World Chess Championship: `சமநிலையில் சாம்பியன்ஷிப்; இன்று இறுதிச்சுற்று!' - சாதிப்பாரா குகேஷ்?
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13 சுற்று ஆட்டங்கள் முடிந்திருக்கிறது. இந்நிலையில், குகேஷூம் டிங் லிரனும் தலா 6.5 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளனர். உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கப் போகும் 14 -வது மற்றும் இறுதிச்சுற்று இன்று நடக்கவிருக்கிறது.
14 சுற்றுகளைக் கொண்ட இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் சீன வீரரான டிங் லிரனே வென்றிருந்தார். இரண்டாவது சுற்று டிரா ஆன நிலையில் மூன்றாவது சுற்றை குகேஷ் வென்றிருந்தார். இதன்மூலம் தலா 1.5 புள்ளிகளோடு போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தனர். அடுத்த 7 சுற்றுகளையுமே இருவரும் தொடர்ந்து டிரா செய்தனர். தொடர்ச்சியான டிராக்களுக்கு பிறகு 11 வது சுற்றில் குகேஷ் வென்றார். இதன் மூலம் 6-5 என குகேஷ் முன்னிலை பெற்றார். உடனே 12 வது சுற்றில் டிங் லிரன் வென்றார். இதன்மூலம் ஆட்டம் 6-6 என போட்டி சமநிலைக்கு சென்றது. இந்நிலையில் நேற்று 13 வது சுற்று ஆட்டம் நடந்திருந்தது.
குகேஷ் வெள்ளைக் காய்களுடன் களமிறங்கியிருந்தார். 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆட்டம் நடந்திருந்தது. வெற்றிக்காக இருவரும் போராடிய நிலையில் 69 நகர்வுகளுக்குப் பிறகு போட்டியை டிராவில் முடித்துக் கொண்டனர். இதன்மூலம் தலா 6.5 புள்ளிகளோடு போட்டியை சமநிலையிலேயே நீட்டிக்க வைத்தனர்.
இந்நிலையில், இன்று 14 வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று நடக்கவிருக்கிறது. இந்த ஆட்டத்தை வெல்லும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். இந்த சுற்றும் டிரா ஆகும்பட்சத்தில் இருவரும் 7 புள்ளிகளில் இருப்பார்கள். அப்படி ஒரு சூழல் உண்டாகும்பட்சத்தில் நாளை குறுகிய வடிவிலான டை பிரேக்கர் சுற்றுகள் நடத்தப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.