்னவளுடன் நான் பயணிக்கவிருக்கும் முதல் இடம், அவள் சற்றும் யூகிக்க இயலாத வகையில் இருக்க வேண்டுமென்று எண்ணி, நான் தேர்வு செய்த இடம் குலு மற்றும் மணாலி.

தெளிவான முன்னேற்பாடுகள் இல்லாத பயணத்தில் ஏற்படும் அசௌகரியங்களை உணர்ந்த நான், அவற்றை தவிர்ப்பதற்காக, திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பயணத்திற்கான விமானம் மற்றும் தங்குமிடத்திற்கான முன்பதிவுகளை முடித்துவிட்டேன்.
இரண்டு நாள்கள் புது டில்லி மற்றும் மூன்று நாள்கள் மணாலி இதுவே எனது திட்டம்.
ஆகாயத்தில் பறக்கும் போது, அண்ணாந்து பார்த்து மகிழ்ந்த விமானத்தினுள் அமர்ந்து பயணிக்கும் முதல் அனுபவம் அலாதியானது.
அவ்வனுபவத்தோடு, டில்லி சென்று பஹர்கஞ்ச் பகுதியில் முன்பதிவு செய்திருந்த ஓட்டல் அறையை அடைந்தோம்.
சிறிது நேர இளைப்பாறலுக்கு பின்னர், அங்குள்ள முகலாயர் காலந்தொட்டே பரபரப்பான கடைவீதியில் நடந்தபோது, தமிழ்நாடு ஹோட்டல் என்ற பெயர் பலகையை பார்த்ததும் இனம் புரியா மகிழ்வோடு உள்ளே நுழைந்து, இரவு உணவை ஏமாற்றத்துடன் (குறிப்பு:- உணவின் தரம் மிகவும் சுமார்) முடித்துக் கொண்டோம்.

முதல்நாள், இரயில் மூலம் ஆக்ரா சென்றடைந்து, ஆக்ரா கோட்டையை பார்வையிட்ட போது, முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமை நம் கண் முன்னே விரிந்தது.
அங்குள்ள சுற்றுலா வழிகாட்டி ஒருவர் மூலம், ஷாஜகான் சிறையிலடைக்கப்பட்ட அறையை கண்டவுடன், அவர் அங்கிருந்து தாஜ்மஹாலை பார்த்ததாக நினைவுக்கு வரவே, கண்களால் நாலாபுறமும் துழாவியபோது பளிங்கால் செய்யப்பட்ட அந்த வெள்ளை அதிசயம் புலப்பட்ட தருணத்தை எங்கனம் விவரிப்பது...!
அடுத்த சில மணித்துளிகளில், தான் ஒரு உலக அதிசயம் என்ற எவ்வித கர்வமுமின்றி பேரழகோடு மிளிர்ந்து கொண்டிருக்கும் தாஜ்மஹால் எங்கள் அருகில். முடிந்தவரை அதன் அழகை எங்கள் அலைபேசியில் பதிவேற்றிக் கொண்டு ஆக்ராவிலிருந்து விடை பெற்றோம்.

இரண்டாம் நாள், ஓட்டல் வாசலில் கிடைத்த ஆட்டோ ஒன்றில் பயணித்து, இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவன் சாலை, பிர்லா மந்திர், ஹுமாயூன் கல்லறை உள்ளிட்ட டில்லியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட மகிழ்ச்சியோடு மணாலிக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்து நிற்குமிடத்தை வந்தடைந்தோம்.
சில பயணங்களில் காணும் இடங்களை தாண்டி, சில மனிதர்கள் நீங்கா நினைவுகளை நம் மனதில் கடத்துவதுண்டு. இந்த பயணத்தில் ஆட்டோ ஓட்டுனர். நாங்கள் தமிழ்நாடு என்றதும் ரஜினியின் பாட்ஷா பட வசனங்களை தனக்குத் தெரிந்த தமிழில் பேசியது முதல், சுற்றுலாவிற்கு வந்து, தனது ஆட்டோவில் பயணித்த விமான பணிப்பெண்ணை காதலித்து கரம் பற்றிய நிகழ்வுகள் வரை அவர் பகிர்ந்த விஷயங்கள் ஏராளம்.

பேருந்தில் ஏறியவுடன் பயணக் களைப்பில் உறங்கிய நாங்கள் காலை எழுந்த போது கண்ட காட்சி முற்றிலும் வேறானது. சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் பியாஸ்நதியும், நெடிதுயர்ந்த இமயமலையும் எங்களை வாழ்த்தி வரவேற்றது போல் உணர்ந்தோம்.
மணாலியின் முதல்நாளில் நாங்கள் சென்ற இடம் ரோதாங் கணவாய் (Rohtang Pass).
கடல் மட்டத்திலிருந்து 13000 அடி உயரத்தில், -9 டிகிரி வெப்பநிலையில், இமய மலையின் பனிபோர்த்திய சிகரங்களின் அழகை உள்ளபடியே வர்ணிப்பவன் எவனோ அவனே ஆகச் சிறந்த கவிஞன் எனத் தோன்றியது.
அதீத பனிப்பொழிவு காரணமாக சிறிது நேரத்திலேயே எங்களை வெளியேறும் படி அறிவுறுத்தியதால் மனமின்றி சோலாங் பள்ளத்தாக்கு (Solang valley) வந்தடைந்தோம்.
இந்த இடத்தை சாகசப் பிரியர்களின் சொர்க்கம் என வர்ணிக்கலாம், அத்தனை வகையான பனி சார்ந்த விளையாட்டுகள்.
இரண்டாம் நாள் மணிகரண், அதீத குளிர் மிகுந்த சீதோஷ்ண நிலையிலும், அங்குள்ள வெப்ப நீரூற்றுகள் யாவரையும் ஆச்சர்யப்படுத்தக் கூடும்.
அங்குள்ள சிவன் கோவிலில் ஒரு துணியில் அரிசியை கட்டி, வெப்ப நீரூற்று மூலம் சில நிமிடங்களில், சோறாக்கி பிரசாதமாக வழங்கப்படுவதன் மூலம் நீரின் உஷ்ணத்தை புரிந்து கொள்ள முடியும். பின்னர் ஹடிம்பா தேவி கோவில், புத்த விஹார் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று திரும்பினோம்.

மூன்றாம் நாள் எவ்வித பயண ஏற்பாடும் மேற்கொள்ளாமல், மணாலியின் கடை வீதிகளில் நடந்து, நினைவுப் பொருள்கள் வாங்கி அன்றைய தினம் மாலையில் டில்லிக்கு பேருந்தில் பயணித்து, மறுநாள் டில்லி வந்தடைந்தோம். ஐந்து நாள்களாக, நம் மண் சார்ந்த உணவுகள் கிடைக்காமல் ஏங்கித் தவித்த நாங்கள் கூகுள் மேப் உதவியோடு சரவணபவன் ஓட்டலை தேடி சரணடைந்தோம்.
பின்னர் வான் மார்க்கமாக தமிழகம் வந்து எங்கள் பயணத்தை நிறைவு செய்தோம். ஆண்டுகள் பல கடந்த போதிலும், மேலும் சில பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும், இந்த டில்லி, மணாலி பயணம் தந்த நினைவுகளுக்கு நிகர் வேறெதுவும் இல்லை. தெளிவான திட்டமிடல் இருந்தால் குறைந்த செலவில் நிறைந்த நினைவுகளை அள்ளித்தரும் குலு, மணாலிக்கு நீங்களும் சென்று வாருங்களேன்!
-ந. சுந்தரபாண்டியன்,
தூத்துக்குடி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.