செய்திகள் :

Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனையும் பாதுகாப்பானதா?

post image

'வெயிட் லாஸ் செய்யணும்', 'மாவுச்சத்தைக் குறைக்கணும்', 'புரதம் அதிகமிருக்கிற உணவுகள் சாப்பிடணும்', 'நல்ல கொழுப்பு கட்டாயம் சாப்பிடணும்', 'கலர்ஃபுல்லா சாப்பிட்டா கேன்சர் வராம தடுக்கலாம்' - இப்படி உடல் எடை குறித்த விழிப்புணர்வும், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் கிட்டத்தட்ட எல்லோருக்குமே வந்துவிட்டது. இது நல்ல விஷயம்தான். ஆனால், இதற்கான டயட் வழிகாட்டுதலைச் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் பெறாமல், கூகுளில் தேடியோ அல்லது செயற்கை நுண்ணறிவிடம் கேட்டோ ஃபாலோ செய்கிறார்கள்.

அதன் விளைவுதான், சில நாள்களுக்கு முன்னால் இளம் பெண் ஒருவர் 'வாட்டர் டயட்' என்கிற பேரில் தண்ணீர் மட்டுமே அருந்தி உயிரிழந்தது. இந்தக் கட்டுரை எந்த டயட் என்ன பலனை அளிக்கிறது; எவையெல்லாம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான டயட்; ஒரு டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் ஏன் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

1. இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting)

Intermittent Fasting)

ஒருநாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் சாப்பிடுவதற்கானது. மீதம் 16 மணி எதுவும் சாப்பிடக்கூடாது. இந்த டயட்டின் அடிப்படையே இதுதான். இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. ஆனால், இரவு தாமதமாகத் தூங்கி காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்கள், எழுந்துகொண்டதும் அலுவலகம் கிளம்பி விடுகிறார்கள். விளைவு, காலை உணவைத் தவிர்த்து விட்டு, 'நான் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் இருக்கிறேன். அதனால் 16 மணி நேரம் சாப்பிட மாட்டேன்' என்கிறார்கள். இது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். இவர்கள் எப்படி ஃபாஸ்டிங் இருக்க வேண்டுமென்றால், முதல் நாள் மாலை 4.45-க்கு மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து என எல்லாமும் இருக்கும் சரிவிகித சாப்பாட்டை முடித்துவிட்டு 5 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 9 மணிவரை டயட் இருக்கலாம். இவர்கள் காலை 9 மணிக்குக் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்கள், தாங்கள் சாப்பிடும் 8 மணி நேரத்தில் இரண்டு முழு உணவுகள் (meals), ஒரு ஸ்நாக்ஸ் (snacks) கட்டாயம் சாப்பிட வேண்டும். அவர்கள் தட்டில் ஒரு கால் பாகத்தில் அரிசிச் சாதம் அல்லது சிறுதானியம் அல்லது சப்பாத்தி; இரண்டாவது கால் பாகத்தில் பயறு, பருப்பு, முட்டை, இறைச்சி எனப் புரத உணவுகள்; மீதமிருக்கிற பாதி தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்களின் இரண்டு முழு உணவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஸ்நாக்ஸில் பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம்.

டயட் இருக்கிற 8 மணி நேரத்தில் பால், லஸ்ஸி, மோர், காபி, டீ, ஜீரோ கலோரி லைம் ஜூஸ், க்ரீன் டீ, இஞ்சி டீ என அருந்தலாம். பிளாக் டீ, பிளாக் காபி கூடாது. அதிகமான கொழுப்பையும், உடல் பருமனையும் குறைப்பதற்குத்தான் இந்த டயட். அதே நேரம், இந்த டயட்டை சரியான முறையில் எடுக்கவில்லையென்றால் தசை இழப்பு ஏற்படும் என்பதால், டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்னால் டயட்டீஷியனின் ஆலோசனையைக் கட்டாயம் பெற வேண்டும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள், அசிசிட்டி பிரச்னை இருப்பவர்கள் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றக்கூடாது.

2. பேலியோ டயட் (Paleo Diet)

Paleo Diet

இந்த டயட்டில் மாவுச்சத்து, இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிய உணவுகள், தேநீர், ஆல்கஹால் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகள், நட்ஸ், கொழுப்புச்சத்து நிறைந்த எண்ணெய், பச்சைக்காய்கறிகள் ஆகியவைதான் இந்த டயட்டின் ஹைலைட். காலையில் 100 பாதாம் பருப்புகள், மதியம் கால் கிலோ சிக்கன் அல்லது மட்டன் என்று சாப்பிடுவார்கள். இதனால், நீரிழிவு கட்டுக்குள் வருவதாகப் பலனடைந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உடலில் கொழுப்பு சேர்வதற்கும், உடல் பருமனாவதற்கும் மாவுச்சத்துதான் காரணம். அந்த மாவுச்சத்தைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறைகிறது. அப்படியென்றால், 'இந்த டயட்டில் சாப்பிடும் கொழுப்பு உணவுகளால் உடல் எடை அதிகரிக்காதா' என்று கேள்வி எழலாம். இந்தக் கொழுப்பு தினசரி தேவைக்குப் பயன்படுத்தப்படும். எனவே, எடை அதிகரிக்கும் என்கிற பயம் தேவையில்லை.

குறைவான உடலுழைப்பு, நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலைபார்ப்பது, வியர்வையே வராத வாழ்க்கை முறை என்று இருப்பவர்களுக்கு பேலியோ டயட்டின் கீழ் வருகிற உணவுகளைச் செரிமானம் செய்வதிலேயே பிரச்னை ஏற்படும். தவிர, ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்து, அதுதெரியாமல் இந்த டயட்டை ஃபாலோ செய்தார்களென்றால், அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடலாம். அதனால், இந்த டயட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஆரம்பிக்கவே கூடாது.

3. மாவுச்சத்தே இல்லாத 'நோ கார்ப் டயட்' (No Carb Diet)

No Carbs Diet

டயட் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 'நோ கார்ப் டயட்ல இருக்கேன்' என்கிறார்கள். நூறு கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்களுக்கு இந்த டயட் நிச்சயம் வரப்பிரசாதம்தான். எழுந்து நடப்பதற்கே சிரமமாக இருக்கும் அளவுக்கு உடல் பருமன் கொண்டவர்கள், திடீரென சில கிலோ எடை குறையும்போது 'நம்மாலும் வெயிட் லாஸ் செய்ய முடியும்' என்று நம்பிக்கையாக உணர்வார்கள்.

நம் ஊரில் அரிசி, கோதுமை என மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிடுகிறோம்.

அவற்றை திடீரென பெருமளவில் தவிர்க்கும்போது உடல் எடை குறைவது இயல்புதான். இந்த டயட்டை எடுப்பவர்களுக்கு நீரிழிவு இருந்தாலோ அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தாலோ அவை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ஆனால், மாவுச்சத்து மூளையில் ஆரம்பித்து மொத்த உடம்புக்கும் எனர்ஜியைத் தருகிற ஒரு முக்கியமான உணவுப்பொருள். அதை மொத்தமாக நிறுத்தும்போது சோர்வு, கடகடவென உடல் எடை குறைவதால் தோல் சுருக்கம் எனப் பக்க விளைவுகளால் அவதிப்பட நேரிடும். இந்த டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் டயட்டீஷியனை சந்தித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பதுதான் பாதுகாப்பு.

4. மாவுச்சத்துக் குறைவான லோ கார்ப் டயட் (Low Carb Diet)

Low Carbs Diet

மாவுச்சத்தே இல்லாத டயட்டைவிட மாவுச்சத்துக் குறைவான டயட் ஓகே. இந்த டயட்டை பொறுத்தவரை மாவுச்சத்தைக் குறைப்பதால், புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் கூட்டி, கூடவே தேவையான கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் டயட்டில் சேர்த்தால், உடல் பருமன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். புரதச்சத்துள்ள உணவுகளையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் சற்று கூடுதலாகச் சாப்பிடும்போது, அவற்றைச் செரிமானம் செய்வதற்கு நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழங்கள், கீரைகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடல் எடையைப் பொறுத்தே எந்தளவுக்கு மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும் என்பதாலும், உங்கள் கிட்னி மற்றும் இதய நலத்தைப் பொறுத்தே புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டுமென்பதால், இதையும் டயட்டீஷியன் ஆலோசனைப் பெறாமல் செய்யாதீர்கள்.

5. கீட்டோ டயட் (Keto diet)

Keto diet

இதுவும் மாவுச்சத்தைக் குறைத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் கொழுப்புச்சத்து

நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்கிற டயட் தான். இந்த டயட்டை பொறுத்தவரை உங்கள் உடலானது, அது செயல்படுவதற்கான ஆற்றலை மாவுச்சத்திலிருந்து பெறாமல் கொழுப்புச்சத்திலிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த டயட்டில் வைட்டமின்-சி நிறைந்த காய்கறிகள், முட்டை, அவகேடோ, இறைச்சி வகைகள், தேங்காய் எண்ணெய் போன்ற உணவுகள்தான் முக்கியமானவை. பால், பருப்பு எடுத்துக்கொள்ளக்கூடாது.

நாமெல்லாம் அரிசி, பருப்பு, பால் என்று சாப்பிடுபவர்கள். கீட்டோ டயட் என்ற பெயரில், திடீரென்று அரிசி, பருப்பு, பால் இவற்றையெல்லாம் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. வெளிநாட்டினர் உணவில் இறைச்சி உணவுகளுக்கு அதிக இடம் உண்டு. ஒரு நேர உணவிலேயே மீன், இறைச்சி, இரண்டு வகை காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடுவார்கள். நமக்கு இப்படிச் சாப்பிட்டு பழக்கம் கிடையாது என்பதால் இதைச் சரியாகப் பின்பற்ற முடியாது. விளைவு, நீங்கள் விரும்பிய எடையிழப்பு நடக்கவே நடக்காது.

தவிர, உங்கள் கல்லீரலும் பித்தப்பையும் நீங்கள் உட்கொள்ளும் கொழுப்பு உணவுகளைச் செரிமானம் செய்ய முடியாமல் திணறும். இந்த டயட்டில் தண்ணீர் மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் நீர்ச்சத்து குறைவால் நம் உடலில் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. உங்கள் கல்லீரல் பலவீனமாக இருந்தாலோ அல்லது பித்தப்பையில் கற்கள் இருந்தாலோ இந்த டயட் அந்தப் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்தி விடும்.

6. வீகன் டயட் (The Vegan Diet)

The Vegan Diet

இந்த டயட்டில் அசைவ உணவுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும். கூடவே, விலங்குகளிடமிருந்து பெறப்படுவதால், பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றுக்கும் இந்த டயட்டில் இடம் கிடையாது. தேனீக்களிடமிருந்து பெறப்படுவதால் தேனும் சாப்பிடக்கூடாது.

வீகனை பொறுத்தவரைப் பால் கிடையாது, இறைச்சி கிடையாது, முட்டையும் கிடையாது என்பதால், புரதச்சத்துக்குப் பருப்பு வகைகள், பயறு வகைகள், முழு தானியங்கள். கொட்டை வகைகளை (நட்ஸ்) உணவில் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய உணவு முறையே இட்லி தோசையில் உளுந்து, பொங்கலில் பாசிப்பருப்பு என்று இருப்பதால், புரதச்சத்தை ஈடுகட்டி விடலாம். அரிசிக்குப் பதில் பாரம்பர்ய அரிசி, சிறுதானியம் என்று எடுத்துக்கொண்டால் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கும். பால் இல்லாமல் இருப்பது கடினம் என்பவர்கள் தேங்காய்ப்பால், பாதாம் பால், வேர்க்கடலைப்பால், சோயா பால் போன்றவற்றை மாற்றாகப் பயன்படுத்தலாம். இந்தப் பாலில் தயிரும் தயாரிக்கலாம். பால் சேர்த்த டீ, காபிக்குப் பதிலாக மூலிகை டீ அருந்தலாம். இறைச்சிக்குப் பதிலாகக் காளான், சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோஃபு எடுத்துக்கொள்ளலாம். சிலர் வீகனுடன் சேர்த்து லோ கார்ப் டயட்டும் ( Vegan plus low carbs Diet ) எடுக்கிறார்கள். அசைவ உணவுகளையும் தவிர்த்து, மாவுச்சத்து உணவுகளையும் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் நிறையக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் பி 12 அசைவ உணவுகளில்தான் இருக்கிறது. அதை முற்றிலுமாக தவிர்ப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வைட்டமின் பி 12 குறைபாடு வரலாம். பி 12 குறைவது நரம்பு மண்டலத்துக்கு நல்லதல்ல. வீகன் அல்லது வீகன் ப்ளஸ் லோ கார்ப் டயட்டை ஃபாலோ செய்ய விரும்புபவர்கள், அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் தங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

7. ரெயின்போ டயட் ( Rainbow diet)

Rainbow diet

பலவித நிறங்களில் இருக்கிற காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளும் டயட் இது. இதை தனியொரு டயட்டாக பார்க்க முடியாது. வழக்கமாகச் சாப்பிடும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் ரெயின்போ டயட்டையும் சேர்த்து எடுத்தால், நார்ச்சத்து நிறைய கிடைக்கும். ஆய்வுகளின்படி புற்றுநோய் வருவதையும் தவிர்க்க முடியும். இது ஆரோக்கியமானது, எல்லோருக்கும் அவசியமானதும்கூட. நீரிழிவு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்பெற்று கொய்யா, கிவி, டிராகன் ஃப்ரூட், க்ரீன் ஆப்பிள், முழுதாகப் பழுக்காத பப்பாளி போன்றவற்றை ரெயின்போ டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

8. லிக்விட் டயட் (Liquid diet)

Liquid diet

தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டும் அருந்திவிட்டு, உணவு சாப்பிடாமல் இருப்பது உண்ணாவிரதம். இதை டயட் என்று சொல்ல முடியாது. இந்த விரதத்தை அதிகபட்சமாக 2 நாள் இருக்கலாம். அதுவுமே, இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்கக்கூடிய அளவுக்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்; உணவுக்குப் பிறகு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால் மட்டுமே இதை கடைபிடிக்கலாம். முக்கியமாக, ஹீமோகுளோபின் அளவு 10 g/dL-க்கு கீழ் இருந்தாலோ, ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தாலோ உண்ணாவிரதமே இருக்கக்கூடாது.

யூடியூப் பார்த்து தண்ணீர் மட்டுமே அருந்தி விரதமிருந்த ஓர் இளம்பெண், சமீபத்தில் மரணமடைந்தது எல்லோருக்குமே தெரியும். அந்தப் பெண்ணுக்கு இருந்தது அனோரெக்ஸியா நெர்வோசா (anorexia nervosa) என்கிற உளவியல் பிரச்னை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் 'குண்டாகி விடுவோமோ' என்கிற பயத்தில் சாப்பிடாமலே இருப்பார்கள். உருவக் கேலி போன்ற ஏதோவொரு காரணத்தால்தான் அந்தப்பெண் வாட்டர் ஃபாஸ்ட்டிங் இருந்திருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை தந்திருந்தால் அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றியிருக்கலாம் என்பதே உண்மை.

சிலர் பழச்சாறு மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள். வைட்டமின்கள், தாது உப்புகள் தவிர, வேறு அடிப்படை சத்துக்கள் இதில் கிடைப்பது கடினம். தண்ணீரோ, பழச்சாறோ ஒருநாள் இருந்தால், ஒரு கிலோ உடல் எடை குறையலாம். அதைத் தவிர்த்து இவற்றில் வேறு நன்மை இல்லை. டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்று லோ கிளைசமிக் பழங்களுடன் கேரட், கீரை போன்றவற்றை சேர்த்து அரைத்து ஜூஸாக பருகலாம். இதுவும் ஒருநாளைக்குத்தான். இதற்கு மேல் பழச்சாறு விரதம் இருந்தால், நீரிழிவு இருப்பவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும், கவனம்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Health: சாலையோரக் கடைகளில் காளான் சாப்பிடப்போறீங்களா? ஊட்டச்சத்து நிபுணர் சொல்றத கேளுங்க!

சாலையோரக் கடைகளில் காளான் உணவுகள் அதிகரித்துவிட்டது. 'ஒரு காளான்' என்றால், எண்ணெய் மிதக்கும் காளான் கிரேவியைச் சூடான தவாவில் போட்டு சூடாக்கி, கொதிக்கக் கொதிக்க பேப்பர் பிளேட்டில் போட்டு மேலே பொரிந்த க... மேலும் பார்க்க

Rabies : 50 நாளில் 77,540 நாய்க்கடி சம்பவங்கள்; 3 ரேபிஸ் மரணங்கள் - என்னதான் தீர்வு? | In-Depth

நாய்க்கடியும், அதனால் வருகிற ரேபிஸ் தொற்றும், அதன் தொடர்ச்சியான மரணங்களும் தமிழக அளவில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் நாய்க்கடிக்காக சிகிச்சைப் பெற்றுகொண்டிருந்த புலம்... மேலும் பார்க்க

'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!

கேரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுக... மேலும் பார்க்க

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடுபாதியாகக்குறைவதாகவும் தெரிவி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவை பார்த்து எடை குறைத்த மகள்: ஆரோக்கியமானதா, அனுமதிக்கலாமா?

Doctor Vikatan: என்னுடைய 13 வயது மகள் மிகவும் அதிக உடல் பருமனுடன் இருந்தாள். கடந்த சில நாள்களாக திடீரென சோஷியல் மீடியாவை பார்த்து அவளாகவே ஏதோ டயட்டை பின்பற்றுகிறாள். அந்த டயட்டை பின்பற்ற ஆரம்பித்த பிற... மேலும் பார்க்க

வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரிழந்த தொழிலாளி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமசந்தர் (வயது 28). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக... மேலும் பார்க்க