MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
Walnuts: மருத்துவ குணங்கள், சத்துகள் மிகுந்தது; உலர்ந்த வால்நட், ஊறவைத்த வால்நட் - எது பெஸ்ட்?
மற்ற நட்ஸ்களைவிட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டது வால்நட். இதை அப்படியே சாப்பிடுவது சிறந்ததா அல்லது ஊறவைத்து சாப்பிடுவது சிறந்ததா என்பதை விளக்குகிறார் உணவியல் நிபுணர் ரேகா எழில்குமார்.

வால்நட்டில் மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்புச்சத்துகள் நிறைந்துள்ளன. 10 கிராம் வால்நட்டில் 65 கலோரி உள்ளது. இவை தவிர, கார்போஹைட்ரேட் - 1.4 கிராம், கொழுப்பு - 6.5 கிராம், புரதம் - 1.5 கிராம் உள்ளன.
* நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள், அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வால்நட்டில் உள்ளன. இது, நம் உடலில் நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கும்.
* வால்நட்டில் புரோட்டின், பயோட்டின் (biotin), வைட்டமின் E போன்ற வைட்டமின்கள், மெக்னீசியம், செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற தனித்துவமான ஊட்டச்சத்துகள் இருப்பதால், அது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், இதய செயல்பாட்டை அதிகரிக்கும்.
* வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் பார்கின்சன் நோய், அல்சைமர் நோய் ஏற்படுவதை தடுக்கும்.

* நோயெதிர்ப்பு, வயதாவதை தள்ளிப்போடுதல், கூந்தல் ஆரோக்கியம் போன்றவற்றிலும் உதவுகிறது வால்நட்.
* நீரிழிவு நோய் உள்ளவர்களும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதை சாப்பிடலாம். ஆனால், அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பாலிபீனால் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.
* மெலடோனின் இருப்பதால் தூக்கம் நன்றாக வருவதற்கும் உதவும்.
* வளரும் குழந்தைகளுக்கு தினமும் 5 வால்நட் தருவது அவர்கள் மூளைக்கு நல்லது. இதில் அலர்ஜி ஏற்படுத்தும் பண்புகளும் குறைவாகவே உள்ளது என்பது கூடுதல் நன்மை.
வால்நட் பருப்புகளை பல மணி நேரங்கள் தண்ணீரில் ஊற வைப்பதால், அதனை செரிமானம் செய்வது நமக்கு எளிதாகிறது. மேலும் ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கின்றன. வால்நட்டை ஊற வைப்பதால், அதிலுள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு சத்துக்களான டானின்கள் மற்றும் பைடிக் அமிலத்தின் அளவு குறையும். இதனால், அதில் இருக்கிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை மிக எளிதாக நம்முடைய உடல் உறிஞ்ச முடியும். தவிர, ஊற வைப்பதால் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களும் ஆக்டிவேட் செய்யப்படுகிறது.

வால்நட்டில் இருக்கிற பெரும்பாலான ஊட்டச்சத்துகள் தக்க வைக்கப்படும். என்றாலும் சிலருக்கு செரிமானப் பிரச்னை வரும். வால்நட் பருப்பில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு சத்துக்களான டானின்கள் மற்றும் பைடிக் அமிலம் காரணமாக ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் பிரச்னை ஏற்படும். இது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடலாம். என்றாலும், வால்நட் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது'' என்கிறார் உணவியல் நிபுணர் ரேகா எழில்குமார்.