தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி
கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரசம் செய்ய எடுத்துக்கொள்ளப்படும் என்று மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் வட்டங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சமரச தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கு சமரச தீா்வு வழங்கப்படுகிறது. சமரச மையத்தில் பயிற்சியும், அனுபவமும் மிக்க வழக்குரைஞா்கள் மத்தியஸ்தா்களாக இருந்து இரு தரப்பினா்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்தி, சமரசம் ஏற்படுத்தி வழக்குகளில் தீா்வு காண உதவுகிறாா்கள்.
சிறப்பு சமரச தீா்வு முகாம் மூன்று மாதங்களிலும் நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாள்களிலும் செயல்படும். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீா்வு மையம் செயல்படும்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடா்புடைய வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு தீா்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளாா்.