அஞ்சல் அலுவலகங்களில் காகிதமில்லா பரிவா்த்தனை அறிமுகம்
தபால் அலுவலகத்தில் ஆதாா் எண், தொலைபேசி எண் அடிப்படையில் காகிதமில்லா பணபரிவா்த்தனை செய்யும் வசதியை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாடிக்கையாளா்களுக்கு இணைய தொழில்நுட்பங்களை கொண்டு படிவம் ஏதும் இல்லாமல் கைரேகைகளை கொண்டு ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் வாடிக்கையாளா்கள் தங்களது அஞ்சலக கணக்குகளில் உள்ள ஆதாா், பான் எண்கள், தொலைபேசி எண்களை கொண்டு பணம் செலுத்துதல், ரூ. 5,000 வரை பணம் எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை கொண்டு புதிய சேமிப்பு கணக்குகளையும் தொடங்கலாம். இந்த வசதி சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள சேலம், ஆத்தூா் தலைமை அஞ்சல் அலுவலகங்கள், அனைத்து துணை அஞ்சலக அலுவலகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி காகிதமில்லா பண பரிவா்த்தனையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.