திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு!
UGC: 'ஓராண்டுக்கு முன்பே படிப்பை முடிக்கலாம்' - யுஜிசியின் புதிய நடைமுறை சொல்வது என்ன?
3 வருட இளங்கலை பட்டப் படிப்பை 2 வருடங்களிலும் 4 வருடப் பட்ட படிப்பை 3 வருடங்களிலும் படித்து முடிக்கும் நடைமுறைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருக்கும் இந்த நடைமுறை குறித்து விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "3 வருட இளங்கலை பட்டப் படிப்பை மாணவர்கள் விருப்பப்பட்டால், 2 வருடங்களிலும், 4 வருடப் பட்ட படிப்பை 3 வருடங்களில் முடிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் எம். ஜெகதீஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் கலந்தாய்வு ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கொடுத்திருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) . இதுதொடர்பான செய்திக்குறிப்பில், "மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்றார்போல் பட்டப்படிப்புகளை ஓராண்டுக்கு முன்பே முடிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிடக் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் புதிய நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, 3 ஆண்டு படிப்பை 4 ஆண்டுகள் வரையும் நீட்டித்துக் கொள்ளலாம்.
ஆனால் 2 ஆண்டுகளில் முடித்தாலும் 4 ஆண்டுகளில் முடித்தாலும் பட்டப்படிப்புக்கான மதிப்பில் எந்த வேறுபாடும் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இதனை நடைமுறைப்படுத்தக் குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. வரும் 2024-25 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது” என்றனர்.
இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர்கள் சிலர், "அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிற ரீதியில் இந்த புதிய நடைமுறையைக் கொண்டுவந்திருக்கிறது யூஜிசி. ஆனால், இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் வரும் என அனுமானிக்கிறோம். பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரைப் பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு எப்படித் தனித் தனியாகச் சொல்லித் தருவது?
ஆறு மாதம் கூடுதலாகப் படிக்கும் மாணவர்களுக்கு எப்படித் தனியாகச் சொல்லித் தருவது போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. அதேபோல சீக்கிரம் படித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே மாணவர்களுக்கு வரும். மாணவர்களுக்கு வராவிட்டாலும் பெற்றோர்களின் அழுத்தத்தில் பெரும்பாலான மாணவர்கள் இரண்டே ஆண்டில் கல்வியை முடிக்க முந்தியடிப்பார்கள். மன அழுத்தத்தைக் கையாளத் தெரியாத மாணவ சமூகம் உருவாகிவரும் சூழலில் இந்த நடைமுறை கூடுதல் சுமையையே தரும்” என்றனர்.
மற்றொரு தரப்பினரோ, "இது புதிய கல்விக்கொள்கையின் ஒரு அம்சம், `எடுத்தோம் கவிழ்த்தோம்’ என ஒரு திட்டத்தை யுஜிசி கொண்டுவராது. என்னென்ன சிக்கல்கள் இருக்குமென்பதையும் நிச்சயம் ஆராய்ந்த பிறகே நடைமுறைக்குக் கொண்டுவந்திருப்பார்கள். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...