MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
Vaibhav Suryavanshi: "சிங்கத்தோட வருகைக்கு காடே அதிரும்" - வைபவ் சூரியவன்ஷி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேற்று (ஏப்ரல் 19) ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதின. ராஜஸ்தானுக்கு வாழ்வா சாவா போட்டியான இதில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் களமிறங்காததால் அணியை ரியான் பராக் வழிநடத்தினார். டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பேட்டிங்கைத் தேர்வுசெய்ய, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் குவித்தது லக்னோ.

181 ரன்கள் இலக்கை நோக்கி இறங்கிய ராஜஸ்தான் அணியில், சஞ்சு சாம்சன் இடத்தில் ஜெய்ஸ்வாலுடன் கைகோத்து ஓப்பனிங்கில் களமிறங்கினார் 14 வயது சுட்டிக் குழந்தை வைபவ் சூரியவன்ஷி. ஐ.பி.எல் வரலாற்றில் 13 வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே வீரர் சாதனையுடன் ராஜஸ்தான் அணியில் 7 ஆட்டங்களாக பென்ச்சில் அமரவைக்கப்பட்டு எப்போது களமிறங்குவோம் என்று கனவு கண்டிருந்த வைபவ் சூரியவன்ஷி, இந்தப் போட்டியில் களமிறங்கி, ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (மார்ச் 27-ம் தேதி 14 வயதைப் பூர்த்தி செய்தார்) அறிமுகமான வீரர் என்ற சாதனை படைத்தார்.
அந்தச் சாதனையும், அனைவரின் எதிர்பார்ப்பும் ஒரு அழுத்தத்தைத் தந்தாலும், சிறகு முளைத்த சிறு பறவை எப்படி மரத்திலிருந்து தரை எவ்வளவு தூரம் என்பதைக் கண்டுகொள்ளாமல் சிறகு வந்துவிட்டதே எனப் பறப்பது போல, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார் வைபவ் சூர்யவன்ஷி. களத்தில் நிற்கும் வரை அதிரடி காட்டிக்கொண்டிருந்த இவர், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து, 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் என 34 ரன்களில் அவுட்டானார்.
. .
— IndianPremierLeague (@IPL) April 19, 2025
Welcome to #TATAIPL, Vaibhav Suryavanshi
Updates ▶️ https://t.co/02MS6ICvQl#RRvLSG | @rajasthanroyalspic.twitter.com/MizhfSax4q
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
இந்தியாவில் ஐ.பி.எல் அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 மார்ச் 27-ம் தேதி பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் தாஜ்புர் என்ற கிராமத்தில் பிறந்தார் வைபவ் சூர்யவன்ஷி. சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் நாட்டம் கொண்ட இவர், தந்தையின் முயற்சியால் 9 வயதிலேயே கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறையாகப் பயிற்சிபெறத் தொடங்கினார். 12 வயதில் பீகாரில் வினு மங்கட் தொடரில் 5 போட்டிகளில் 400 ரன்கள் குவித்தார்.
58 பந்துகளில் செஞ்சுரி... உலக அளவில் சாதனை!
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் சொந்த மாநிலத்துக்காக ரஞ்சி டிராபியிலும் களமிறங்கினார். இதன் மூலம், 12 வயதிலேயே ரஞ்சிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனைப் படைத்தார். அதன்பிறகு அவர் தொட்டதெல்லாம் சாதனைதான். கடந்த ஆண்டு, 19 வயதிற்குட்பட்ட ஆஸ்திரேலிய ஆணிக்கெதிரான இளையோர் டெஸ்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கி அதிரடியாக 58 பந்துகளில் சதமடித்தார்.

இதன்மூலம், உலக அளவில் U19 இளையோர் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தையும், அதில் இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். அனைவரின் பார்வையும் இவர் மேல் விழ, அதற்கு மேலும் ஒளி கூட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இவரை ராஜஸ்தான் அணி ரூ. 1.10 கோடிக்கு வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் (13 வயது) ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை இவர் வசமானது.

இப்போது, ஐ.பி.எல்லில் மிகக் குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையுடன் லக்னோவுக்கெதிராகக் களமிறங்கி, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து நல்ல இன்னிங்ஸ் ஆடி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கூடிய விரைவில் இந்திய அணியிலும் இடம்பெற்று உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் வைபவ் சூர்யவன்ஷி!
ஐ.பி.எல்லில் இதற்கு முன் குறைந்த வயதில் அறிமுகமானவர்கள்:
பிரயாஸ் ரே பர்மன் (2019 - 16 வயது - பெங்களூர் அணி)
முஜீப் உர் ரஹ்மான் (2018 - 17 வயது - பஞ்சாப் அணி)
அபிஷேக் ஷர்மா(2018 - 17 வயது - டெல்லி அணி)
ரியான் பராக்(2019 - 17 வயது - ராஜஸ்தான் அணி)
சப்ராஸ்கான் (2015 - 17 வயது - பெங்களூரு அணி)