தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய...
Tuvalu: மெதுவாக கடலில் மூழ்கும் தீவு; இடம்பெயரும் மக்கள் - காலநிலை மாற்றத்தால் காலியாகும் நாடு
பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான துவாலு உலகின் முதல் திட்டமிட்ட முழு நாட்டு இடம்பெயர்வுக்கு தயாராக உள்ளது. அதாவது தீவில் உள்ள அனைவரும் வேறொரு நாட்டுக்கு செல்ல உள்ளனர்.
கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 25 ஆண்டுகளில் துவாலுவின் பெரும்பாலான நிலப்பகுதி நீரில் மூழ்க கூடும் என்று பல ஆய்வுகள் தெரிவித்த நிலையில், அந்த தீவில் வாழும் மக்கள் உயிர் வாழ்வதற்காக இடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
துவாலு, 9 பவள தீவுகள் மற்றும் பவள பாறைகளை கொண்டுள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து வெறும் இரண்டு மீட்டர் மட்டுமே உள்ளது. இதனால் வெள்ளம், புயல் அலைகள் அல்லது காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய கடல்மட்ட உயர்வால் இந்த தீவு நாட்டை பாதிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவித்தன.

அதுமட்டுமில்லாமல் அடுத்த 80 ஆண்டுகளில் இந்த நாடு வாழத் தகுதியற்றதாக மாறிவிடலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். துவாலுவின் ஒன்பது பவளங்களில் இரண்டு ஏற்கெனவே நீரில் மூழ்கிவிட்டது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள 2023 -ல் துவாலு மற்றும் ஆஸ்திரேலியா இடையே ’பலேபிலி ஒன்றிய ஒப்பந்தம்’ (Falepili Union Treaty) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஆண்டுக்கு 280 துவாலு மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர உரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கு சுகாதாரம், கல்வி, வீடு வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட முழு உரிமையும் கிடைக்கும் என கூறப்பட்டது. முதல் கட்ட விண்ணப்பங்கள் ஜூன் 16 முதல் ஜூலை 18 வரை பெறப்பட்டன. முதல் 280 இடம் பெயர்வர்கள் ஜூலை 25 அன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இதுகுறித்து கூறுகையில்" இந்த இடம் பெயர்வு திட்டம் காலநிலை பாதிப்புகள் மோசம் அடையும்போது துவாலு மக்கள் சரியான முறையில் குடியேற உதவும்” என்று கூறி இருக்கிறார். கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் நாடுகளின் உரிமைகளை பாதுகாக்க புதிய சர்வதேச ஒப்பந்தம் தேவை என்று உலகளாவிய நடவடிக்கைக்கு துவாலு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.