Udhayam Theatre: `இடத்தை அவங்க வாங்கிட்டாங்க' - மூடப்பட்ட உதயம் திரையரங்கம்; உறுதி செய்த மேலாளர்
சென்னை அசோக் நகரிலுள்ள உதயம் திரையரங்கம் குறித்துப் பேசுவதற்கு பல கதைகள் இருக்கின்றன.
இன்று உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள் தங்களின் ஆதர்ச கதாநாயகன்களை கொண்டாடித் தீர்த்த இடம் உதயம் திரையரங்கம். உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என நான்கு திரைகளுடன் இயங்கி வந்த இத்திரையரங்கம்,1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 41 வருடங்களாக பலரின் பொழுதுபோக்கிற்கு முக்கிய இடமாக விளங்கிய உதயம் திரையரங்கம் நிரந்தமாக மூடப்பட்டது.
10, 15 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மேள தாள கொண்டாட்ட ஒலியுடன், உயரமான கட் அவுட்களுடன் கலகலப்பாக காட்சியளித்தது உதயம் திரையரங்கம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் 100 ஃபீட் சாலையின் ஓரத்தில் தற்போது அமைதியாக காட்சியளிக்கிறது உதயம் திரையரங்கம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு பழமையான திரையரங்குகள் பலவும் இது போல மூடப்பட்டு வருகின்றன.
இது குறித்து திரையரங்கத்தில் மேலாளர் ஹரியிடம் பேசுகையில், `` வெளியான செய்தி உண்மைதான். திரையரங்கம் மூடப்பட்டது. காசாகிராண்ட் நிறுவனம்தான் இடத்தை வாங்கியிருக்கிறார்கள்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
இச்செய்தி பலரின் இதயத்தையும் கனக்க செய்திருக்கிறது. ஆட்டோ டிரைவர்கள், திரையரங்கத்தை சுற்றியுள்ள வியாபாரிகள் எனப் பலரும் திரையரங்கத்தை ஏகத்துடன் பார்த்தவாறே கடந்து செல்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...