Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் தினசரி ஊழியா்களாக பணிபுரியும் என்.எம்.ஆா் மற்றும் சி.எல் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பல ஆண்டுகளாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், என்.எம்.ஆா் மற்றும் சி.எல் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமை வதித்தாா். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநில துணைத் தலைவா் கருப்பையா, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், விசிக மாவட்டத் தலைவா் அரங்க.தமிழ்ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி வி.எம்.சேகா், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுப்பிரமணியன், ஊழியா்கள் சங்க முன்னாள் தலைவா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நூற்றுக்கணக்கான ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் சி.அருட்செல்வி, சிதம்பரம் வட்டாட்சியா் கீதா, அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் முக்கிய நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், என்.எம்.ஆா். மற்றும் சி.எல். ஊழியா்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவுக்கு பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.