Tsunami 20 : `கடல் பறித்துச்சென்ற 4 குழந்தைகளையும் மீண்டும் பெற்றுக்கொள்ள...' - ராஜ், ஆக்னஸ் தம்பதி
2004 டிசம்பர் 26-ம் தேதியை கறுப்பு ஞாயிறாக மாற்றியது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. இந்தோனேசியா பக்கத்தில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கற்பிணிகள், 11 நாள்களே ஆன குழந்தை என வயது வித்தியாசம் இல்லாமல் உயிரை வாரிக்குடித்தது சுனாமி.
ஒரு குடும்பத்தில் சொல்லி அழக்கூட ஆள் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக அனைவரையும் கடல் இழுத்துச் சென்றது. ஒரே குடும்பத்தில் 26 பேர் இறந்த சோக நிகழ்வு குமரி மாவட்டத்தின் கொட்டில்பாடு கிராமத்தில் நடந்தது. ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்தபிறகு குளச்சல் ஏ.வி.எம் கால்வாயிலிருந்து பிணக்குவியல்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் தோண்டி எடுக்கப்பட்டன. அந்தச் சடலங்கள் குளச்சல் காணிக்கை மாதா தேவாலயம் அருகே ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.
சுனாமி பேரலையின் நினைவாக கன்னியாகுமரி, கொட்டில்பாடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுனாமி பேரலையால் அழிவு ஏற்பட்டு 20 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், அதன் வடுக்கள் இன்னும் மாறாமலே உள்ளன.
குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் மரணமடைந்தனர். அவர்கள் கடற்கரை பகுதியில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். உடல்கள் கிடைக்காமல் போனவர்களும் உண்டு. கொட்டில்பாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராஜ் - ஆக்னஸ் தம்பதியினரின் நான்கு குழந்தைகளையும் ஆழிப்பேரலை இழுத்துச் சென்றது. குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்ட அவர்கள் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின்மூலம் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய ஆக்னஸ், "சுனாமி வந்த சமயத்தில் என் பிள்ளைகளுக்கு 8 வயது, 6 வயது, 4 வயது 2 வயதும் ஆகியிருந்தது. கடைசி மகள் ரஞ்சிதா என் கையில்தான் இருந்தாள். ஆனால், கடல் அலை அந்த குழந்தையை என் கைகளில் இருந்து பறித்துச் சென்றுவிட்டது. நானும் கடல் அலையில் சிக்கினேன். என் கணவர் ராஜ் தான் என்னை காப்பாற்றினார்.
கடல் பறித்துச்சென்ற நான்கு குழந்தைகளையும் மீண்டும் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் ஆனால், உடல் ஒத்துழைக்காததால் மூன்று குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டேன். அந்த குழந்தைகளுக்கு சுனாமி பறித்துச் சென்ற குழந்தைகளின் பெயரான பிரதீஷா, பிரதீமா, பிரமோத் என பெயர் வைத்திருக்கிறேன். கடல் அலை என் பிள்ளைகளை பறித்துச் சென்ற அந்த கொடூர நிகழ்வை இன்று நினைத்தாலும் மனம் துடிக்கிறது" என்றபோது கண்கள் குளமாயின.
ஆக்னஸின் கணவர் ராஜ் கூறுகையில், "கிறிஸ்துமஸ் முடிந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்வதற்காக நன் ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்போது இங்கு மீன்பிடி துறைமுகங்கள் இல்லாததால் கரையில் சிறிய படகில் ஐஸ் கட்டிகளை ஏற்றி கடலில் நிற்கும் பெரிய விசைப்படகுகளுக்கு கொண்டுசெல்வோம். நான் படகில் இருந்த் சமயத்தில் சுனாமி ஏற்பட்டது. படகு உயர்ந்து மீண்டும் தாழ்ந்தது. வேறு பாதிப்பு இல்லை. சுனாமி வந்து சென்றபோது நான் என் வீட்டை நோக்கிச் சென்றேன். வழியில் ஒரு குழந்தை தண்ணீரில் இழுத்துச்செல்வதை பார்த்து, மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தேன். தொடர்ந்து வீட்டுக்கு அருகே அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் தண்ணீரில் கிடந்தார். அவரை மீட்டு முகத்தைப் பார்த்தேன் என் மனைவி... பதறியபடி அவருக்கு என் சட்டையை கழற்றி அணியக்கொடுத்துவிட்டு பிள்ளைகள் எங்கே எனக்கேட்டேன்.
நான்கு குழந்தைகளையும் கடல் அலை இழுத்துச் சென்றதாக மனைவி கூறியதும் தேடினேன். நான்காவது குழந்தை கிடைத்தது. மீட்டு மனைவியிடம் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும்படி கூறிவிட்டு மற்ற குழந்தைகளை தேடினேன். மற்றொரு குழந்தையும் கிடைத்தது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டுசென்றபோது 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக சொன்னார்கள். மற்ற 2 குழந்தைகளின் உடல்களைக்கூட பார்க்கும் பாக்கியம் கூட கிடைக்கவில்லை" என விம்மினார்.
இப்போது ஆக்னஸ் -ராஜ் தம்பதியினரின் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆனாலும். முதலில் பெற்றடுத்த நான்கு முத்துக்களையும் சுனாமி பறித்துச் சென்ற சோக வடு அவர்கள் மனதில் இருந்து மாறவில்லை.