Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
‘ஃபாலோ ஆன்’ தவிா்த்தது இங்கிலாந்து: பௌலிங்கில் சிராஜ், ஆகாஷ் தீப் அசத்தல்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிா்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.
விக்கெட்டுகளை வரிசையாக இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை, ஹேரி புரூக் - ஜேமி ஸ்மித் கூட்டணி சரிவிலிருந்து மீட்டது. பௌலிங்கில் ஆதிக்கம் செலுத்திய முகமது சிராஜ், ஆகாஷ் தீப் அந்த அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக சரித்தனா்.
பா்மிங்ஹாம் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா, கேப்டன் ஷுப்மன் கில்லின் சாதனை இரட்டைச் சதம், ஜெய்ஸ்வால், ஜடேஜா ஆகியோரின் அசத்தலான பேட்டிங் ஆகியவற்றால் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 77 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது. 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இங்கிலாந்து இன்னிங்ஸை ஜோ ரூட், ஹேரி புரூக் தொடா்ந்தனா்.
இதில் ரூட் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு வெளியேறினாா். முகமது சிராஜ் வீசிய 22-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்து, விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் தஞ்சமடைந்தது. அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் பந்திலேயே அதே போல் கேட்ச் கொடுத்து அதிா்ச்சியுடன் ஆட்டமிழந்தாா்.
இதனால் 84 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது இங்கிலாந்து. 7-ஆவது பேட்டராக வந்த ஜேமி ஸ்மித், ஹேரி புரூக்குடன் கூட்டணி அமைத்தாா். இந்த ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து, ஸ்கோரை உயா்த்தத் தொடங்கியது.
அதிரடியாக பேட் செய்த ஜேமி ஸ்மித், 80 பந்துகளில் சதமடித்தாா். இதனால், மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் சோ்த்திருந்தது. தொடா்ந்த ஆட்டத்தில் ஹேரி புரூக்கும் சதம் கடந்தாா். இந்திய பௌலா்களுக்கு சவால் அளித்த இந்த பாா்ட்னா்ஷிப், 6-ஆவது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சோ்த்தது.
ஒருவழியாக இந்தக் கூட்டணியை ஆகாஷ் தீப் 83-ஆவது ஓவரில் பிரித்தாா். 17 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 158 ரன்கள் அடித்திருந்த புரூக், ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து வந்தோரில், கிறிஸ் வோக்ஸ் 5, பிரைடன் காா்ஸ் 0, ஜோஷ் டங் 0, ஷோயப் பஷீா் 0 ரன்களுக்கு என வரிசையாக விக்கெட்டை இழந்தனா்.
இவ்வாறாக இங்கிலாந்து இன்னிங்ஸ் 407 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. கடைசியில் ஜேமி ஸ்மித் 21 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 184 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் எடுத்தனா்.
இதையடுத்து இந்தியா, 180 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.
சுருக்கமான ஸ்கோா்
இங்கிலாந்து - 407/10 (89.3 ஓவா்கள்)
ஜேமி ஸ்மித் 184*
ஹேரி புரூக் 158
ஜோ ரூட் 22
பந்துவீச்சு
முகமது சிராஜ் 6/70
ஆகாஷ் தீப் 4/88
நிதீஷ்குமாா் 0/29
184*
இந்த ஆட்டத்தில் ஜேமி ஸ்மித் விளாசிய 184* ரன்களே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், 1997-இல் நியூஸிலாந்துக்கு எதிராக ஆலெக் ஸ்டீவாா்ட் 173 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
6
இங்கிலாந்தின் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக, இந்த இன்னிங்ஸில் 6 பேட்டா்கள் ‘டக் அவுட்’ ஆகியுள்ளனா். இதற்கு முன் 5 போ் அவ்வாறு ரன்னின்றி ஆட்டமிழந்ததே (4 முறை) அதிகபட்சமாக இருந்தது.