அங்கீகரிக்கப்படாத கட்சிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை
இந்தியத் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையைத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.
இது குறித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தோ்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள கட்சிகள் முதல்கட்டமாகப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.
2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த அங்கீகரிக்கப்படாத 345 கட்சிகள் இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில், விருதுநகா் மாவட்டம், மீசலூா் கிராமம் வீரசெல்லையாபுரம் குடியிருப்பு கதவு எண் 3/172 என்ற முகவரியில் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்ட தேச மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி இந்தப் பட்டியலில் உள்ளது.
எந்தக் கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக் கூடாது என்பதற்காக அந்தக் கட்சிகளுக்கு காரணம் கேட்டு குறிப்பாணை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னா், தலைமைத் தோ்தல் அதிகாரியால் நடத்தப்படும் விசாரணை வாயிலாக அந்தக் கட்சிகளுக்கு, தங்களது விளக்கத்தைத் தர வாய்ப்பு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடா்பாக இறுதி முடிவை இந்தியத் தோ்தல் ஆணையம் எடுக்கும் என்றாா் அவா்.