தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!
WPL: `RCB-யில் ஒரு தோனி' - குஜராத் ஜெயன்ட்ஸ்-ஐ புரட்டியெடுத்த ரிச்சா கோஷ்... குவியும் பாராட்டுகள்!
மகளிர் பிரீமியர் லீக் (WPL) மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (RCB) அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் 79 ரன்களும், பெத் மூனி 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு அணியில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர், 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா இரண்டாவது ஓவரிலேயே 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியைத் தந்தார். அதே ஓவரில் மேலும் ஒரு விக்கெட் விழுந்தது. அதையடுத்து, எலிஸ் பெர்ரி அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டத்தின் 13-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அணியின் வெற்றிக்கு 46 பந்துகளில் 93 ரன்கள் தேவை என்ற அந்த சமயத்தில், ரிச்சா கோஷ் - கனிகா அகுஜா கூட்டணி குஜராத் வீராங்கனைகளை பவுண்டரி லைன்களுக்கு ஓடவைத்துக் கொண்டே இருந்தனர். இருவரின் அதிரடியில் 9 பந்துகள் மீதம் வைத்து 18.3 ஓவர்களிலேயே 202 ரன்கள் என்ற இலக்கை அடைந்து வெற்றிபெற்றது பெங்களூரு அணி.

ரிச்சா கோஷ் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர் என 64 ரன்களும், கனிகா அகுஜா 13 பந்துகளில் 30 ரன்களும் அடித்து மிரட்டினர். ஆட்ட நாயகி விருது வென்ற ரிச்சா கோஷ், தன் இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்பியதாகவும், இலக்கை வெற்றிகரமாக அடைவோம் என்ற நம்பிக்கை இருந்ததாகவும் போட்டிக்குப் பின்னர் தெரிவித்தார். மறுபக்கம், இந்த வெற்றியின் மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்திருக்கிறது.
Richa Ghosh is the mirror image of legend MS Dhoni https://t.co/15mzyKFBv6
— MOHAMMADUL ISLAM (@786MOHAMMADUL) February 14, 2025
இந்த நிலையில், ரிச்சா கோஷை தோனியின் மறு உருவம் எனப் பலரும் கொண்டாடி வருகின்றனர். இருவருமே விக்கெட் கீப்பர் பேட்டர்கள் என்பதால் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தோனியுடன் ரிச்சா கோஷை ஒப்பிட்டுக் கொண்டாடி வருகின்றனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play